
அவளும் நானும் நானும் அவளும்ஆர்.வைதேகி
வானிலையை மட்டுமல்ல, தன் வாழ்க்கையில் வீசப்போகிற வசந்தத்தையும் முன்கூட்டியே கணித்திருக்கிறார் பிரதீப் ஜான். `தமிழ்நாடு வெதர்மேன்’ என அறியப்படுகிற பிரதீப்பின் உலகம், கணினிக்குள்ளும் கணிப்புகளுக்குள்ளும் அடங்கியது. வட்டத்தைத் தாண்டிய அவரது வாழ்க்கையை அழகாக்கி, அர்த்தப்படுத்தியிருக்கிறாள் லாரா அபிகேல்... பிரதீப்பின் குட்டி இளவரசி!
``எனக்குப் பெண் குழந்தைனா ரொம்பப் பிடிக்கும். என் மனைவி ஹன்னா ஷாலினி கர்ப்பமா இருந்தபோது, பெண் குழந்தைதான் பிறக்கும்னு ரெண்டு பேரும் உறுதியா நம்பினோம். பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகள் ஆசீர்வதிக்கப்பட்டவைன்னு நம்பறேன். பெற்றோருக்கும் மகளுக்குமான அந்தப் பாசம், வர்ணனைக்கு அப்பாற்பட்டது. எங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிக்க வந்தவள்தான் லாரா...’’ - `மகளதிகாரம்’ பேசும் தந்தையின் கண்களில் மாமழைக்கான அறிகுறி.
``அவளைச் செல்லமாக `சிக்கு’னுதான் கூப்பிடுவேன். இந்த ஆறு வருஷத்துல அவளோடு நான் இருந்த ஒவ்வொரு நொடியும் எனக்குப் பசுமையா ஞாபகத்துல இருக்கு. என் மனைவிக்கு வேலூர்
சி.எம்.சி ஆஸ்பத்திரியில் பிரசவம் நடந்தது. அங்கே பிரசவ வார்டுக்குள்ள கணவரையும் அனுமதிப்பாங்க. என் மகள் இந்த உலகத்துக்கு வந்து சேர்ந்த முதல் நொடிகூட எனக்குத் தெரியும். அவளை முதன்முதல்ல என் கையில்தான் கொடுத்தாங்க. அவளுடைய முதல் கண்சிமிட்டல்கூட இன்னும் எனக்கு மறக்கலை...’’ - `உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்’ என்கிற வரியை நினைவுப்படுத்துகிறது பிரதீப் ஜானின் மலரும் நினைவு.

``எனக்குச் சென்னையில வேலை. சிக்கு பிறந்ததும் முதல் 21 நாள்கள் அவ கூடவே இருந்தேன். அதுக்குமேல லீவு கிடைக்கலை. அதனால ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ராத்திரி கிளம்பி வேலூர் போயிட்டு, ரெண்டு நாள் அவகூட இருந்துட்டு, சென்னைக்குத் திரும்புவேன். பலமுறை வெள்ளிக்கிழமை எனக்கு வேலை முடிய ராத்திரி ஒரு மணிகூட ஆகியிருக்கு. அதுக்கப்புறம் அவசரமா கிளம்பிப் போவேன். வேலூர் கிளம்பும்போதான அந்த மனநிலை, சென்னை திரும்பும்போது முற்றிலும் மாறி, பாரமாகி மனசை அழுத்தும். அடுத்த வெள்ளிக்கிழமை ராத்திரி வரை கடத்துற அந்த வலி, மகள்களைப் பிரிஞ்சு இருக்கிற அப்பாக்களுக்குத்தான் புரியும்.
