
தமிழ்ப்பிரபா - படம்: ரமேஷ் கந்தசாமி
“ஒரு பிரச்னைக்காகப் போராடுறோம்னா, காலையில பதாகையை ஏந்தி வீதிக்கு வந்துட்டு சாயங்காலம் வீட்டுக்குப் போறதில்லை. முழுமையான தீர்வு கிடைக்கிறவரை அதைக் கவனிக்கணும்.`இவங்க போராடட்டும். வர்றத சொகுசா நாம அனுபவிக்கலாம்’னு மிடில் க்ளாஸ் நினைக்குது. அது மாறணும்” எனக் குரல் உயர்த்திச் சொல்லும் இசை, பல அச்சுறுத்தல்களுக்கிடையேயும் மணற்கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் போராளி.
``காவிரி ஆத்துக்குப் பக்கத்துலேயே எங்க வீடு. சின்னவயசுல விளையாடிக் களிச்ச இடம். தினமும் ஆத்துல வந்து குளிப்போம். காவிரியில தண்ணி வத்துச்சுன்னா, அக்கரைக் கோயில் திருவிழாவுக்கு இக்கரையிலிருந்து நடந்தே போவோம். சர்க்கரை மாதிரி இருக்கிற மணல் மேல புரண்டு, புழுதி பறக்க விளையாடிய பொழுதுகளை நினைக்கையிலே அவ்ளோ ஏக்கமா இருக்கு! ஆடி மாசத்துல நுங்கும் நுரையுமா பொங்கின எங்க ஆத்தங்கரை, இன்னிக்கு அப்படியா இருக்கு? ஆறும் ஊரும் ஒன்றி வாழ்ந்த அந்தக் காலத்தை இப்போ நினைச்சாலும் ஆத்திரமும் அழுகையுமா வருது” என மூச்சிரைக்கப் பேசிவிட்டு, சற்று அமைதியானார் இசை.

சிறுமியாகத் தான் விளையாடி மகிழ்ந்த ஆறும் ஆற்று மணலும் கண்ணெதிரே சூறையாடப்ப டுவதைப் பார்க்கச் சகிக்காமல் மிகுந்த மன உளைச்சலில் செய்வதறியாது தவித்தார். தனியாக இதைத் தடுத்து நிறுத்த முடியாது என்று உணர்ந்த இசை, மணற்கொள்ளைக்கு எதிராகப் போராடுகிறவர்களுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தார். `காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பில் முழு ஈடுபாட்டுடன் தன்னை இணைத்துக்கொண்டார். நாளடைவில், மணற்கொள்ளைக்கு எதிராக இசை கலந்துகொள்ளாத போராட்டமே இல்லை என்றானது.
பல கொலைமிரட்டல்கள், தாக்குதல்கள், கைது, லத்தியடி என எதற்குமே இசை அஞ்சியதில்லை. முகிலன் போன்றோரின் ஊக்கம், இசையை இன்னும் வலுப்படுத்தியது. கரூர் மாவட்டத்தில் உள்ள 12 மணல் குவாரிகளில் பத்து மூடப்பட்டதில் இசையின் பங்களிப்பு முக்கியமானது.
மணற்கொள்ளைக்கு எதிராக மட்டுமல்லாது, நூறு வருடப் பழைமைவாய்ந்த ஆலமரம் வெட்டப்பட்டதற்கு எதிராக, பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதற்கு எதிராக, மீனவர் பிரிட் ஜோவைச் சுட்டுக்கொன்ற தற்கு எதிராக , காவிரி நீர் உரிமை, நெடுவாசல், கதிராமங்கலம், கூடங்குளம் மக்கள்மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் தனிப்பிரிவு ஆகியோருக்குத் தொடர்ந்து மனு அளித்துவருவது எனப் பல போராட்டங்களிலும் களம் நிற்கிறார். சமீபத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் நூலிழையில் உயிர்பிழைத்தி ருக்கிறார் இசை.
``ஒரு தனியார் நிறுவனத்தை எதிர்த்துப் போராடிய மக்களை அரசாங்கமே சுட்டு வீழ்த்தின பெருமை, காலத்துக்கும் நிற்கும்” எனச் சொல்லிக்கொண்டிருந்த இசை, தன் எதிரே சுடப்பட்டு வீழ்ந்தவர்களைப் பற்றிக் கூறும்போது மீண்டும் அவர் கண்கள் கலங்கின. எம்.சி.ஏ பட்டதாரியான இசை, மக்கள் பிரச்னைகள் சார்ந்து போராடுவதையே தன் தினசரி வாழ்வாக்கிக்கொண்டதற்கு, குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு. போராட்டங்கள், அதற்கான தயாரிப்புகள் ஆகியவற்றுக்கு இடையே பகுதி நேரமாக DTP வேலைகள் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்துவருகிறார்.
``வீரப்பெண்மணிகளைப் பற்றி கதையா சொன்னா சுவாரஸ்யமா கேட்கிற இந்தச் சமூகம், அவளையே பல போராட்டங்கள்ல பார்த்தா `வீட்ல தண்ணி தெளிச்சுவிட்டுட்டாங்கபோல’னு ஏளனமாப் பேசுது. இதுக்கெல்லாம் துவள்ற பொண்ணு இல்லை நான். `அதிகாரவர்க்கம், எளியவர்களை ஒடுக்க நினைக்கிற ஒவ்வொரு முறையும், அதைத் தடுக்கிற முதல் கை என்னுடையதா இருக்கணும்’னு நினைப்பேன்” என்ற இசையின் குரலில் வெளிப்பட்ட உறுதி நம் எல்லோருக்கும் தேவையானது.