அலசல்
Published:Updated:

அறிவிச்சு ஒரு வருஷம் ஆகுது... எப்ப கொடுப்பீங்க சினிமா விருது?

அறிவிச்சு ஒரு வருஷம் ஆகுது... எப்ப கொடுப்பீங்க சினிமா விருது?
பிரீமியம் ஸ்டோரி
News
அறிவிச்சு ஒரு வருஷம் ஆகுது... எப்ப கொடுப்பீங்க சினிமா விருது?

அறிவிச்சு ஒரு வருஷம் ஆகுது... எப்ப கொடுப்பீங்க சினிமா விருது?

விருது அறிவிக்கவே ஆறு வருஷங்கள் ஆகின. அப்படி அறிவித்த விருதையும் ஒரு வருடமாகக் கொடுக்கவில்லை எடப்பாடி அரசு.

தரமான திரைப்படங்களை ஊக்கப்படுத்த ஆண்டுதோறும் சிறந்த படங்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கப்படும். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் இந்த விருதுகள் கிடப்பில் போடப்பட்டன. ஒரு வழியாக, 2009 முதல் 2014 வரை ஆறு ஆண்டுகளுக்கான சினிமா விருதுகளை, கடந்த ஆண்டு ஜூலை 13-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். வரும் 13-ம் தேதியுடன் ஓராண்டு ஆகப்போகிறது. தன் ஆட்சியின் ஓராண்டு சாதனையைக் கொண்டாடிய எடப்பாடிக்கு இந்த அறிவிப்பு மறந்து போய்விட்டதா? ‘முதல்வரான பிறகு 4,903 கோப்புகளில் கையெழுத்திட்டார்’ என எடப்பாடிக்கு வெண்சாமரம் வீசுகிறவர்கள், இந்த விருதுக் கோப்பையையும் பட்டியலில் சேர்த்தார்களா எனத் தெரியவில்லை.

அறிவிச்சு ஒரு வருஷம் ஆகுது... எப்ப கொடுப்பீங்க சினிமா விருது?

விருது அறிவிப்புத் தொடர்பாக வெளியிடப் பட்ட அரசாணையில், ‘முதல்வர் தலைமையில் விரைவில் நடைபெறவிருக்கும் விழாவில், இந்த விருதுகள் அனைத்தும் வழங்கப்பட உள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசு ‘விரைவாக’ செயல்படுவதற்கு இந்தச் சினிமா விருதுகள் அறிவிப்பு ஒன்றே போதும். ‘பசங்க’ படத்துக்கு 2009-ம் ஆண்டின் சிறந்த படம் என விருது அறிவித்தார்கள். அந்தப் படத்தில் சிறுவனாக நடித்த ஸ்ரீராம் இப்போது வளர்ந்து ஹீரோவாகவே ஆகிவிட்டார். ஆனால், விருதுதான் இன்னும் போய்ச் சேரவில்லை.

சின்னத்திரை விருதுகளும் அதோகதியில்தான் உள்ளன. நெடுந்தொடர்கள், குறுந்தொடர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு 2009 முதல் முதல் 2013 வரை வழங்குவதற்கான அறிவிப்பும் சினிமா விருது அறிவிப்புடன்தான் சேர்த்து வெளியிடப்பட்டது.

சினிமா விருதுகளுடன் அண்ணா, என்.எஸ்.கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர், ராஜா சாண்டோ, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், கண்ணதாசன், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களில் ‘கலைத்துறை வித்தகர் விருது’களும் வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதுகளையும் கொடுக்காமல் வைத்திருக்கிறார்கள். விருதுகளைப் பெறுகிறவர்களுக்குச் செய்யப்படும் மரியாதை அல்ல இது. அ.தி.மு.க ஆட்சியின் காரண கர்த்தாக்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களில் உள்ள விருதுகளுக்கு ஆட்சியாளர்களால் செய்யப்பட்ட அவமரியாதை.

சிறிய முதலீட்டில் தயாரித்து வெளியிடப்படும் தரமான திரைப்படங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏழு லட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்கும் திட்டம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சினிமா விருதுகள் போலவே இந்த மானியமும் பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. ‘2007 முதல் 2014-ம் ஆண்டு வரையில் வெளியான தரமான 149 படங்களுக்கு தலா ஏழு லட்சம் ரூபாய் வீதம் 10.43 கோடி ரூபாய் வழங்கப்படும்’ என்ற அறிவிப்பு 2018 ஜனவரி 2-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை நிறைவேற்றுவதற்கு அடையாளமாக 10 தயாரிப்பாளர்களுக்குக் காசோலைகளை கடந்த மாதம் வழங்கியிருக்கிறார் எடப்பாடி. 

அறிவிச்சு ஒரு வருஷம் ஆகுது... எப்ப கொடுப்பீங்க சினிமா விருது?

‘‘மானியம் வழங்கப்பட்டு சினிமா விருதுகள் மட்டும் வழங்கப்படாததற்குக் காரணம் இருக்கிறது’’ என வில்லங்கமாகச் சிரிக்கிறார்கள் செய்தித் துறையினர். ‘‘சிறந்த படங்களுக்கு முதல் பரிசு 2 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு ஒரு லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசு 75 ஆயிரம் ரூபாய். அதோடு நினைவுப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா ஐந்து பவுன் தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும். இதற்கான செலவுகள் குறைவு. ஆனால், மானியப் படங்களுக்குச் செலவு அதிகம். செலவு குறைவான சினிமா விருதுகளை முதலில் அளிக்காமல், அதிகச் செலவு பிடிக்கும், மானியத் தொகையை வழங்குவதில் அவசரம் காட்டியிருக்கிறார்கள். படங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏழு லட்சம் ரூபாய் மானியம் தரப்படுகிறது. மானியம் பெறும் படங்களை எடுத்த தயாரிப்பாளர்கள் அரசு தரப்பைக் ‘கவனித்ததுமே’ அவர்களுக்கு செக் வழங்கப்படும். இதற்காக, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் செய்தித்துறையின் முக்கியப் புள்ளி ஒருவர் பேசுகிறார். இதில் லாபம் கிடைப்பதால்தான் வேகம் காட்டுகிறார்கள்’’ என்றார்கள் அதிகாரிகள்.

அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டாகியும் விருது வழங்காத எடப்பாடி பழனிசாமிதான், தன் ஆட்சியின் ஓராண்டு சாதனையைக் கோலாகலமாகக் கொண்டாடினார். இதற்கு மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் விரய மானது. ஓராண்டு சாதனைக் கொண்டாட்டத்தில் ‘அம்மாவின் வழியில் நல்லாட்சி - அதற்கு ஓராண்டுச் சாதனையே சாட்சி’, ‘சரித்திரம் போற்றும் சாமானிய மக்களின் முதல்வர்’, ‘விவசாயிகளின் தோழர்’ என்ற பெயர்களில் குறும்படங்களையும் வெளியிட்டது செய்தித் துறை.  எடப்பாடியின் புகழ்பாட வரிப்பணத்தையும் உழைப்பையும் செலுத்தும் செய்தித் துறை, சினிமா விருதுகள் வழங்குவதிலும் அக்கறை காட்டுமா?

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி