மதுரையில் பன்றிக்காய்ச்சலுக்கு 8 பேர் பலியாகியுள்ளனர். தீவிர நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஹெச் 1 என் 1 (H1N1) இன்ஃப்ளுயன்சா வைரஸ் தொற்று காரணமாக வரக்கூடியது பன்றிக்காய்ச்சல். காற்று, சளி உள்ளிட்டவற்றால் எளிதில் பரவக்கூடியது. தற்போது தமிழகத்தில் இந்தக் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். மதுரையை பொறுத்தவரையில் கடந்தாண்டு டெங்கு காய்ச்சல் அதிக அளவு இருந்தது. இந்தாண்டு பன்றிக்காய்ச்சலின் பாதிப்பும் அதிகரித்துவருகிறது.
இந்த நிலையில், மதுரை மேலூரைச் சேர்ந்த அல்லி மலர் என்ற பெண் மற்றும் மதுரை சுந்தர்ராஜன்பட்டியைச் சேர்ந்த மந்திரமூர்த்தி ஆகியோர் பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு இருவரும் உயிரிழந்தனர். தற்போதுவரை பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலுக்கு 106 பேரும், பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் 6 பேரும், டெங்கு காய்ச்சலால் 3 நபரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ``மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு கூடுதல் கவனம் செலுத்தி தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். மேலும், மதுரையில் சுகாதாரமற்ற இடங்களை உடனடியாக ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.