சினிமா
Published:Updated:

ஆம்... அது நடந்தேவிட்டது!

ஆம்... அது நடந்தேவிட்டது!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆம்... அது நடந்தேவிட்டது!

ஆ.பழனியப்பன்

 “இப்போதுதான் வந்து சேர்ந்தேன்.  நீண்ட பயணம். ஆனால், அதிபராக நான் பொறுப்பேற்ற தினத்தைக் காட்டிலும் அதிகமான பாதுகாப்பை இப்போது அனைவராலும் உணர முடியும். இனி ஒருபோதும் வட கொரியாவிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்காது. அமெரிக்க மக்களே, இன்றிரவு நன்றாக உறங்குங்கள்...”

- சிங்கப்பூரில் வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் உடனான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு முடிந்து வாஷிங்டன் திரும்பியதும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்ட முதல் ட்வீட் இது.

ட்ரம்ப் – கிம் ஜோங் உன் இடையே சிங்கப்பூர் சென்டோசா தீவில் நடைபெற்ற உச்சி மாநாடு சந்திப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. ‘அமெரிக்கா - வட கொரியா இடையே புதிய நட்புறவை ஏற்படுத்துவது, கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது, கடந்த ஏப்ரல் 28-ம் தேதி ஏற்படுத்தப்பட்ட தென்கொரியா - வட கொரியா உச்சி மாநாட்டுத் தீர்மானத்தின் அடிப்படையில் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பிரதேசமாக்குவது, போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது’ ஆகிய நான்கு அம்சத் திட்டத்தைச் செயல்படுத்த இரு நாடுகளும் சம்மதித்துள்ளன.

ஆம்... அது நடந்தேவிட்டது!

“கிம் ஜோங் உடனான சந்திப்பு நேர்மையாக, நேரடியாக ஆக்கபூர்வமானதாக இருந்தது” என்று குறிப்பிட்ட ட்ரம்ப், “சிறு வயதிலேயே ஆட்சியில் அமர்ந்து நாட்டை ஆள்கிறார். பேச்சு வார்த்தையில் சிறந்தவர். மிகவும் புத்திசாலி” என்று கிம் ஜோங் உன்னைப் புகழ்ந்து தள்ளினார். மேலும், “நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டுள்ளோம் என்று நினைக்கிறேன். நாங்கள் கணித்ததைவிட மிகச் சிறப்பான சந்திப்பாக இது இருந்தது. சேர்மன் கிம் அவர்களுக்கு நன்றி” என்றார் ட்ரம்ப். வட கொரியாவுக்கு வருமாறு ட்ரம்ப்புக்கு கிம்மும், அமெரிக்கா வருமாறு கிம்முக்கு ட்ரம்பும் பரஸ்பரம் அழைப்பு விடுத்தனர். இருவருமே அடுத்தவர் அழைப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும்’ என்று கிம் ஜோங் உன்னும், ‘அணு ஆயுதங்களை அழித்துவிட்டால், எந்தவொரு நாடும் வட கொரியாவைத் தாக்காத வகையில் பாதுகாப்பு அளிக்கப்படும்’ என்று ட்ரம்ப்பும் உறுதி அளித்துள்ளனர். ஆனாலும், வடகொரியாமீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது பற்றி இந்தச் சந்திப்பில் பேசப்படவில்லை. மேலும், நவீனப் போர்க்கப்பல்கள், போர்விமானங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களுடன் தென்கொரியாவில் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள 25 ஆயிரம் அமெரிக்க ராணுவப்படையினரை வாபஸ் பெறுவது பற்றியும் பேசப்படவில்லை.  என்றாலும், ‘தென்கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் போர்ப்பயிற்சிகளில் இனி ஈடுபடமாட்டார்கள்’ என்று மட்டும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்கா, 1950-லிருந்து வடகொரியாவுடன் போரில் இருக்கிறது. 1950-ல்  தொடங்கி மூன்று ஆண்டுகள் நடைபெற்ற போரில் வடகொரியாவின் பெரும்பாலான கட்டமைப்புகள் நாசமாக்கப்பட்டன. அப்போது முதல், தென்கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவப்படைகளால், வடகொரியாவுக்குப் பெரும் அச்சுறுத்தல். அதுவே, அணு ஆயுதச் சோதனைகளிலும் ஏவுகணைத் தயாரிப்பிலும் வடகொரியா இறங்கக் காரணமாகியது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைகளால், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வடகொரியாமீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அதனால் உணவுத் தட்டுப்பாடு, மருந்துத் தட்டுப்பாடு எனக் கடும் நெருக்கடிகளால் வடகொரியா அவதிப்பட்டு வருகிறது.

