மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை? - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி - 10

சட்டம் பெண் கையில்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில் ( யாழ் ஶ்ரீதேவி )

சட்டம் பெண் கையில்ஓவியம் : கோ.ராமமூர்த்தி

அன்புக்கும் சட்டத்துக்கும் இடையில் அல்லாடும் இரண்டாவது மனைவியரின் பயணங்கள், துயரங்கள் நிறைந்தவை. ஆணின் நேசத்துக்காகச் சமூக அவமானங்களைத் தாங்கிக்கொண்டு இரண்டாவது மனைவியாக வாழும் அந்தப் பெண்ணின் உரிமைகளைச் சட்டம் எப்படி அணுகுகிறது? இரண்டாவது மனைவிக்கு உள்ள சட்ட உரிமைகள் என்னென்ன?

பழைமையான சட்டங்கள், கணவன் உயிரோடு இருக்கும்போது மனைவி இன்னொரு திருமணம் செய்துகொள்வது குற்றம் என்றன. அதுவே மனைவி உயிரோடு இருக்கும்போது கணவன் இன்னொரு திருமணம் செய்துகொள்வதைக் கண்டுகொள்ளவில்லை. இந்து திருமணச் சட்டங்கள் உருவான பிறகுதான், இரண்டா வது திருமணத்துக்கான கட்டுப்பாடுகள் ஆணுக்கு விதிக்கப்பட்டன.

இப்போது ஊரறியச் செய்துகொண்டாலும் கூட, இரண்டாவது திருமணம் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

ஓர் ஆண் இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொள்வதைக் கூடாஒழுக்கமாக, தண்டனைக்குரிய குற்றமாகச் சட்டம் கருதுகிறது.

இரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை? - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி - 10

இரண்டாவது திருமணத்தை எப்போது சட்டம் அங்கீகரிக்கிறது?

 *  ஒருவர், தன் வாழ்க்கைத்துணை உயிருடன் இல்லாதபட்சத்தில், அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டபட்சத்தில் செய்துகொள்ளும் திருமணத்துக்கு மட்டுமே சட்ட அங்கீகாரம் கிடைக்கும்.

* முதல் மனைவி உயிரோடு இருந்து, அவரிடம் விவாகரத்து வாங்காமல் இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால், அது சட்டப் படியான திருமணம் ஆவதில்லை.

* முதல் மனைவி இருப்பதை மறைத்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வது, முதல் மனைவியின் சம்மதம் பெற்று இரண்டாவது திருமணம் செய்துகொள்வது, பெற்றோர், உற்றார் மற்றும் முதல் மனைவியின் முன்னிலையில் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது, முறைப்படி நீதிமன்றத்தில் விவாகரத்து பெறாமல், திருமணப் பந்தத்தில் இருந்து விடுதலை அளிப்பதாக முத்திரைத் தாளில் முதல் மனைவி எழுதிக் கொடுத்ததை ஆதாரமாகக்கொண்டு இரண்டாவது திருமணம் செய்துகொள்வது... இப்படிப்பட்ட காரணங்களால் இரண்டாவது திருமணத்தை நியாயப்படுத்தினாலும், அது சட்டத்தைப் பொறுத்தவரை அங்கீகாரம் அற்றதே.

இரண்டாவது திருமணம் குறித்து இந்து திருமணச் சட்டம் என்ன சொல்கிறது?

இந்து திருமணச் சட்டம் 1955 பிரிவு 11-ல் இப்படிக் கூறப்பட்டுள்ளது...

* முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் நடந்திருந்தால் பிரிவு 17-ன்படி தண்டனை உண்டு.

* இக்குற்றத்துக்கான தண்டனைகள் குறித்து இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 494, 495 மற்றும் 415-ன் கீழ் உள்ள பிரிவுகளில் விளக்கப்பட்டுள்ளன.

* இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஆணுக்குச் சுமார் ஏழு ஆண்டுகள் மற்றும் பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

* தான் திருமணமானவன் என்கிற உண்மையை மறைத்து, ஏமாற்றி ஒரு பெண்ணைத் திருமணம் செய்தவராக இருந்தால், மோசடிக் குற்றத்துக்காகவும் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

புகார் கொடுக்கும் உரிமை மனைவிக்கே!

