தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

உலகத்திலேயே சந்தோஷமான இடம் - கருணாநிதி பேத்தி பூங்குழலி

உலகத்திலேயே சந்தோஷமான இடம் - கருணாநிதி பேத்தி பூங்குழலி
பிரீமியம் ஸ்டோரி
News
உலகத்திலேயே சந்தோஷமான இடம் - கருணாநிதி பேத்தி பூங்குழலி

அரசியல் தாண்டிய ஆனந்தத் தருணங்கள்சு.சூர்யா கோமதி

‘ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்... கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்...’ - கருணாநிதியின் முன் முட்டியிட்டு அமர்ந்து, அவர் கையைப் பற்றியபடியே பாடுகிறார் மு.க.தமிழரசுவின் மகள் பூங்குழலி. பாடல் முடிந்ததும், ‘தாத்தா எப்படி இருக்கு?’ என அவர் வாஞ்சையாகக் கேட்க, தன் பேத்தியின் கைகளை விடாமலேயே, ‘ஆங்ங்’ என்று ஆனந்தத்தை வெளிப்படுத்துகிறார் கருணாநிதி. அவர் குரல் கேட்டதும் அந்த வீடு மகிழ்ச்சியில் மிதக்கிறது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ இது.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இப்போது வயது 95. ஓய்வே அறியாது இருந்த அவர் இப்போதுதான் முழுக்கமுழுக்க பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன், பேத்திகளின் அன்பில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்.

‘`தாத்தா எப்படி இருக்கார்?” - பூங்குழலி யைத் தொடர்புகொண்டோம். ஒரு சகாப்தமே தங்களுக்குத் தாத்தாவாகக் கிடைத்த சந்தோஷத்தை மூச்சுவிடாமல் பேசினார். இன்ஜினீயரிங் பட்டதாரியான பூங்குழலி, கணவர், இரண்டு குழந்தைகளுடன் கோயம்புத்தூரில் வசிக்கிறார்.

உலகத்திலேயே சந்தோஷமான இடம் - கருணாநிதி பேத்தி பூங்குழலி

“அரசியல் தலைவர் கலைஞரைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். கருணாநிதி தாத்தா பற்றிச் சொல்ல எங்களுக்கு ஆயிரம் ஆயிரம் ஆனந்தத் தருணங்கள் இருக்கு. எவ்வளவு பெரிய ஆளுமை அவர்... ஆனா, எங்ககிட்ட ஒரு குழந்தையாதான் இருப்பார். சின்ன வயசுல, தாத்தா எப்போ வருவார்னு நான், தம்பி, தங்கச்சி எல்லோரும் வாசல்லயே காத்திருப்போம். தாத்தா வந்ததும் அவர் மடியில, முதுகுலனு தொத்திப்போம். எங்க அம்மா, ‘தாத்தா ரெஸ்ட் எடுக்கட்டும் விடுங்க’னு எங்களைச் சத்தம் போடுவாங்க. உடனே தாத்தா, ‘விடும்மா, எனக்கு எதுக்கு ரெஸ்ட்?’னு சொல்வார். அப்புறம் என்ன...  டான்ஸ், பாட்டுனு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு வீடே கலகலப்பா இருக்கும்.

தாத்தா என்னை ‘பூங்கி’னுதான் கூப்பிடுவார். என் மழலைப் பாடல்களைக் கைதட்டி ரசிப்பார். ஒருமுறை பள்ளியில் கட்டுரைப் போட்டியில் நான் பரிசு வாங்கினேன். தாத்தா எப்போ வருவார், அவர்கிட்ட இதைச் சொல்வோம்னு இருப்புக்கொள்ளாம இருந்தேன். அவர் வந்ததும் ஓடிப்போய்ச் சொல்ல, அவ்வளவுதான்... தலைக்கு மேலே என்னைத் தூக்கிக் கொஞ்சினார்; கொண்டாடினார். ‘நானும் ஒரு பரிசு தர்றேன்’னு சொல்லி, என்னை நூலகத்துக்குக் கூட்டிட்டுப் போனார். ஒரு திருக்குறள் புத்தகத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்தார். அந்தப் புத்தகத்தைப் பிறந்த வீட்டுச் சீதனமா, பொக்கிஷமா இப்பவும் பத்திரமா வெச்சிருக்கேன்.

