பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

தொழில் முடக்கம் : வீழ்ச்சிக்கான விதை!

தொழில் முடக்கம் : வீழ்ச்சிக்கான விதை!
பிரீமியம் ஸ்டோரி
News
தொழில் முடக்கம் : வீழ்ச்சிக்கான விதை!

தொழில் முடக்கம் : வீழ்ச்சிக்கான விதை!

‘கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் சுமார் ஐம்பதாயிரம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இதனால்  ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்திருக்கிறார்கள்.’  - இப்படி ஓர் அறிவிப்பை, ‘கொள்கை விளக்கக் குறிப்பு’ என்ற பெயரில் சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறது தமிழக அரசு.

இப்போது மீதமிருக்கும் சுமார் 2,18,000  சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளில், கணிசமான தொழிற்சாலைகள் நெருக்கடியான நிலையில்தான் இருக்கின்றன என்பதை அரசு சொல்லாமல் விட்டிருக்கிறது. ஒரே ஆண்டில் ஐம்பதாயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன என்றால், மீதமிருக்கும் தொழிற்சாலைகளின் நிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

தொழில் முடக்கம் : வீழ்ச்சிக்கான விதை!


 சென்னை அம்பத்தூரில் உள்ள தொழிற்சாலைகளை எடுத்துக்கொண்டால், சென்னை நகரை மூழ்கடித்த பெருமழை வெள்ளம், அதற்கு அடுத்த ஆண்டு வீசிய வர்தா புயல் ஆகிய இரண்டும் இந்தத் தொழிற்சாலைகளில் இருந்த இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருள்களின்மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.  இன்னொருபுறம், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி, பணமதிப்பு இழப்பு நடவடிக்கை ஆகியவையும் தொழில் பாதிப்புகளுக்கான காரணங்கள். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் நெருக்கடிகளைச் சந்திக்கும்போது கைகொடுத்துத் தூக்கிவிட வேண்டிய மாநில அரசு பாராமுகமாக இருந்ததும் இந்த மாபெரும் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம்.

சிறிய தொழிற்சாலைகளுக்கு மட்டும்தான் இந்த நிலை என்றில்லை, ரூ.11,000 கோடி முதலீட்டிலான கியா கார் தொழிற்சாலை, ரூ.1600 கோடி முதலீட்டிலான ஹீரோ மோட்டோகாப் தொடங்கி  ரூ.1800 கோடி முதலீட்டிலான அப்போலோ டயர்ஸ், ஆலை, அசோக் லேலண்ட், பாரத் போர்ஜ் என்று வரிசையாகப் பல தொழிற்சாலைகளைத் தமிழகம் சமீப காலத்தில் இழந்திருக்கிறது. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகியவற்றில் குவியும் முதலீடுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்திற்கு வந்த முதலீடு  2016-ல் 4,793 கோடி ரூபாயிலிருந்து, 2017-ல் வெறும் ரூ.1574 கோடி ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

இந்த லட்சணத்தில் தனது இமேஜை உயர்த்திக்கொள்ளத் தமிழக அரசு, வருகின்ற ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தப்போகிறதாம். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட முதலீட்டாளர் மாநாட்டின்போது 2,42,000 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துவிட்டதாகத் தமிழ்நாடு அரசு தம்பட்டம் அடித்துக்கொண்டது. ஆனால், யதார்த்தத்தில் தமிழகத்துக்கு வந்த முதலீடு என்பது  அறிவிக்கப்பட்ட தொகையில் இரண்டு சதவிகிதமோ மூன்று சதவிகிதமோதான்.

லஞ்சம், ஊழல், தமிழக அரசின் நிலையற்ற தன்மை, தொழில் முனைவோர்களை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் இல்லாமை எனப் பல காரணங்கள் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை அழித்துக்கொண்டிருக்கின்றன. ‘தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவோம்’ என்று அடிக்கடி ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடிப்பது ‘வறுமையிலும் பற்றாக் குறையிலுமா?’ என்ற கேள்வியை எழுப்புகிறது.