தன் கணவரின் சட்டத்துக்குப் புறம்பான இரண்டாவது திருமணம் குறித்து புகார் அளிக்கும் உரிமை, அவரின் முதல் மனைவிக்கே உள்ளது. பல சூழல்களில், முதல் மனைவி அதைச் சட்டப் போராட்டமாக முன்னெடுக்காததுதான் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் தைரியத்தை ஆண்களுக்குக் கொடுக்கிறது.

சமூக அந்தஸ்து, ஜீவனாம்சம், சொத்துரிமை, பென்ஷன், அரசின் கருணை வேலை, வாரிசு சான்றிதழ் போன்ற வற்றில் தனக்கும் உரிமை வேண்டும் என்று இரண்டாவது மனைவி சட்டப் போராட்டத்தைத் தொடங்கும்போதுதான், இரண்டாவது மனைவியைச் சட்டம் அணுகும் விதம் வெளிச்சத்துக்கு வருகிறது.

இரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை? - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி - 10

இரண்டாவது மனைவி... உரிமைகள்?

* இரண்டாவது மனைவி, தன் கணவரின் முன்னோர் சொத்தில் உரிமை கோர முடியாது.

*  கணவர் சுயமாகச் சம்பாதித்த சொத்தை இரண்டாவது மனைவிக்கு உயில் எழுதி வைக்கலாம். இரண்டாவது மனைவிக்கு சட்டப்படி மனைவி என்கிற உரிமை இல்லை; அதனால் சொத்துரிமை இல்லை என்று மறுக்க முடியாது.

* ஜீவனாம்சத்தைப் பொறுத்தவரை வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டே தீர்ப்பளிக்கப் படுகிறது.

* பென்ஷன், அரசின் கருணை வேலை, அரசு சலுகைகள்... இவற்றுக்கெல்லாம் இரண்டாவது மனைவி உரிமை கோர முடியாது.

இப்படியாக இரண்டாவது மனைவிக்கான உரிமைகள் பாரபட்சமாக இருந்தாலும், ஓர் ஆணின் முடிவால் இரண்டாவது மனைவியாக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சில வழக்குகளில், நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. ‘இவர் சட்டப்படியான மனைவி இல்லை’ என்று சட்டப்பிரிவுகள் கூறினாலும், சம்பந்தப்பட்ட பெண்மீது கருணை கொண்டு இரண்டாவது மனைவிக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் எழுதிய சில தீர்ப்புகளைப் பார்ப்போம்.

காவலரின் இரண்டாவது மனைவி (சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த ரிட் வழக்கு - டபிள்யூ.பி.எண் - 15806/15)

பிரபாகரன் (பெயர்கள் மாற்றப்பட்டுள் ளன), காவல் துறையில் தலைமைக் காவலர். அவரின் முதல் திருமண வாழ்க்கை திருப்தியாக அமையவில்லை. திருமணமான இரண்டாண்டுகளில் பிரபாகரன் மனைவியைப் பிரிந்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. பின்னர், கலாவை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்து, 28 ஆண்டுகளுக்குப் பிறகுதான் விவாகரத்து பெற்றார்.

பிரபாகரன் இறப்பதற்கு நான்காண்டுகளுக்கு முன்பாக, தன் இரண்டாவது மனைவி கலாவைத் தனக்கு நாமினியாக நியமித்தார். பிரபாகரன் இறந்த பின்னர் குடும்ப பென்ஷன் தொகை கேட்டு கலா விண்ணப்பம் செய்தார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதனால், கலா ரிட் வழக்கு தொடர்ந்தார். அப்போது முதல் மனைவியும் உயிருடன் இல்லை. ‘இப்போது அரசு ஊழியரின் முதல் மனைவி உயிருடன் இல்லை என்றாலும், அவர் உயிரோடு இருந்தபோது அந்தத் திருமண பந்தத்தை சட்டப்படி முறித்துக்கொள்ளாமல் இரண்டாவதாக கலாவை பிரபாகரன் திருமணம் செய்துகொண்டது சட்டத்துக்குப் புறம்பான செயல். இதனால் அவருக்கு பென்ஷன் தொகையை வழங்க முடியாது’ எனக் காவல் துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