ஒருமுறை, தாத்தா என்னை கார்ட்டூன் கேரக்டர்போல வரைஞ்சு கொடுத்தார். அதைப் பார்த்துப் பார்த்து சந்தோஷமான நான், அவரை வரைஞ்சுட்டுப் போய்க் காட்டினேன். ‘நீ என் கண்ணாடியை அழகா வரைஞ்சிருக்க பூங்கி’ன்னு சொல்லிட்டு வாங்கி வெச்சுக்கிட்டார். அவ்ளோ நாசூக்கான ஒரு விமர்சனம். அந்தப் படம் இன்னும் அவர்கிட்ட பத்திரமா இருக்கு.

தாத்தாவுக்குப் பேரன், பேத்திகளை யாராவது திட்டினா பிடிக்காது. ஒருமுறை என் அம்மா, பரீட்சைக்கு ஒழுங்கா படிக்கலைன்னு அருள்நிதியைத் திட்டிட்டு இருந்ததை, தாத்தா அமைதியா பார்த்துட்டே இருந்தார். கொஞ்ச நேரம் கழிச்சு அருளைக் கூப்பிட்டு, அவன் கையில் காசு கொடுத்து, ‘சாக்லேட் வாங்கிக்கோ’னு சொல்லி, அவனைச் சிரிக்க வெச்சார். தாத்தாவுக்கு நாங்க எப்பவும் சந்தோஷமா இருக்கணும். எங்கள்ல யாருக்கச்சும் மூட் அவுட்னா,  மடியில் உட்காரவெச்சு, என்ன, ஏதுனு விசாரிச்சு, அந்தப் பஞ்சாயத்தைத் தீர்த்து, எங்களைச் சிரிக்க வெச்சுட்டுத்தான் விடுவார்.

நான் என் கல்லூரி நாள்களில் சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்குப் படிக்க ஆசைப்பட் டேன். ஆனா, எங்கப்பாவுக்கு அதில் விருப்பமில்லை. ஒருநாள் முழுக்க நான் யார்கிட்டயும் பேசலை, என்னை யாரும் பெருசா கண்டுக்கவும் இல்லை. ஆனா, தாத்தா வீட்டுக்குள்ள வந்த சில நிமிஷங்கள்ல, ‘பூங்கி... என்னாச்சு’னு என் வாடின முகத்தைப் பார்த்தே கண்டு பிடிச்சுக் கேட்டுட்டார். நான் அழுதுட்டே விஷயத்தைச் சொல்ல, அப்பாகிட்ட எனக் காக பர்மிஷன் வாங்கித் தந்தார். ஆனா, திருமணம், குழந்தைகள்னு ஆன பிறகு என் னால எக்ஸாமை க்ளியர் பண்ண முடியலை.

தாத்தாவுக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியம். அதேநேரம், அடுத்தவங்க அவங்களுக்குப் பிடிச்சதைச் செய்யறதைத் தடுக்க மாட்டார். அவர் சாமி கும்பிட மாட்டார். ஆனா, ‘தாத்தா, நீங்க தேர்தல்ல ஜெயிக்க நான் சாமிகிட்ட  வேண்டிக்கிட்டேன்’னு சொன்னா பலமா சிரிப்பார்; தலையை வருடிக்கொடுப்பார்.

யார் வந்து உதவி கேட்டாலும் உடனே செய்துகொடுப்பார். எனக்கு அரசியல் ஓரளவு புரிய ஆரம்பிச்ச வயசில், ‘தாத்தா இவங்க நம்ம கட்சியா... உதவி பண்றீங்களே?’னு கேட்பேன். அதுக்கு அவர், ‘பூங்கி, உதவி கேட்கிறவங்களை மனுஷனா மட்டும்தான் பார்க்கணும். கட்சி, தொகுதினு பார்க்கக் கூடாது’னு சொன்னார். நல்ல விஷயங்களைப் பக்குவமா புரியவைக்கிறதில், தாத்தாவுக்கு இணையான ஒருத்தரை நான் பார்த்ததில்லை.