சென்னையில நான், என் மனைவி, மகள் மட்டும்தான் இருக்கோம். சிக்கு பிறந்தபோது நானும் என் மனைவியும் வேலைக்காக அவளை வேலூர்ல தாத்தா பாட்டி வீட்டுல விட்டுட்டு வருவோம். காலையில அவ தூங்கி எழுந்திருக்கிறதுக்குள்ள கிளம்புறது இன்னும் பெரிய வலி. ஒருநாள் ராத்திரி ரெண்டு மணிக்கு எழுந்து `அப்பா வேணும்’னு அழுதிருக்கா. அதுதான் கடைசி. அப்புறம் அவளைவிட்டுப் பிரியவே இல்லை’’
- பிரதீப்பின் வார்த்தைகளில் பெருமிதம்.
``பொதுவா பெண் குழந்தைங்க அப்பாகிட்டயும், ஆண் குழந்தைங்க அம்மாகிட்டயும் அதிக ஒட்டுதலோடு இருப்பாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, சிக்கு அவங்க அம்மாவுக்குத்தான் ரொம்ப க்ளோஸ். நானும் அவளும் டாம் அண்டு ஜெர்ரி மாதிரி.
கண்களை உருட்டி முறைச்சுப் பேசுறது, கோபப்படுறது, சத்தமா பேசுறது, சண்டை போடுறதுனு எல்லாமே என் ஒருத்தன்கிட்ட மட்டும்தான். அந்த உரிமை எனக்குப் பிடிச்சிருக்கு. எந்நேரமும் அப்பா, அப்பானு என் கழுத்தைக் கட்டிக்கிட்டு விளையாடுறவ, எங்களுக்குள்ள ஏதாவது சண்டை வந்துட்டா போதும்... `தமிழ்நாடு வெதர்மேன்... என்கிட்ட சண்டை போடுறதை நிறுத்திட்டு, நீங்க போய் வெதரை ஃபோர்காஸ்ட் பண்ற வேலையைப் பாருங்க...’னு சொல்லுவா. அப்படிச் சொல்லிட்டாள்னா அவ என்மேல கோபமா இருக்கானு அர்த்தம்!
வழக்கமான இந்தத் தலைமுறைக் குழந்தைங்களைப்போலத்தான் சிக்குவும்.செம ஸ்மார்ட். `நான் சிங்கிள் சைல்டுனு கவலைப்படாதீங்க. நாளைக்குக் கல்யாணமாகி ஹஸ்பண்ட் வீட்டுக்குப் போனாலும் உங்க ரெண்டு பேரையும் நல்லா பார்த்துப்பேன்’னு சொன்னபோது பிரமிப்பா இருந்தது.
எங்க குழந்தை தெருவுல இறங்கி விளையாடிப் பழக்கமில்லாதவள். ஆனா, மழை நாள்ல அப்படியே மாறிடுவா. என்னை மாதிரியே அவளுக்கும் மழையும் மேகமும் ரொம்பப் பிடிக்கும். மழை ஆரம்பிச்சதும் `இன்னிக்கு ஸ்கூல் இருக்குமா?’னு குழந்தைகள் கேட்கிற அதே கேள்வி அவளுக்கு இருக்கும். மற்ற குழந்தைகளுக்கு இல்லாத ஓர் அட்வான்டேஜ் அவளுக்கு உண்டு. ராத்திரி மழை பெய்தா அடுத்த நாள் காலையிலதான் ஸ்கூல் இருக்கா, லீவானு மற்ற பிள்ளைங்க தெரிஞ்சுப்பாங்க. என் மகளுக்கு, நான் உடனே அப்டேட் பண்ணிடுவேன். மழையைப் பற்றிய நினைவுகள் எனக்கு மறக்காது. எந்தெந்த நாளில் மழை எப்படியிருந்ததுனு என்னால சொல்ல முடியும். அதே நினைவாற்றல் என் மகளுக்கும் இருக்கிறது ரொம்பவே ஆச்சர்யமான விஷயம்.