‘முதல் மனைவி உயிரோடு இருந்தபோதே இரண்டாவது திருமணம் நடந்தது உண்மையாக இருந்தாலும், கலா அவருடன் 35 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துள்ளார். முதல் மனைவியிடமிருந்து விவாகரத்தும் கிடைத்துவிட்டது. எனவே, பிரபாகரன் இறந்த நாளிலிருந்து இந்நாள் வரை நிலுவையில் உள்ள பென்ஷன் தொகையை கலாவுக்கு 12 வார கால அவகாசத்துக்குள் வழங்க வேண்டும். இனி பிரபாகரன் குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டிய குடும்ப பென்ஷன் தொகையை கலாவுக்கே வழங்க வேண்டும்’ என்று நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டார்.

ஐ.பி.எஸ் அதிகாரி பணி நீக்கம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் பணி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு இது. அந்த ஐ.பி.எஸ் அதிகாரி தன் முதல் மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்துகொண்டிருந்தபோதே இரண்டாவ தாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்தனர். இப்படியான சூழலில் முதல் மனைவி போர்க்கொடி தூக்கினால்தான் இதுபோன்ற திருமணங்கள் வெளியில் வரும். இந்த அதிகாரிக்கு முதல் மனைவியால் பிரச்னை எழவில்லை, மாறாக இரண்டாவது மனைவியால் ஏற்பட்டது. அரசு அலுவலர்கள் குழந்தைகளுக்கு அளிக்கும் சலுகைகளைத் தன் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் என இரண்டாவது மனைவி வைத்த கோரிக்கையால், அந்த அதிகாரியின் ஃபைல் அலசப்பட்டது. இரண்டாவது மனைவியின் குழந்தைகளின் பள்ளிச் சான்றிதழ்களின் மூலம், அந்த அதிகாரிதான் அவரின் அப்பா என்பது வெளிச்சத்துக்கு வந்தது. திருமணம் தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து இந்தியன் சர்வீஸ் ரூல்ஸ் 1968 விதி 19-ன் படி, அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டது, காவல்துறை மற்றும் பொதுமக்களிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரண்டு மனைவிகள்... சமரச சொத்துப் பங்கீடு!


உச்ச நீதிமன்றத்தில் நடந்த மற்றொரு வழக்கில் முதல் மனைவி, அரசு ஊழியரான தன் கணவரின் சொத்துகளையும், இரண்டாவது மனைவி தன் கணவரின் கருணை வேலையையும் வேண்டினர். இருவரும் தங்களுக்குள் சமரசமாகப் போகும் போது கருணை வேலையை இரண்டாவது மனைவிக்கு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனைவி என்ற அந்தஸ்து இல்லாமல் சமூக அங்கீகாரம் மறுக்கப்பட்டு, அரசு ஊழியரின் இரண்டாவது மனைவியாக வாழும் பெண்களுக்கு இதுபோன்ற தீர்ப்புகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.

இருப்பினும், இரண்டாவது மனைவியாக ஓர் ஆணின் கரம்பற்றும் முன் இரண்டு முறையாவது யோசிக்க வேண்டும்.

இரண்டாவது திருமணம்... இன்ன பிற சட்டங்கள்!

* கணவனோ, மனைவியோ ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து, எங்கு இருக்கிறார் என்கிற தகவல் ஏழு ஆண்டுகள்வரை அறியப்படாமல் இருந்தால், கணவன்/மனைவி இன்னொரு வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதைச் சட்டம் அங்கீகரிக்கிறது.

* பழங்குடி இனத்தவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் இந்திய தண்டனைச் சட்டப்படி 494-வது பிரிவின் கீழ் அவர்களைக் குற்றவாளிகளாகக் கருத முடியாது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

* மதச்சட்டங்கள் அனுமதித்தால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம். இரண்டாவது மனைவி சட்டப்படியானவர் இல்லை என்றாலும், அவரது வாரிசுகள் சட்டப்படியான வாரிசுகளாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.