தினமும் 18 மணி நேரம் உழைக்கும் தாத்தாவைப் பார்க்கவே பிரமிப்பா இருக்கும். தினமும் ஒரு புத்தகம் படிக்கிறது, பாடல்கள் கேட்கிறதுனு இருப்பார். எங்களையும் உட்காரவெச்சு புத்தகத்தை வாசிச்சுக் காட்டுவார், கதை சொல்வார். எந்தச் சூழ்நிலையிலும் எங்களுக்கான நேரத்தை தாத்தா குறைச்சதேயில்லை. வளர வளர நாங்கதான் மற்ற விஷயங்களில் பிஸியாகிட்டோம். தாத்தாவோடு தினசரி செலவழிக்கும் நேரம் குறைஞ்சுடுச்சு.

எனக்குத் திருமணமாகி, புகுந்த வீட்டுக்குப் போக வேண்டிய நேரம் வந்தப்போ, ‘தாத்தா அத்தனை வேலைப்பளுவுக்கு மத்தியிலும், நமக்கான நேரத்தைக் கொடுக்கமா இருந்ததில்லை. ஆனா, நாம வளர்ந்ததும் தாத்தாகூட இருக்கிற நேரத்தைச் சுருக்கிட்டோம். தாத்தாவை ரொம்ப மிஸ் பண்ணிட்டோம்’னு நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டேன். எப்போவெல்லாம் விடுமுறை கிடைக்குதோ, அப்போவெல்லாம் தாத்தா வீட்டுக்கு வந்துருவேன். நான் இந்த உலகத்திலேயே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கிற ஓர் இடம்னா, அது தாத்தா வீடுதான், தாத்தாகூடதான். தாத்தா பக்கத்துல இருக்கும்போது, நான் ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா என்பதெல்லாம் மறந்துபோயிடும். பட்டுப் பாவாடை போட்டுட்டு, தாத்தா கையைப் பிடிச்சு நடை பழகிய குழந்தை பூங்குழலியா மனசளவில் மாறிடுவேன்.

இப்போ தாத்தாவும் ஒரு குழந்தை மாதிரிதான் ஆகிட்டார். அமைதியா ஓய்வு எடுத்துட்டிருக்கார். ஆனாலும், இப்பவும் தினமும் காலையில் யாராவது ஒருத்தர் அவருக்கு நியூஸ் பேப்பர் வாசிக்கிறோம்; தினமும் ஏதாவது ஒரு புத்தகம் வாசிக்கிறோம். நான் சென்னை வரும்போதெல்லாம், ‘பூங்கி அந்தப் பாட்டு பாடு, இந்தப் பாட்டு பாடு’னு கேட்டு ரசிப்பார். அந்த நினைவுகளில்தான் இந்த முறை தாத்தாவுக்கு ‘ஏதோ ஒரு பாட்டு...’ பாடினேன். சின்ன வயசுல தாத்தா எங்களையெல்லாம் எவ்ளோ ஜாலியா வெச்சுக்கிட்டாரோ, அதே மாதிரி இப்போ அவரைப் பார்த்துக்க நினைக்கிறோம். எப்பவும் எல்லோரும் அவரைச் சுற்றி இருக்கணும்னு ஆசைப்படுறார். தினமும் என் அப்பாவும் செல்வி அத்தையும் அவரைப் பார்க்க வரணும். கொஞ்சம் நேரமாகிட்டாலும், ‘எங்கே, எங்கே?’னு கேட்க ஆரம்பிச்சுடுவார். கட்சியிலிருந்து யாராவது பார்க்க வந்திருக்காங்கன்னு சொன்னா போதும், தாத்தா முகத்தில் அப்படியொரு மலர்ச்சி வந்துடும்.

அப்போ, தாத்தா வீட்டுக்கு வந்துட்டுக் கிளம்பும்போது நாங்களெல்லாம் தவிச்சுப் போவோம். சுத்தி நின்னுட்டு, ‘இருந்துட்டுப் போங்க தாத்தா’னு சொல்லிட்டே இருப்போம். இப்போ, ‘தாத்தா, பசங்களுக்கு லீவு முடிஞ்சாச்சு. நான் ஊருக்குப் போயிட்டு வர்றேன்’னு சொன்னதும் அவர் என் கையை இறுகப் பிடிச்சுக்கிட்டார்’’ - சொல்லும் போதே குரல் தழுதழுக்கிறது பூங்குழலிக்கு!