
சுமதி மோகனப் பிரபு
பங்களாதேஷ் என்றாலே பண்டிகைக் காலங்களில் ரயில் வண்டியின் மேற்கூரையிலும் இன்ஜின் முன்பும் ஏராளமானவர்கள் பயணிக்கும் ஏழை நாடு என்கிற எண்ணம்தான் நமக்கு வரும். பங்களாதேஷ் பற்றிய நமது இந்த எண்ணம் நேற்று வரை சரியாக இருந்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு அது பெரிய அளவில் மாறியிருக்கிறது. நம் நாட்டிலிருந்து பிரிந்து சென்ற பங்களாதேஷ், இன்றைக்குக் ‘கிழக்கின் அதிசயம்’ என கோல்ட் மேன் சாக்ஸ் நிறுவனத்தினால் புகழப்படுவதுடன், நமக்கே கடும்போட்டியைத் தரும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது.

அதிகரித்த ஆயுள்காலம்
பங்களாதேஷ் குடிமகனின் சராசரி ஆயுள் காலம் 72 ஆண்டுகள். இந்தியாவில் இது 68-ஆகவும், பாகிஸ்தானில் 66 ஆண்டுகளாகவும் இருக்கின்றன.
ஏற்றுமதியில் கடும்போட்டி
பங்களாதேஷின் மொத்தப் பொருளாதார உற்பத்தியில் ஏற்றுமதியின் பங்கு 15%. இந்தியாவில் இது 12% மட்டுமே. ஜவுளி உற்பத்தியில் இந்தியாவில் இன்றைக்கு மிகப் பெரிய போட்டியாக இருக்கிறது பங்களாதேஷ். மற்ற துறைகளிலும் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளுமளவுக்கு வேகமாக முன்னேறி வருகிறது.
பாலினப் பாகுபாடு
பெண்களுக்கெதிராக ஆசிட் வீசுவதைத் தடை செய்யும் சட்டமானது பங்களாதேஷில் 2002-லேயே கொண்டுவரப்பட்டது. பின்னர், ஆசிட் வீசும் குற்றத்திற்கு மரண தண்டனை என சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்தியா வில் ஆசிட் வீசுவது குற்றம் என 2013-ல்தான் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
வேலைக்குச் செல்லும் பெண்கள்
பங்களாதேஷின் ஒட்டுமொத்தத் தொழிலாளர் களில் பெண்களின் பங்கு பங்களாதேஷில் 43%. இந்தியாவில் இது 27% மட்டுமே. வேலைக்குச் செல்லும் பெண்களின் சதவிகிதத்தை 2026-க்குள் 86 சதவிகிதமாக உயர்த்தத் திட்டமிட்டிருக்கும் பங்களாதேஷ் அரசு, பெண்களின் பங்கு பொருளா தாரத்தில் அதிகரிப்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தியை 1.8% வரை உயர்த்தும் என்று நம்புகிறது.
அடிப்படைக் கல்வி மற்றும் சுகாதாரம்
உலகின் மிகப் பெரிய அரசு சார்பற்ற வளர்ச்சி நிறுவனமாகக் கருதப்படும் பிராக் (BRAC- Bangladesh Resources Across Communities) நிறுவனத்தின் புதுமையான முறைசாராக் கல்வி முறையின் மூலம் குறைந்த செலவில் அடிப்படை கல்வியை அளித்து வருகிறது. பள்ளிகளுக்கான மாணவர் வருகையை அதிகரிக்க முடிந்தது. பிராக் கல்விக்கூடங்கள், பெண் குழந்தைகளுக்கான தனிக்கழிவறைகளைக் கொண்டிருந்ததுடன், இங்கு பெண் குழந்தைகளுக்காக இரண்டு இலவசச் சீருடைகளும் வழங்கப்பட்டன. பங்களா தேஷின் எழுத்தறிவு விகிதம் 72 சதவிகிதமாக உயர இந்தத் திட்டம் மிகவும் உதவியாக இருந்துள்ளது.

கல்வியறிவு, மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கும் உதவும் என்பதன் அடிப்படையில், பங்களா தேஷின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தற்போது 1.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்தியாவில் இது இன்னும்கூட 1.2 சதவிகிதமாகவே உள்ளது.
எளியோருக்கான வங்கிக் கட்டமைப்பு
500, 1000 ரூபாய்களை ஒழிக்காமலே பங்களா தேஷில் ஏழை எளியோரிடம் வங்கி தொழில் நுட்பத்தைக் கொண்டு செல்ல முடிந்துள்ளது. வங்கிகளின் எல்லைக்குள் வராத ஏராளமான எளியோரிடம் பிகாஷ் (BKash) என்னும் நிதிச் சேவை மூலம் மொபைல்போனில் வங்கிப் பணப் பரிமாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்று மொபைல் வங்கிப் பணப்பரிமாற்றங்கள் நடைபெறும் முதன்மை நாடுகளில் பங்களாதேஷ் முக்கிய இடத்தில் உள்ளது. 2017-ம் ஆண்டில் மட்டும் மொத்த வங்கிப் பரிமாற்றங்களில் 34.1% டிஜிட்டல் முறையில் நடந்துள்ளன.
பக்கத்து நாடான பங்களாதேஷிடமிருந்து பல்வேறு நாம் கற்றுக்கொண்டு அவற்றை நடை முறைப்படுத்தினால், நாமும் வளர்ச்சி பெறுவது நிச்சயம்!