தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

வெசத்தைக் கொடுத்துட்டு நெலத்தை எடுத்துக்கோங்க! - சேலம் விவசாயக் குடும்பங்களின் கண்ணீர்

வெசத்தைக் கொடுத்துட்டு நெலத்தை எடுத்துக்கோங்க! - சேலம் விவசாயக் குடும்பங்களின் கண்ணீர்
பிரீமியம் ஸ்டோரி
News
வெசத்தைக் கொடுத்துட்டு நெலத்தை எடுத்துக்கோங்க! - சேலம் விவசாயக் குடும்பங்களின் கண்ணீர்

செய்திக்குப் பின்னே...வீ.கே.ரமேஷ், படங்கள் : க.தனசேகரன்

‘எங்க வீடும் போச்சு, காடும் போச்சு’ என்று பெண்கள் தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார்கள். ஒரு முதியவர், தன் இரண்டு பேரன்களையும் கையில் பிடித்து இழுத்தபடி சென்று அதிகாரி முன் நிறுத்தி, ‘எங்களுக்கு வெசத்தைக் கொடுத்துங்க’ என்று ஆற்றாமையில் வெம்புகிறார். ‘எங்க கேணி, காடு எல்லாத்தையும் விட்டுட்டு நாங்க என்னங்க பண்ணுவோம்?’ என்று கலங்குகிறார் நடுத்தர வயதுப் பெண் ஒருவர். இதுவரை வாழ்வாதாரமாக இருந்த தங்கள் நிலத்தை, அரசு இப்போது நிர்மூலமாக்கும் துயரத்தைச் சொல்லும் அந்த விவசாயக் குடும்பத்துப் பெண்களின் கதறல்களைத் தொலைக்காட்சியில் பார்க்கும் நமக்கும் மனசு கனக்கிறது.

`சேலம் டு சென்னை'க்குப் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் எட்டு வழி பசுமைச் சாலை திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சாலை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என ஐந்து மாவட்டங்கள் வழியாக 277 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது. இந்தச் சாலையால் 1.75 லட்சம் மரங்களும், எட்டு மலைகளும், பல ஏரி ஓடைகளும், ஏழாயிரம் ஏக்கர் விளைநிலங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிணறுகளும், 40 ஆயிரம் குடும்பங்களும் பாதிக்கப்படும் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

வெசத்தைக் கொடுத்துட்டு நெலத்தை எடுத்துக்கோங்க! - சேலம் விவசாயக் குடும்பங்களின் கண்ணீர்

இந்த நிலையில், ஜூன் 18 அன்று முதல் எட்டு வழிச் சாலைக்காகச் சேலத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்படும் பகுதிகளில் போலீஸ் குவிக்கப்பட்டு, வருவாய்த் துறை மூலம் நில அளவீடு செய்து, முட்டுக்கல் போடப்பட்டுவருகிறது. இப்பகுதிகளில், அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதைப்போல பட்டாதாரரை தவிர மற்றவர்கள் யாரும் பக்கத்தில் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. பட்டாதாரர்கள் நில அளவை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலோ, நில அளவை செய்வதைத் தடுத்தாலோ, உடனே அவர்களைக் குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றுகிறார்கள். அவர்களைக் காவல் நிலையம் அல்லது மண்டபத்தில் அடைத்துவிட்டு, நில அளவைச் செய்த பிறகு மாலையில் விடுகிறார்கள். இதனால் விவசாயிகள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

சேலம், சேர்வராயன் மலைக்கு அருகில் அடிமலைப்புதூர் பகுதியில் போலீஸ் படையோடு வருவாய்த் துறையினர் தன் வயலுக்குள் இறங்கியபோது, தன் கால் உடைந்திருந்த நிலையிலும் உண்ணாமலைப் பாட்டி தள்ளாட்டமாக ஓடிப்போய் முட்டுக்கல் போடுவதைத் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்தக் ‘குற்றத்துக்காக’ அவரை, போலீஸ் படைசூழ கைதுசெய்து அழைத்துச் சென்ற புகைப்படம் வைரல் ஆனது. அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரையும் வாகனத்தில் ஏற்றியதோடு, பாட்டியையும் காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றினர். விடுவிக்கப்பட்ட பின்னர், பாட்டியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் பேசினோம்.

‘`எனக்கு 65 வயசு ஆகுது. என் புருஷன் 40 வருஷத்துக்கு முன்னாடியே இறந்துட்டாரு. எங்களுக்குக் கல்யாணமான புதுசுல இந்த இடத்துல அவரு அஞ்சேகால் ஏக்கர் நிலத்தைப் புடிச்சாரு. நான், என் புருஷன், என் மூத்த மகன் மூணு பேரும் சேர்ந்த எட்டு முட்டு (120 அடி) கெணறு வெட்டி இந்த வயலையெல்லாம் உருவாக்குனோம். வயல்களை உருவாக்கும்போதே என் புருஷன் இறந்துட்டாரு. நான் இந்த மண்ணுல உழைச்சு என் மூணு பசங்களுக்கும் கல்யாணம் செஞ்சு வெச்சேன். மூணு மருமகளுக, எட்டு பேரக்குழந்தைங்கனு ஒத்துமையா இருந்து, யார்கிட்டயும் கையேந்தாம இந்தப் பூமியில உழுது உழைச்சு வாழ்ந்துட்டு இருக்கோம்.

