
மணல் கொள்ளையைத் தடுத்தால் மரணம் பரிசு! - திருச்சி அதிர்ச்சி
‘மணல் கொள்ளைக்குத் துணைபோகும் அதிகாரிகள்மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுங்கள்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவுக்குப் பிறகு, புதுவிதமான டெக்னிக்கை திருச்சி போலீஸ் கையாள்கிறது. மணல் கொள்ளை குறித்துப் புகார் செய்பவர்கள்மீது வேறு ஏதாவது வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடும் டெக்னிக்தான் அது! இதுதவிர, மணல் கொள்ளையைத் தடுக்கப் போனவர்கள் மரணமடைந்த சம்பவமும் நிகழ, திகிலில் உறைந்துகிடக்கிறது திருச்சி.

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த திண்ணக்கோணத்தைச் சேர்ந்தவர் சிறுசோழன். விவசாயியான இவர், அய்யாற்றில் நடைபெறும் மணல் கொள்ளை குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்து வந்தார். மணல் கடத்தலில் ஈடுபட்ட தமிழ்செல்வன், பழனிசாமி ஆகியோர் சிறுசோழன்மீது தாக்குதல் நடத்தினர். காயமடைந்த சிறுசோழன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவர் உயிரிழந்தார். இந்தக் கொடூரம் நிகழ்ந்த சில நாள்களில், திருச்சி தில்லை நகர் பகுதி வழியாக மணல் கடத்திய லாரியை மடக்கிப் பிடித்த உறையூர் வருவாய் அலுவலர் சுரேஷ்மீது, திருச்சி மாவட்ட அ.தி.மு.க மீனவர் அணிச் செயலாளர் கண்ணதாசன் தலைமையிலான கும்பல் தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை (குரூப் 2) நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரவி, ‘‘மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சிசெய்யும் அதிகாரிகள்மீது தாக்குதல் தொடர்கிறது. கலெக்டர் உத்தரவின்படி, நாங்கள் இரவு பகலாக மணல் கடத்தலைத் தடுக்கும் பணியைச் செய்கிறோம். ஆனால், எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பல இடங்களில் குற்றவாளிகளைப் பிடித்துக்கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து கலெக்டரிடம் புகார் கொடுத்தோம். அவர் நேரடியாக போலீஸ் கமிஷனருக்குப் பரிந்துரை செய்தார். சம்பவம் நடந்து பல நாள்களாகியும் முக்கியக் குற்றவாளியான கண்ணதாசன் உள்ளிட்டோர் கைதுசெய்யப்படவில்லை. டிரைவரை மட்டும் கைது செய்துவிட்டுக் கணக்குக்காட்டுகிறார்கள்’’ என்றார்.
தலைமறைவான அ.தி.மு.க பிரமுகர் கண்ணதாசன், அமைச்சர் ஒருவருக்குப் பினாமியாக இருப்பதாகவும் அவரிடம் கண்ணதாசன் சரணடைந்த தால் காப்பாற்றப்படுகிறார் என்றும் தகவல் வெளியானது. இந்தச் சூழ்நிலையில், கண்ணதாசன் முன்ஜாமீனும் வாங்கிவிட்டார்.

மருங்காபுரி தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ சின்னச்சாமி, யாரிடமோ செல்போனில் பேசிய ஆடியோ ஒன்று வாட்ஸ்அப் குரூப்களில் வைரலாக ஓடிக்கொண்டிருந்தது. ‘அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், மணப்பாறை தாசில்தார் ஒருவருக்கு வெள்ளிக் குத்துவிளக்கும் ஒரு லட்ச ரூபாய் பணமும் கொடுத்து விட்டு, ராத்திரி பகலாக மணல் கொள்ளையில் ஈடுபடுகிறார்’ என அதில் சின்னச்சாமி பேசியிருந்தார்.
சமூக நீதிப் பேரவையின் மாவட்டத் தலைவர் ரவிக்குமார், ‘‘திருச்சி காவிரி, கொள்ளிடம் மட்டுமல்லாமல், குண்டாறு, பாம்பாறு, கோரையாறு உள்ளிட்ட காட்டாறுகளிலும்கூட மணல் கொள்ளை அதிகமாக நடக்கிறது. இதன் பின்னணியில் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் உள்ளனர். காவிரி, கொள்ளிடம் ஆற்றோரப் பகுதிகளில் உள்ள நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துவைத்துக்கொண்டு, ஆள் அரவம் இல்லாத நேரத்தில் ஆற்றில் இருந்து மணலை அள்ளி அந்த நிலங்களில் குவித்து வைத்து கர்நாடகாவுக்கும், கேரளாவுக்கும் சப்ளை செய்கிறார்கள்.
ஸ்ரீரங்கம், மணிகண்டம் பகுதிகளில் நடக்கும் மணல் கொள்ளை குறித்துத் தகவல் சொன்னால், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பணத்தை வாங்கிக்கொண்டு மணல் லாரிகளைப் பத்திரமாக வழியனுப்பி வைக்கிறார்கள். ஒரு லோடு மணலை 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 70 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறார்கள். கடத்தல்காரர்கள் போலீஸைக் கைக்குள் போட்டுக் கொண்டு காரியம் சாதிக்கிறார்கள். மணல் கொள்ளை குறித்து யாராவது தகவல் சொன்னால், உடனே அந்தத் தகவல் கடத்தல் கும்பலுக்குப் போய்விடுகிறது. இதனால், தகவல் சொல்பவர்கள்மீது தாக்குதல் தொடர்கிறது.

திருச்சி கலெக்டர் ராசாமணி, தொடர்ந்து மணல் லாரிகள், பைக்குகளைப் பிடித்தாலும், கீழ் மட்ட அதிகாரி களும், போலீஸாரும் இதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக, மணல் கொள்ளை குறித்துத் தகவல் கொடுத்த கலிமங்கலம் ஃபெலிக்ஸ், செவந்திமங்கலம் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் உள்ளிட்டோரை வேறு வழக்குகள் போட்டுக் கைது செய்துள்ளனர். மணல் கொள்ளையைத் தடுக்க மாவட்ட கலெக்டர் எடுத்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்த சார் ஆட்சியர் கமல் கிஷோர், சில தினங்களுக்கு முன் மாற்றப் பட்டுள்ளார். மணல் கொள்ளைக்கு எதிராகச் செயல்படும் அதிகாரிகள் மாற்றப்படுவது திருச்சியில் தொடர்கிறது’’ என்றார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அலுவலர்கள், ‘‘சார் ஆட்சியர் மாற்றப் பட்டது அரசின் முடிவு. மாவட்ட நிர்வாகம் மணல் கொள்ளையைத் தடுக்க, இரவு பகல் பாராமல் அதிகாரிகளை முடுக்கிவிட்டுப் பணி செய்கிறது. இதுவரை மாவட்டம் முழுக்க 50-க்கும் மேற்பட்டோர்மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. எட்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மணல் கொள்ளை குறித்துத் தகவல் சொல்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கவே செய்கிறது. அதனைத் தடுக்கப் பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்கள்.
- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: தே.தீட்ஷித்