மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வத்தான் ஆகாதெனினும் - மாற்றும் திறனாளி!

தெய்வத்தான் ஆகாதெனினும் - மாற்றும் திறனாளி!
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வத்தான் ஆகாதெனினும் - மாற்றும் திறனாளி!

தமிழ்ப்பிரபா - படம்: பா.காளிமுத்து

“We are not helping, we sharing love!’’ எனச் சொல்லும் ராகவி, பிறந்த மூன்று மாதங்களிலேயே போலியோ தாக்குதலால் கால்களின் பலத்தை முற்றிலும் இழந்தவர். அம்மாவின் உதவியோடு பள்ளிக்குச் சென்றவருக்கு நண்பர்கள் காட்டிய அன்பு, வாழ்வின் மீதான முதல் நம்பிக்கையை விதைத்தது. ``ஸ்கூல்ல எல்லோரும் சுற்றுலா போகும்போது, என் ஃப்ரெண்ட்ஸ் மட்டும் போக மாட்டாங்க. எனக்கு எங்க போக முடியுமோ அங்கே என்னை கூட்டிட்டுப் போயி எல்லோரும் சந்தோஷமா இருப்போம்” எனச் சிரிக்கும் ராகவியின் கல்லூரி நண்பர்களும் அவருக்கு மிகப்பெரிய உறுதுணை. இன்ஜினீயரிங் முடித்து, MBA (HR) முடித்தார். அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் Diploma in Training and Development படித்ததுடன் எல்லாவற்றிலும் க்ளாஸ் டாப்பராக வந்ததுதான் ஹைலைட்!

தெய்வத்தான் ஆகாதெனினும் - மாற்றும் திறனாளி!

சென்னை டைட்டல் பார்க்கில் ஒரு நிறுவனத்தில் ஹெச்.ஆர் ஆக வேலை கிடைத்தபிறகு, தன் நீண்டநாள் நண்பன் செந்திலைத் திருமணம் செய்துகொண்டார் ராகவி. ``எனக்கு வீட்ல மாப்பிளை பார்க்கிறாங்கன்னு தெரிஞ்சதும், செந்தில் எங்கிட்ட நார்மலாவே பேசலை. பதற்றப்பட ஆரம்பிச்சுட்டார். அப்புறமா ஒருநாள் அவர் புரபோஸ் பண்ண, நான் அதை எங்க வீட்ல சொல்ல, எல்லாம் நடந்து இப்போ ரெண்டு ஆண் பிள்ளைங்க” என்று வெட்கப்படுகிறார் ராகவி.

``பசங்க பிறந்தபிறகு என்னால வேலைக்குப் போக முடியலை. வீட்ல இருந்தே என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ, எங்கிட்ட இருக்கிற என்னைப்போலவே இருக்கிற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ முடியுமானு பார்த்து ஒரு விஷயத்தை ஆரம்பிச்சேன்” என்றவர் செய்துகொண்டிருப்பவை சாதாரணமான காரியங்கள் அல்ல.

ஐ.டி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த அளவுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறார்கள் என ஆராய்ச்சி செய்து, இரு தரப்பினரையும் இணைக்கும்விதமாக மாற்றுத்திறனாளிகளுக்கான `Job Fair’ இரண்டுமுறை நடத்தி, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை கிடைக்கக் காரணமாய் இருந்திருக்கிறார். அவர்களை ஊக்கப்படுத்தும்விதமாகத் தொடர்ந்து Events, Job fair, life Skills training என மாற்றுத்திறனாளிகளுக்கான ராகவியின் பயணம் தொடர்கிறது. மேலும், தன் கார்ப்பரேட் நண்பர்களிடம் பண உதவி பெற்று, தன்னைத் தேடிவரும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையானவற்றை இலவசமாகச் செய்துவருகிறார்.

``பண உதவி, பொருளுதவிக்கு மேல், இந்த சொசைட்டி எங்களை சகமனுஷங்களா அணுகணும் என்பதுதான் எங்களின் அடிப்படைத் தேவை. மற்ற எல்லோரையும்விட ஒரு மாற்றுத்திறனாளிக்கு மனஉளைச்சலும் தயக்கமும் எப்பவும் இருக்கும். அதைப் புரிஞ்சு நடந்துக்கணும். அதுவும் ஒரு பெண்ணா நான் சந்திச்சுட்டு வர்ற சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதுக்காக நானும் வீட்ல உட்கார்ந்துடணுமா என்ன?” என்ற ராகவியின் குரலில் வெளிப்பட்ட உறுதி வலிமையானது.