Published:Updated:

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 3

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 3
பிரீமியம் ஸ்டோரி
News
சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 3

ரீவைண்ட்முகில்

சஹாரா மரம்..!

ஹாரா பாலைவனத்தின் ஒரு பகுதி நைஜர் தேசத்திலும் அமைந்துள்ளது. அங்கே டெனெரெ (Tenere) என்ற பகுதியில் பாலைவனத்தின் நடுவே தனியாக ஒரே ஒரு மரம் இருந்தது. அதன் வயது நூறாண்டுகளுக்கும் மேல். சுமார் நானூறு கி.மீ தொலைவுக்குச் சுற்றி வேறு எந்த மரங்களும் இல்லாத நிலையில் அந்த ஒரே ஒரு மரம் மட்டும் முக்கியமான லேண்ட்மார்க்காக இருந்தது. காய்ந்து போன மரமென்றாலும்,  சஹாரா பாலைவனத்தைக் கடந்து செல்பவர்களுக்கு உயிர்ப்பான அடையாளமாகத் திகழ்ந்தது.

1973-ல் ஒரு டிரக் அங்கே வந்தது. ஓட்டுநர் மது அருந்தியிருந்தார். அவ்வளவு இடம் இருந்தும் நேராக அந்த மரத்தின் மீது டிரக்கை ஏற்றினார். உடைந்து போனது மரம்.

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 3

இப்போது அங்கே நியாமே மியூசியத்தில் அந்த மரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. டெனெரெ மரம் இருந்த இடத்தில் ஓர் உலோகச் சின்னம் நிறுவப்பட்டுள்ளது.

வெண்ணை வியாபாரி..!

அன்றைக்கு இந்தியாவின் மிகப்பெரிய சமஸ்தானங்களில் ஒன்றாக இருந்தது ஹைதராபாத். 1911-ல் அதன் நிஜாமாகப் பதவியில் அமர்ந்தவர் ஒஸ்மான் அலி கான். மிக பிரமாண்டமான அரண்மனை. ஆயிரக்கணக்கான வேலைக்காரர்கள். செல்வத்துக்குப் பஞ்சமே இல்லை. எவ்வளவுதான் ஆடம்பரமாகச் செலவு செய்தாலும் பல தலைமுறைக்கு காலாட்டிக் கொண்டே வயிறு நிறையச் சாப்பிடலாம். இருந்தாலும் நிஜாம் ஒஸ்மான் உலகின் நம்பர் ஒன் கஞ்சனாகத்தான் வாழ்ந்தார். அதுவே அவரது பிறவிக்குணமாக இருந்தது. அடுத்தவர்கள் காரைப் பிடுங்கிக்கொள்வார். அடுத்த வீட்டுப் பெண்களின் நகைகளைப் பறித்துக் கொள்வார். தன்னைத் தேடி வரும் விருந்தினர்களுக்கு அரை கிளாஸ் டீயும் ஒரே ஒரு ரொட்டியும் பரிமாறுவார். 

ஒருமுறை மத்தியப்பிரதேசத்தின் தட்டியா சமஸ்தான மகாராஜா கோவிந்த் சிங், நிஜாம் ஒஸ்மானை விருந்துக்கு அழைத்திருந்தார். விருந்து முடிந்து கிளம்பும்போது, தன் சமஸ்தானத்தில் தயாரான வெண்ணெயை, 144 டின்களில் பரிசாக அனுப்பிவைத்தார்.  அப்படி வந்த வந்த வெண்ணையை உருக்கி உடனே நெய்யாக்கி பலகாரம் சுட்டுத் தின்னும் எண்ணம் கஞ்ச நிஜாமுக்கு இல்லை. அவ்வளவையும் அப்படியே பத்திரப்படுத்தி வைக்கச் சொன்னார். அந்த 144 டின் வெண்ணையும் ஒரு குடோனில் உறங்கப் போயின.

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 3

பின் அதை ஒஸ்மான் மறந்தே போய்விட்டார். பல மாதங்கள் கழித்து, கெட்டுப்போன வெண்ணெயின் நாற்றம் காற்றில் பரவ ஆரம்பித்தது. நிஜாமுக்குத் தகவல் போனது. அவருக்கு அதிர்ச்சிதான். இப்படி வீணாக்கிவிட்டோமே என்று கவலைப்படாமல், வீணாகிப்போன வெண்ணெயை எப்படி விலைக்கு விற்கலாம் என்று தீவிரமாக யோசித்தார். ரெட்டி என்ற அதிகாரியிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.
இந்த வீணாகிப் போன வெண்ணையை விற்க எடுத்துச் சென்றால் மக்கள் அடிப்பார்கள். மக்களிடம் விற்க முடியவில்லை என்று சொன்னால் நிஜாம் உதைப்பார். பரிதவித்த ரெட்டி ஒரு முடிவுக்கு வந்தார். அந்த குடோனிலிருந்து வெண்ணெய் டின்களை ஏற்றினார். யாரும் கவனிக்காதபடி, அவற்றை ஊருக்கு வெளியே எடுத்துச் சென்று கொட்டினார்.

மறுநாள் நிஜாமிடம் சென்றார். ‘கெட்டுப்போன வெண்ணெய் இருநூறு ரூபாய்க்குத்தான் விலை போனது’ என்று தன் கைக்காசைக் கொடுத்தார். கெட்டுப்போன வெண்ணையிலும் லாபம் பார்த்துவிட்டோமே என்று நிஜாம் ஒஸ்மானுக்குப் பரம திருப்தி. இந்தச் சாதுர்யத்தால் ரெட்டிக்கும் பதவி உயர்வு கிடைத்தது.

இப்படிப்பட்ட பல பெருமைகளைக் கொண்ட கஞ்ச மகா நிஜாம் ஒஸ்மானைத்தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்று டைம் இதழ் (1937, பிப்ரவரி 22) தன் அட்டைப்படத்தில் வெளியிட்டுக் கௌரவப்படுத்தியது.

லக்கி மியா......

பண்டைய எகிப்தியர்களுக்குச் செல்லப் பிராணி என்றால் அது பூனைதான். எகிப்தியர்கள் வழிபட்ட கடவுள்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உண்டு. அதில் பூனையும் முக்கியமான கடவுள். அந்தப் பெண் மியாவ் கடவுளின் பெயர் பாஸ்டெட்.

வீட்டில் பூனை இருந்தால் அதிர்ஷடம், நல்ல விஷயங்கள் நடக்குமென உறுதியாக நம்பினார்கள். வசதியான எகிப்தியர்கள் தாங்கள் வளர்க்கும் பூனைகளுக்கு ஜிமிக்கி கம்மல் முதல் நெக்லெஸ், கொலுசு வரை போட்டு அழகு பார்த்தார்கள். தாங்கள் வளர்க்கும் பூனை இறந்துவிட்டால், அதன் உடலை அழகுபடுத்தி, பதப்படுத்தி, மம்மியாக்கினார்கள். ஆம், பண்டைய எகிப்தில் மியாவ் மம்மிகளும் இருந்தன.

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 3

ஒரு வீட்டில் பூனை இறந்துவிட்டால், ஆண்கள் தங்கள் புருவங்களை மழித்துக் கொண்டனர். மீண்டும் புருவம் வளரும் வரை செத்துப்போன பூனையை நினைத்துத் துக்கம் கொண்டாடினர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பெர்-பாஸ்ட் என்ற பண்டைய எகிப்திய நகரத்தில் பூனைக்கான பிரமாண்டமான கோயிலே கட்டப்பட்டிருந்தது என்பதும் உண்மை.

ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி