அலசல்
Published:Updated:

ஒரே ஒருவருக்காக... ஓடையை ஆக்கிரமித்து பாலம்!

ஒரே ஒருவருக்காக... ஓடையை ஆக்கிரமித்து பாலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரே ஒருவருக்காக... ஓடையை ஆக்கிரமித்து பாலம்!

ஒரே ஒருவருக்காக... ஓடையை ஆக்கிரமித்து பாலம்!

ந்து மணி நேரத்தில் ஒரு பாலத்தையே கட்டி முடிக்கிறது ரயில்வே. ஐந்தாறு ஆண்டுகள் ஆனாலும் பல பாலங்களை இழுத்தடிக்கிறது தமிழக அரசு. ஆனால், தனிநபர் ஒருவரின் நிலத்துக்குச் செல்வதற்காக ஓடையை ஆக்கிரமித்து, நீதிமன்ற உத்தரவையும் மீறிப் பாலம் கட்டிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. மக்கள் எதிர்ப்பைமீறி, போலீஸ் கண்காணிப்பில் அவசரமாக இதைக் கட்டக் காரணம், மேலிடத்தின் ஆர்வம்தான்.

ஒரே ஒருவருக்காக... ஓடையை ஆக்கிரமித்து பாலம்!

கோவை விமான நிலையம் அருகே காளப்பட்டியில் இரா.மோகன் நகர் உள்ளது. அங்குதான் இப்படிப் பாலம் கட்டப்படுகிறது. இதற்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்திவரும் ராயப்பனிடம் பேசினோம். ‘‘இங்கு தனியாருக்குச் சொந்தமாக உள்ள 4.39 ஏக்கர் நிலத்துக்குப் போவதற்காக ஓடையை மறித்துப் பாலம் கட்டுகிறார்கள். 20 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலம் சமீபத்தில் சேலத்தைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரால் வாங்கப்பட்டது. இவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராம். இங்கே பாலம் அமைக்க ஏப்ரல் 12-ம் தேதி கோவை கலெக்டர் அனுமதி வழங்கினார். மே மாதமே பணிகள் தொடங்கின. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். ஜூன் 14-ம் தேதி ‘பாலம் கட்டக்கூடாது’ என்று நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸார் வந்து, பாலம் கட்டப் பாதுகாப்புக் கொடுத்தார்கள். எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை’’ என்றார் ராயப்பன்.

ஒரே ஒருவருக்காக... ஓடையை ஆக்கிரமித்து பாலம்!

சமூக ஆர்வலர் தியாகராஜன், ‘‘வருவாய்த் துறை ஆவணத்தில், இதை ஜல்லிக்கல் ஓடை என்று குறிப்பிட்டுள்ளனர். இதில் 107 அடி நீளத்துக்கு ஓடையை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து பாலம் அமைக்கின்றனர். இரவு பகலாக, போலீஸ் பாதுகாப்புடன் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. இந்தப் பாலம் கட்டப்பட்டால், மழை நாள்களில் எங்கள் பகுதியே தண்ணீருக்குள் மூழ்கிவிடும்’’ என்றார் வேதனையாக.

கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் இந்தப் பகுதி மக்கள் புகார் செய்தார்கள். ‘‘அதைத் தொடர்ந்து அவர் யாரிடமோ பேசினார். பிறகு எங்களிடம் திரும்பி, ‘இது பெரிய இடத்து விவகாரம். என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நீங்க சட்டரீதியா பார்த்துக்கோங்க’ என ஆறுக்குட்டி சொல்லிவிட்டார். முதல்வர் அலுவலகத்திலிருந்து சீனியர் பி.ஏ ஒருவர் அதிகாரிகளிடம் இதற்காகப் பேசுகிறாராம்’’ என்கிறார்கள் காளப்பட்டி மக்கள்.

ஒரே ஒருவருக்காக... ஓடையை ஆக்கிரமித்து பாலம்!

பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் ஜெயப்பிரகாஷ், ‘‘அணுகுபாதை போடக்கூடாது என்றுதான் நீதிமன்றம் தடை போட்டுள்ளது. நாங்கள் அணுகுபாலம்தான் கட்டிவருகிறோம்” என்றார். பொதுப்பணித்துறை கோவை மண்டலத் தலைமைப் பொறியாளர் எத்திராஜ், ‘‘பாதை, பாலம் எல்லாம் ஒன்றுதான். ஓடையைச் சேதப்படுத்தாமல் பாலம் கட்டத்தான் நாங்கள் அனுமதி வழங்கினோம். ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடர்பாக, எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை. விசாரிக்கிறேன்’’ என்றார்.

நிலத்தை வாங்கியுள்ள சண்முகவேலிடம் பேசினோம். ‘‘கலெக்டர் முறைப்படி அனுமதி கொடுத்துள்ளார். இதில் அரசியல் அழுத்தம் எல்லாம் இல்லை. நீதிமன்றம் அணுகு பாதைக்குத்தான் தடை விதித்துள்ளது’’ என்றார் அவர். நீர்நிலையைவிட தனியாரின் நிலம்தான் முக்கியமா அரசே?

- இரா.குருபிரசாத், படங்கள்: தி.விஜய்