ஆம்... அது நடந்தேவிட்டது!

“வடகொரியாவில் 41 சதவிகித மக்கள், அதாவது ஐந்து பேரில் இருவர் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள். ஐந்து பேரில் ஒருவருக்கு சுத்தமான தண்ணீர் இல்லை, போதுமான சுகாதார வசதி இல்லை. மக்களின் அடிப்படை சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான மருந்துகளோ, உபகரணங்களோ இல்லை. தங்கள் உணவுக்காக, 70 சதவிகித மக்கள் பொதுவிநியோக முறையை மட்டுமே நம்பியுள்ளனர்” என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது.

இதுமட்டுமல்ல... நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய ஒரு நவீன விமானம்கூட வடகொரியாவிடம் இல்லை என்ற நிலையில், சீன நாட்டு விமானத்தில் சிங்கப்பூருக்குப் போய்வந்தார் கிம் ஜோங் உன். இவ்வளவு மோசமான நிலையில் உள்ள ஒரு நாட்டின் தலைவரான கிம் ஜோங் உன், உலக வல்லரசான அமெரிக்காவையே பணிய வைத்திருப்பது பெரும் ஆச்சர்யம்.

நேற்றுவரையில், உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக இருந்த வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் மீதான மரியாதை, தென்கொரிய அதிபர் மூன் ஜேன் இன் உடனான சந்திப்புக்குப்பின் உயர ஆரம்பித்தது. இப்போது ட்ரம்ப் உடனான சந்திப்புக்குப்பின்,  உலகத் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் கிம் ஜோங் உன். ட்ரம்ப் உடனான சந்திப்பைக் கிம் ஜோங் உன்-னுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக வடகொரிய மக்கள் பார்க்கிறார்கள்.  அதுதான் உண்மையும்கூட.

வடகொரியாவில் இந்திய அமைச்சர்!

மே 15, 16 தேதிகளில், அதாவது கிம் ஜோங் உன் – ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக, இந்திய வெளியுறவுத்துறையின் இணை அமைச்சரான வி.கே.சிங், வடகொரியாவுக்குத் திடீர் பயணம் மேற்கொண்டார். கடந்த 20 ஆண்டுகளில், இந்திய அமைச்சர் ஒருவர் வடகொரியா செல்வது இதுவே முதன்முறை. வடகொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட உயர் அதிகாரிகளைச் சந்தித்த வி.கே.சிங், அணு ஆயுதப் பரவல் விவகாரம் குறித்து இந்தியாவின் கருத்தைத் தெரிவித்துள்ளார். வடகொரியத் தலைவர்களோ, ‘இந்தியாவின் பாதுகாப்புக்கான கவலையை உருவாக்கும் எந்தவொரு நடவடிக்கையையும், நட்பு நாடு என்ற முறையில் வடகொரியா ஒருபோதும் அனுமதிக்காது‘ என்று உறுதிபடத் தெரிவித்துள்ளனர். தென்கொரிய அதிபர் - வடகொரிய அதிபர் இடையே நடந்த சந்திப்பு பற்றியும், ட்ரம்ப் உடன் நிகழவிருந்த சந்திப்பு பற்றியும், வி.கே.சிங்கிடம் வடகொரியத் தலைவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.  1973-ல், இந்தியாவும் வடகொரியாவும் ராஜிய உறவை ஏற்படுத்திக்கொண்டன. அதன் 45-வது ஆண்டு இது. வடகொரியாவின் அழைப்பின் பேரில் வி.கே.சிங் அங்கு சென்றதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்தது.