பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“இன்னமும் இருக்கிறது வலி!”

“இன்னமும் இருக்கிறது வலி!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இன்னமும் இருக்கிறது வலி!”

சு.சூர்யா கோமதி - படங்கள்: தே.சிலம்பரசன் - ஓவியம்: பாரதிராஜா

‘`இந்த  காக்கி உடையை முதன்முதல்ல போட்டப்போ எவ்வளவு பெருமையா உணர்ந்தேனோ, அதே போன்றதோர் உணர்வைத்தான் அன்னிக்கு ராஜீவ் காந்திக்குப் பக்கத்தில் பாதுகாப்புக்கு நின்னுட்டிருந்தப்பவும் உணர்ந்தேன். பிரசாரத்தில் கலந்துகொள்ள வந்த ராஜீவ் காந்தி வாகனத்தைவிட்டுக் கீழே இறங்கி வந்தார். மக்கள் கூட்டம் அலைமோதிக்கிட்டு இருந்துச்சு. சரியாக 10 மணிக்கு ராஜீவ் காந்தி மக்களைச் சந்தித்துப் பேசிட்டு இருந்தார். திடீர்னு ஒரு சத்தம். அது என்ன சத்தம்னு யூகிக்கிறதுக்கு முன்னாடியே எல்லாம் முடிஞ்சுடுச்சு’’ - மீள முடியாத சோகத்தால் குரல் மெலிகிறது அனுசியா டெய்சி ஏர்னஸ்ட்டுக்கு.

“இன்னமும் இருக்கிறது வலி!”

ராஜீவ் காந்தி கொலையின்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர் அனுசியா. குண்டு வெடிப்பில், ராஜீவின் அருகில் நின்றிருந்த அனுசியாவின் உடலையும் பிய்த்துப் பாய்ந்தன வெடிகுண்டுத் துகள்கள். இடதுகை விரல்கள் இழப்பு, இடது மார்பில் துளைத்த வெடிகுண்டுத் துகள்கள் மற்றும் கருகிய கால்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அனுசியா. அடுத்தடுத்த அறுவைச் சிகிச்சைகளின் மூலம் அவரின் உடலைத் துளைத்திருந்த வெடிகுண்டுத் துகள்களில் பாதியை வெளியே எடுத்தாலும், எடுக்க முடியாத எச்சங்கள் இன்றும் அவரின் இடது கண், தலை, இடது மார்பு உள்ளிட்ட பகுதிகளில் தங்கிவிட்டன. அவை அவ்வப்போது ஏற்படுத்தும் தாங்கமுடியாத வலி, அவர் மறக்க நினைக்கும் சம்பவத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. உடல் காயங்களும், மன அழுத்தங்களும், ‘இனி அனுசியா அவ்வளவுதான்’ என்று அனைவரையும் பரிதாபப்பட வைத்தன. ஆனால், காக்கி உடுப்பின் மீதுள்ள காதலால் அத்தனைத் துயரங்களில் இருந்தும் மீண்டு வந்து காவல்துறையில் இணைந்து பணியாற்றியவர், சமீபத்தில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி, ஓய்வுபெற்றிருக்கிறார்.

இடதுகையில் விரல்கள் இருந்த இடத்தைத் தொட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தபோது, கண்ணீர் அரும்புகிறது அனுசியாவுக்கு. “அன்னைக்கு உடலைத் துளைத்த வெடிகுண்டுத் துகள்களோடவும் வலியோடவும்  நினைவிழந்து கண்களை மூடினப்போ, நான் செத்துட்டேன்னுதான் நினைச்சேன். பிழைச்ச பின்னாடியும், ‘உடம்பே ரணமாகிக்கிடக்கு, இனி எப்படி நீ மறுபடியும் யூனிஃபார்ம் போடுவே?’ன்னு சொந்தக்காரங்க கேட்டாங்க. எனக்கு இழப்பீட்டுத் தொகையா, தமிழக அரசு 5,000 ரூபாய் கொடுத்தது. அதை கொடுக்காமலேயே இருந்திருந்தாகூட நான் சந்தோஷப்பட்டிருப்பேன். இத்தனை உடல் வேதனைகளையும், மன வேதனைகளையும் மீறி நான் மறுபடியும் இந்த காக்கி உடுப்பை நேசிச்சேன். எல்லாம் கடந்துபோகும்னு நான் மீண்டு வர, இவர் எனக்கு உறுதுணையா இருந்தார்’’ என புகைப்படத்தில் இருக்கும், மறைந்த தன் கணவரைக் காட்டுகிறார்.