வெசத்தைக் கொடுத்துட்டு நெலத்தை எடுத்துக்கோங்க! - சேலம் விவசாயக் குடும்பங்களின் கண்ணீர்

நானோ, என் பிள்ளைகளோ படிக்கல. இந்தக் காட்டை நம்பிதான் மூணு குடும்பங்க இருக்கு. எட்டு வழிச் சாலை போடுறோம்னு சொல்லி, ஒரு தகவலும் கொடுக்காம திடீர்னு வெள்ளாமை பண்ணுற காட்டுக்குள்ள பூட்ஸ் காலோட வர்றாங்க. திடுதிப்புன்னு இப்படி வந்தா, என் மூணு பசங்களோட குடும்பம், பேரப் புள்ளைங்க, பத்து மாடு, கன்னு, ஏழு நாய்ங்கனு...  இத்தனையையும் கூட்டிக்கிட்டு நான் எங்க போயி நிப்பேன்? இதைக் கேட்டு, கத்திக் கதறிதான் நான் மயக்கம் போட்டே விழுந்துட்டேன்.

என் குடும்பத்துல ஏழு பேரைப் பிடிச்சு வண்டியில ஏத்துனாங்க. பக்கத்துல இருந்த ஒரு போலீஸ்காரரு, ‘டேய், இவளையும் தூக்கி வண்டிக்குள்ல போடு’னு சொன்னதும் என்னையும் தூக்கி வண்டியில போட்டுட்டாங்க. வீட்டுல என் பேரப்புள்ளைக அழுதுகிட்டு கெடக்க, இவங்க வந்து அளந்துட்டுப் போயிருக்காங்க. ஒத்த மனுஷியா புள்ளகுட்டிகள ஆளாக்கி கௌரவமா வாழ்ந்த என்னை, கூண்டு வண்டியில ஏத்தி என் குடும்ப மானத்தையே கெடுத்துட்டாங்க. நெலத்தை இழந்துட்டு இப்படி நட்டாத்துல நிக்குறோமே...’’ என்று கண்ணீர் வடிக்கிறார் அந்த விவசாயத் தாய்.

வெசத்தைக் கொடுத்துட்டு நெலத்தை எடுத்துக்கோங்க! - சேலம் விவசாயக் குடும்பங்களின் கண்ணீர்

ஆச்சாங்குட்டப்பட்டியில் தன் நிலத்தை அளவீடு செய்து கொண்டிருந்தபோது, தனிமையில் உக்கார்ந்து புடவையால் முகத்தை மூடி அழுதுகொண்டிருந்தார் ராமாக்கா. ‘`என் ஒன்றரை ஏக்கர் காடு, வீடு, மாட்டுக்கொட்டாய் எல்லாம் போயிடுச்சு. நான் இனி எதக்கொண்டு பொழைப்பேன்? எனக்கு மருந்து வாங்கிக் கொடுத்துட்டு இந்த மண்ணை எடுத்துட்டுட்டுப் போகட்டும். ரோட்டுல செயினை அறுத்துட்டுபோற வழிப்பறி கொள்ளக்காரங்கபோல எங்க நெலத்தை எடுத்துட்டுப் போறாங்க. ஊருக்கே சோறு போடுற எங்களுக்கு இந்தச் சோதனையா கடவுளே? கதறி அழுதாகூட கைது பண்ணுறாங்க. எங்களுக்கு நியாயம் கேட்க எந்த நாதியும் இல்லாமப்போச்சே...’’ - பெருங்குரலெடுத்து அழுகிறார் ராமாக்கா.

வெசத்தைக் கொடுத்துட்டு நெலத்தை எடுத்துக்கோங்க! - சேலம் விவசாயக் குடும்பங்களின் கண்ணீர்

சேலம் மாநகர உதவிப் பொறியாளர் கலைவாணி, ஆச்சாங்குட்டப்படியில் உள்ள தன் நிலத்தைக் கையகப்படுத்த வந்த சிறப்பு வட்டாச்சியர் வெங்கடேசனிடம் கைகூப்பிக் கண்ணீர் மல்க மன்றாடினார், ‘`இது மண் இல்ல, என் உயிர். இங்கதான் என் கணவர் உடலைப் புதைச்சிருக்கோம். மூணு தலைமுறைகளாக இங்க வாழ்றோம். எந்த ஓர் அறிவிப்பும் இல்லாமல் வேலி போட்டிருக்கிற விளைநிலத்துக்குள்ள புகுந்து முட்டுக்கல் போடுறீங்களே, இது நியாயமா? இப்படி எங்களையெல்லாம் அராஜகம் செஞ்சு இங்க இருந்து கிளப்ப ரொம்ப கஷ்டப்படாம, எல்லாருக்கும் விஷத்தை வாங்கிக் கொடுங்க. குடிச்சுட்டு இந்த மண்ணுலயே படுத்து செத்துடுறோம். எங்க பிணத்து மேல ரோடு போடுங்க’’ என்று மீண்டும் கைகூப்ப, கண்ணீர் பெருகுகிறது அவருக்கு.

மண்ணில் விழும் கண்ணீர்த்துளிகளையும் காற்றில் அதிரும் கதறல்களையும் துச்சமெனக் கடந்து, காவல்துறை படையோடு சேலம் வருவாய்த் துறையினர் நில அளவைச் செய்து முட்டுக்கல் போட்டுக்கொண்டிருக்கின்றனர். ஊற்றவிருக்கிற தாரில் மரிக்கப்போகும் மரங்கள், மலைகள், ஆறுகள், விளை நிலங்கள், கிணறுகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வழிதான் என்ன?