மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமை என்பது இதுதான்”

தெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமை என்பது இதுதான்”
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமை என்பது இதுதான்”

தமிழ்ப்பிரபா - படம்: பா.காளிமுத்து

“உள்ளே வாங்க” என எங்களை வரவேற்ற ஹர்ஷாவுக்கு, பார்வையில்லை; நடக்கவும் முடியாது. அந்த இயலாமையின் சாயல் தெரியாதவண்ணம் முகம் முழுக்கப் புன்னகையுடன் எங்களை வரவேற்றார்.

ஒன்றரை வயதில் மழலை நடையில் வீடு முழுவதும் வலம் வந்த அந்தக் குண்டுக் குழந்தைக்கு, திடீரென மூளைக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. தவறான சிகிச்சையால் பார்வையும் நடையும் பறிபோய், 26 வருடங்கள் ஆகின்றன. இவ்வளவு சிறிய வயதில் பாதிப்புக்குள்ளான குழந்தை, தன்னிடம் இருக்கும் குறைபாட்டைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சாதிப்பவை ஏராளம்!

`பிரெய்ல் ரீடிங், பிரெய்ல் ரைட்டிங்’ போட்டிகளில் தேசிய அளவில் வெற்றிபெற்ற ஹர்ஷா, கட்டுரை எழுதுதல், க்விஸ் காம்படிஷன், கார் ரேலி எனப் பல போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். அமிதாப்பச்சன் நடத்திய ‘குரோர்பதி’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கடைசிக்கட்டத்தில் முடியாமற்போனதன் வருத்தம், இன்றளவும் ஹர்ஷாவிடம் இருக்கிறது.

தெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமை என்பது இதுதான்”

இதுதவிர, செல்போன் நிறுவனங்கள் நடத்தும் ஐ.வி.ஆர் கேம்ஸில் பல முறை வெற்றிபெற்றி ருக்கிறார். க்விஸ் போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு வெற்றிபெற்று வருகிறார்.

போட்டிகளில் கலந்துகொள்வது ஒருபக்கம் என்றாலும், படிப்பையும் அவர் விட்டுவிடவில்லை. எத்திராஜ் கல்லூரியில் பி.ஏ. இங்கிலீஷ் கம்யூனிகேஷன் முடித்தார். பிறகு, எம்.ஏ. ஹ்யூமன் ரைட்ஸ் முடித்து, தற்போது பிஹெச்.டி படிப்பதற்கான முயற்சியில் இருக்கிறார்.

``எனக்கு இருக்கிறதை நான் குறையாவே பார்க்கலை. ஏன்னா, இது குறைதான்னு அறிய முடியாத வயசுலேயே எனக்கு இதெல்லாம் நடந்துடுச்சு” எனச் சொல்லும்போது ஹர்ஷாவின் முகத்தில் எந்த சஞ்சலமும் இல்லை.

தன்னைப்போல் உள்ளவர்களுக்கு சமூகத்தில் எல்லா உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, விரைவில் தொண்டு நிறுவனம் ஒன்றையும் ஹர்ஷா ஆரம்பிக்கவிருக்கிறார்.

``நான் சொல்ற `உரிமை’ங்கிற வார்த்தையை நீங்க ரொம்பப் பெருசால்லாம் கற்பனை பண்ணிக்க வேணாம். நீங்க ஒரு கட்டடம் கட்டும்போதோ, புதுசா ஒரு தொழில்நுட்பத்தைக் கொண்டுவரும்போதோ, நாங்களும் அதைப் பயன்படுத்தணும், எங்களுக்கும் அந்த உரிமை இருக்குன்னு உங்க மனசுல ஒரு எண்ணம் வரணும்” என்று ஹர்ஷா பேசப் பேச, முகத்தில் பெருமையும் கண்களில் நீரும் பெருகப் பார்த்துக்கொண்டிருந்தார் அருகில் நின்றிருந்த அவர் அம்மா.

``22 வருஷம் கழிச்சு எங்களுக்குப் பிறந்த ஒரே குழந்தை இவள். இந்த மாதிரி ஆகிட்டாளேன்னு ஆரம்பத்துல நான் அழுதழுது செத்துப்போனேன். ஆனா, என் பொண்ணுக்கு உலகம் புரிய ஆரம்பிச்ச பிறகு, ஒருநாளும் அவள் என்னைக் கலங்கவிட்டதில்லை. சொல்லப்போனா, நிறைய இடங்கள்ல எங்கள நிக்கவெச்சு பெருமைப் படுத்தியிருக்கா” என்றவரின் கண்கள் மீண்டும் கலங்கின.

தான் இன்னும் நிறைய போட்டிகளில் கலந்து வெற்றிபெற வேண்டும், நிறைய படிக்க வேண்டும், தன்னைப்போல உள்ளவர்களுக்கு அமைப்பு ரீதியாக நிறைய உதவ வேண்டும் என்று பல திட்டங்களும் கனவுகளும் ஹர்ஷாவின் பேச்சில் நிரம்பியிருக்கின்றன.

``இதெல்லாம் நான் செய்ய, எனக்குத் தேவையானது ஒண்ணே ஒண்ணுதான். `உன்னால முடியும்’னு சொல்றவங்க எப்பவும் என்னைச் சுத்தி இருக்கணும், அதுபோதும்” என அழுத்தமாகச் சொல்லிப் புன்னகைத்தார், ஹர்ஷா.

அந்தப் புன்னகை அழகானது!