மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம் & சிறப்புத் திருமணச் சட்ட வரையறைகள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

கிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம் & சிறப்புத் திருமணச் சட்ட வரையறைகள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
கிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம் & சிறப்புத் திருமணச் சட்ட வரையறைகள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

சட்டம் பெண் கையில்! ஓவியம் : கோ.ராமமூர்த்தி

கிறிஸ்தவ மதச் சம்பிரதாயங்களின் அடிப்படையில் திருமணம் செய்துகொண்ட தம்பதி விவாகரத்து பெற பாதிரியார்களை அணுகினால், தகுந்த காரணங்கள் இருந்தால், அவர்களே திருமண ரத்து செய்து வைப்பார்கள். ஆனால், இது சட்டபூர்வமானதா என்பது உள்ளிட்ட இன்னும் பல விளக்கங்களை அளிக்கிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் மதம் கடந்து சிறப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கான சட்டபூர்வ விவாகரத்துக்கான வரையறைகள், இந்த இதழில்...

‘இஸ்லாமியர்களுக்குத் தனிச்சட்டம் இருப்பதுபோல கிறிஸ்தவர்கள் ‘கேனன் லா' (Canon Law) என்கிற சட்ட முறையைப் பின்பற்றுகின்றனர். அதன்படி, கிறிஸ்தவ விதிமுறைகளைப் பின்பற்றி கிறிஸ்தவ மத குருமார்களால் செய்து வைக்கப்படும் விவாகரத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்’ என்று கிளாரன்ஸ் பயஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பில், ‘மத குருக்கள் விவாகரத்து வழங்கினாலும் அதன்பின் சட்டப்படி நீதிமன்றத்தை அணுகிப் பெற்றுக்கொள்ளும் விவாகரத்து மட்டுமே செல்லும்’ என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. எனவே, கிறிஸ்தவ மத குருமார்கள் விவாகரத்து கொடுத்துவிட்டார்கள் என்று மற்றொரு திருமணம் செய்துகொண்டால், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 494-ன் கீழ், மனைவி உயிருடன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்துகொண்ட குற்றத்துக்காக தண்டிக்கப்பட வாய்ப்புண்டு.

கிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம் & சிறப்புத் திருமணச் சட்ட வரையறைகள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

இந்திய விவாகரத்துச் சட்டத்தில் 2001-ம் ஆண்டுச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, கிறிஸ்தவ தம்பதிகள் திருமணம் முடிந்து இரண்டாண்டுகள் முடிந்த பின்னரே பரஸ்பர விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடியும். இதுவே மற்ற மதத்தினருக்கு ஓராண்டு அவகாசம் போதுமானது. எனவே, மற்ற மதத்தினருக்கான விதிகளில் இருந்து மாறுபடும் இச்சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ விவாகரத்தைப் பொறுத்தவரை இந்திய விவாகரத்துச் சட்டம் பிரிவு 10 முன்னிலைப்படுத்தும் காரணங்கள் சிலவற்றைப் பார்ப்போம்:

* கிறிஸ்தவ மதத்தில் இருந்து வேறு மதத்துக்கு மாறினால்...

இல்வாழ்க்கைத் துணை அல்லாத வரோடு உடலுறவு ஏற்பட்டால்; மனநிலை பாதிப்பு உண்டானால்...

விவாகரத்து மனு செய்த காலத்தில் இருந்து இரண்டாண்டுகளுக்கு முன் தொழுநோய், பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால்...

தாம்பத்திய உறவில் ஈடுபட விரும்பாமல் இருந்தால்...

வாழ்க்கைத்துணை உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்ற தகவல் ஏழாண்டுகள்வரை அறியப்படாமல் இருந்தால்...

வாழ்க்கைத்துணையுடன் சேர்ந்து வாழ்வதற்கு மாறான நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்த பின், அவருடன் சேர்வதற்கு மணவாழ்வு மீட்புரிமைச் சட்டத்தின்படி முயற்சி செய்யாமல் இருந்தால்...

கொடுமைப்படுத்தினால்...

கணவன் வேறொரு பெண்ணைப் பலாத்காரம் செய்தால்...

கிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம் & சிறப்புத் திருமணச் சட்ட வரையறைகள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

சிறப்புத் திருமணச் சட்டம்

மதங்கள் கடந்து திருமணம் செய்தவர்களுக்கான விவாகரத்து குறித்து, சிறப்புத் திருமணச் சட்டப் பிரிவு 27 விவரிக்கிறது. இரு வேறுபட்ட மதங்களைச் சேர்ந்த தம்பதிகள் சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி திருமணத்தைப் பதிவு செய்திருந்தால், இந்தச் சட்டத்தின் பிரிவு 27-ல் விவாகரத்துக்கான வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன்படி...