சனிக்கிழமைகள் பெரும்பாலும் எங்க ரெண்டு பேருக்குமானவை. மனைவி வேலைக்குப் போயிடுவாங்க. சிக்குவை நான்தான் பார்த்துக்கணும். வீட்டுக்கு ஃப்ரெண்ட்ஸ் வருவாங்க. அவங்களோடு சேர்ந்து விளையாட நானும் வரணும்னு அடம்பிடிப்பா. அப்பா - மகள் உறவெல்லாம் மறந்து ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸாகிடுவோம்.
அவ பிறக்கிற வரைக்கும் பயங்கரமா ஸ்மோக் பண்ணிட்டிருந்தேன். யார் சொல்லியும் கேட்காத நான், என் மகள் பிறந்ததும் அவளைத் தூக்கிறதுக்காகவே சிகரெட் பழக்கத்தை விட்டுட்டேன். வெதர்மேனா நான் அறியப்பட்டது, பிரபலமானது உள்பட என் வாழ்க்கையில பல பாசிட்டிவான விஷயங்களும் என் மகள் பிறந்த பிறகுதான் நடந்திருக்கு.
`அப்பா நான் ரொம்பக் குட்டியா இருக்கேன்’னு சிக்கு அடிக்கடி சொல்வா. உயரமாகலையேங்கிற வருத்தம் அவளுக்கு. எனக்கோ, அவள் வேகமா வளர்ந்திட்டிருக்கிற மாதிரி தெரியும். `நீ வளர்ந்து டாதே... இப்படியே இரு. அப்பதான் அப்பாவை `என்கூடப் பேசுங்க, விளையாடுங்க’னு சொல்லுவே. வளர்ந்துட்டா, உனக்குனு ஓர் உலகம் வந்துடும்’னு சொல்வேன். என்னிக்கு இருந்தாலும் இன்னொரு வீட்டுக்கு அனுப்பணுமேனு மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு இருக்கும் கவலை எனக்கும் உண்டு. ஆனா, அதுதான் யதார்த்தம். அவ வளர்ந்து நிற்கிறபோது எல்லாமே மாறியிருக்கும். யார் வேணாலும் எப்போ வேணாலும் நினைச்ச நேரத்துக்குச் சந்திச்சுக்கலாம்னு எனக்கு நானே சமாதானமும் சொல்லிப்பேன்.
அப்பாக்களுக்கு ஓர் அட்வைஸ்... நீங்க எவ்வளவு பெரியாளா இருந்தாலும் சரி, எவ்வளவு பிஸியா இருந்தாலும் சரி, உங்க குழந்தையோடு ஆரம்ப நாள்களைச் செலவழிக்கத் தவறிடாதீங்க. அந்த ஸ்பரிசமும் அனுபவமும் உணர்ந்தால்தான் புரியும்’’ - அன்பின் அணிவகுப்பை வார்த்தைகளால் வெளிப்படுத்தும்போது அழுத்தம் அணையிடுவதை உணர முடிந்தது.

நானும் அவளும்
`அவன்’களுக்குமான பத்திரிகை
``பெயர்ல `அவள்’ இருந்தாலும், `அவன்’களுக்குமான பத்திரிகையாகவே அவள் விகடனை நான் பார்க்கிறேன். பெரும்பாலான பத்திரிகைகள் பெண்களுடைய சாதனைகளையும் சாகசங்களையும் பற்றி மட்டுமே பேசுறதா இருக்கிற நிலையில, அவள் விகடன் மட்டும்தான் பெண்களின் மாண்பையும் அவங்களுக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையையும் பற்றிப் பேசுது. ஆண் இல்லாமல் பெண் இல்லை; பெண் இல்லாமல் ஆண் இல்லை. அப்படித்தான் அவள் விகடனும். ஆண்களை எதிர்ப்பதுதான் பெண்ணியம் என்ற பார்வையை மாற்றி, பெண்மையை மதிப்பதுதான் நிஜமான பெண்ணியம்; அது பெண்களுக்கும் பொருந்தும்னு ஒவ்வோர் இதழிலும் நிரூபிக்கும் பத்திரிகை.’’