“இன்னமும் இருக்கிறது வலி!”

“கடலூர் மாவட்டம், மோவூர் கிராமம்தான் என் சொந்த ஊர். ஒருமுறை சென்னைக்குப் போயிட்டு வந்த எங்க மாமா, ‘சென்னையில பொம்பளைப் புள்ளைங்க எல்லாம் போலீஸ்காரங்களா இருக்காங்க’ன்னு சொன்னப்போ, காக்கிச் சட்டை போட்ட அனுசியா சட்டுனு என் மனசுல வந்துபோனா. விளையாட்டுல, எங்க ஊரு ஆம்பளப் புள்ளைகளுக்கு நிகரா நிப்பேன்; பரிசுகளை வாங்கிக் குவிச்சிருக்கேன். உயர்கல்வி முடிச்சதும், எங்கப்பா எவ்வளவோ கண்டிச்சும், காவல்துறையில் சேர விண்ணப்பிச்சேன். என் அண்ணன் எனக்கு உறுதுணையா இருந்து அப்பாவைச் சம்மதிக்க வெச்சார்.  உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு எல்லாம் முடிச்சு, அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கைக்கு வந்தப்போ, அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. எங்க ஊரிலேயே நான்தான் முதல் பெண் போலீஸ். ‘ஏய் அனுசியா... ஆம்பளை மாதிரி குழாய், சட்டை போட்டிருக்கே!’னு ஊரே ஆச்சர்யமா பார்த்துச்சு.

காஞ்சிபுரம் மாவட்டத்தில்தான் முதல்ல சப்-இன்ஸ்பெக்டரா சேர்ந்தேன். வி.ஐ.பி-க்கள் வந்தா பந்தோபஸ்துக்காக எங்களை அனுப்புவாங்க. அப்படி 16 முறை ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக்காகப் போயிருக்கேன். 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி... ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ் காந்தி வர்றார்னு அன்னைக்கு எங்களை அனுப்பி வெச்சாங்க. ஆனா...’’ - சரளமான பேச்சில் இடைவெளி விழுகிறது.

“இன்னமும் இருக்கிறது வலி!”

“மறுநாள் நான் மருத்துவமனையில் கண்விழிச்சப்போ, ராஜீவ் காந்தி இறந்துட்டதா சொன்னாங்க. என்னால தாங்கிக்கவே முடியலை. என் உயிரைக் கொடுத்தாவது அவரைக் காப்பாத்தியிருக்கணும்னு தோணுச்சு. ஆனா, யாரும் எதிர்பார்க்காத துர்சம்பவமாச்சே அது. 27 வருஷம் ஆகிப்போச்சு’’ என்றவர், தன் உணர்ச்சிப் பெருக்கை கட்டுப்படுத்திக்கொண்டு, பேச்சைத் தனது பணி ஓய்வு பற்றித் திருப்பினார்.

“பணியில் இருந்தப்போ, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து நிறைய இடங்களுக்குச் சென்று விழிப்பு உணர்வு ஏற்படுத்தினேன். என் மொத்த சர்வீஸின் மறக்க முடியாத அனுபவமா, தழும்பா, ஆற்றாமையா, ரணமா இருக்கிறது... பறிக்கப்பட்ட ராஜீவின் உயிர். நாங்க நின்ன அந்த இடத்தில், அவர் உடல் பாகங்களைப் பொறுக்கியெடுத்து அவர் குடும்பத்திடம் ஒப்படைச்சாங்க. அந்தச் சம்பவம் ஏற்படுத்திய மன அழுத்தத்தில் இருந்து என்னை மீட்டெடுக்க, யோகா, தியானப் பயிற்சிகள் தேவைப்பட்டன. அதுவே என்னை அதில் பயிற்சியளிக்கும் அளவுக்கு வார்த்தெடுத்திருக்கு. பணி ஓய்வுக்குப் பிறகு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் யோகா பாடப் பிரிவுக்கு கெஸ்ட் லெக்சரராகப் பணியாற்றவிருக்கேன். பெண்கள் கல்லூரிகளில் விழிப்பு உணர்வு நிகழ்வுகளுக்குச் செல்லவும் முடிவெடுத்திருக்கேன். யூனிஃபார்மை கழட்டிட்டாலும், சமூகக் கடமைகள் தொடரும்.’’

வலி மறைத்துப் புன்னகைக்கிறார்.