வாழ்க்கைத்துணை அல்லாத ஒருவருடன் உடலுறவு கொண்டிருந்தால்...

விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் நபரை விட்டு இரண்டாண்டுகள் விலகியிருந்தால்...

ஏழாண்டுகள் சிறை தண்டனைப் பெற்றிருந்தால்...

திருமணத்துக்குப் பின் கொடுமைப்படுத்தி யிருந்தால், துணைக்குத் தீர்க்க முடியாத மனநோய், பித்துநிலைக்கு உள்ளாகியிருந்தால்...

சிகிச்சை தேவைப்படுகிற மனநிலை தொடர்பான பிரச்னைகளுக்கு (Psychopathic disorder)ஆட்பட்டிருந்தால்...

 * தொழுநோய் மற்றும் பால்வினை நோய் பாதிப்பு இருந்தால்...

வாழ்க்கைத்துணை உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்கிற தகவல் ஏழாண்டுகள்வரை அறியப்படாமல் இருந்தால்...

கணவன் வேறொரு பெண்ணை மணந்து அவருடன் குடும்பம் நடத்தினால்...

* கணவன் பலாத்காரக் குற்றம் செய்தவராக இருந்தால்...

மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனக்குச் சாதகமான ஆணையைப் பெற்றுக்கொண்டு, ஓராண்டுக்குப் பின்னரும் கணவனுடன் சேர்ந்து வாழாமல் இருந்தால்...

இவற்றுடன், சட்டப்பிரிவு 28 மூலம் பரஸ்பர விவாகரத்தும் பெறலாம்.

ஒரு திருமணம் மதச் சம்பிரதாயங்களின் அடிப்படையிலோ, மதங்களைத் தாண்டியோ நடந்திருக்கலாம். மணமுறிவுக்குத் தம்பதியர் உடன்படும்போது நிச்சயமாகச் சட்டப்படி மட்டுமே விவாகரத்து பெற முடியும்.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!

இரு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டு, சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்தனர். அதன் பின் இஸ்லாமிய மத சம்பிரதாயப்படி நிக்காஹ் செய்துகொண்டனர்.

பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர், மனைவி நீதிமன்றத்தில் சிறப்புத் திருமணச் சட்டப் பிரிவுகளின் கீழ் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.

‘இந்த வழக்கை விசாரிக்கும் எல்லை குடும்பநல நீதிமன்றத்துக்கு இல்லை. ஏனென்றால், நாங்கள் இஸ்லாமிய மத சடங்குகளைக் கடைப்பிடித்துத் திருமணம் செய்துகொண்டோம். எனவே, எங்களுக்கு இஸ்லாமியர்களின் தனிச்சட்டம்தான் பொருந்தும்’ என்று கணவர் பதில் மனுவைச் சமர்ப்பித்தார். அவரின் மனு, குடும்பநல நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.

குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் கணவர். மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ஜே.ஆர்.மிதா வழங்கிய தீர்ப்பு, சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி திருமணம் பதிவுசெய்த பிறகு, ‘சம்பந்தப்பட்ட தம்பதி பின்பற்றும் மதச் சட்டங்கள்தான் பொருந்தும்’ என வாதிடுபவர்களுக்குப் பதிலடியாக அமைந்தது.

‘சிறப்புத் திருமணச் சட்டம் என்பது மதங்கள் கடந்து இருவர் செய்துகொள்ளும் திருமணம். எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் அவர்களது திருமணத்தைப் பதிவு செய்துகொண்டால் அவர்களைச் சிறப்புத் திருமணச் சட்டத்தின் ஷரத்துகளே கட்டுப்படுத்தும். வாரிசுரிமை என்று வரும்போது இந்திய வாரிசுரிமைச் சட்டம்தான் இவர்களுக்குப் பொருந்தும்’ என்று டெல்லி உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியதோடு, கணவனின் கோரிக்கையையும் நிராகரித்தது. மேலும், சட்ட நடைமுறைகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக ஐம்பதாயிரம் ரூபாயை நான்கு வாரங்களுக்குள் மனைவிக்குக் கொடுக்க வேண்டும் என்றும் கணவனுக்கு உத்தரவிட்டது.

சுயமரியாதைத் திருமணம்!

அக்னி, மந்திரம், தாலி என்று மதச் சடங்குகளைக் கடைப்பிடித்துச் செய்து கொள்ளும் திருமணத்தில் விருப்பமில்லாத இந்துக்கள் சுயமரியாதை திருமணம் செய்துகொள்கின்றனர். அத்தகைய திருமணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டவை என்று இந்து திருமணச் சட்டம் 1955 பிரிவு 7(a) விளக்குகிறது.