அலசல்
Published:Updated:

அறைக்குள் சென்ற அழகிரி... வீல் சேரில் வந்த தயாளு... மயங்கிச் சரிந்த செல்வி!

அறைக்குள் சென்ற அழகிரி... வீல் சேரில் வந்த தயாளு... மயங்கிச் சரிந்த செல்வி!
பிரீமியம் ஸ்டோரி
News
அறைக்குள் சென்ற அழகிரி... வீல் சேரில் வந்த தயாளு... மயங்கிச் சரிந்த செல்வி!

அறைக்குள் சென்ற அழகிரி... வீல் சேரில் வந்த தயாளு... மயங்கிச் சரிந்த செல்வி!

கோபாலபுரம் வீட்டு வாசலில் சரசரக்கும் வேப்பமரத்தின் அசைவை ரசித்தபடியே வரும் கருணாநிதி, ஆகஸ்ட் 7-ம் தேதி இரவில் அப்படி உள்ளே நுழையவில்லை. 62 ஆண்டுக்காலம் வாழ்ந்த, நடமாடிய அந்த வீட்டுக்கு உயிரற்ற உடலாகத்தான் அவர் கொண்டுவரப்பட்டார். தலைவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள, தலைவரை ஒருமுறை பார்த்துவிட்டுச் செல்ல, கோபாலபுரம் வீட்டுவாசலில் காத்திருக்கும் தொண்டர் கூட்டம் அன்று, அவர் உடலைக் காண கண்ணீருடன்  தவித்துக்கொண்டிருந்தது.

அறைக்குள் சென்ற அழகிரி... வீல் சேரில் வந்த தயாளு... மயங்கிச் சரிந்த செல்வி!

‘கருணாநிதியின் உடல்நிலை மோசமாகிவிட்டது’ என அன்று மாலை 4.30 மணிக்கு அறிக்கை வெளியானதுமே, காவேரி மருத்துவமனை முன் திரண்டது ஒரு கூட்டமென்றால், கோபாலபுரம் வீட்டைச் சுற்றியும் கூட்டம் சூழ ஆரம்பித்தது. மாலை சரியாக 6.40 மணிக்கு கலைஞர் இறந்து விட்டதாக மருத்துவ அறிக்கை வந்ததும், “ஐயோ... தலைவா!’’ என்ற ஓலம் அங்கு பெரும் பதைபதைப்பை உண்டாக்கியது. ‘‘தலைவர் வாழ்கன்னு இனி சொல்ல முடியாம பண்ணிட்டியே தலைவா’’ என்று அதே குரல் அழுகையாக மாற, கோபாலபுரம் வீட்டைச் சுற்றி திரண்டிருந்த மக்கள் கதறி அழ ஆரம்பித்தனர்.

‘‘ஒரு தடவையாச்சும் உள்ளே விடுங்கய்யா!’’

‘‘நான் மயிலத்துலேந்து வரேன். 67-ல முதல்முறையா கலைஞரைப் பாத்து தி.மு.க-வில் சேர்ந்தேன். எப்போவெல்லாம் தலைவரப் பாக்கணும்னு தோணுதோ, அப்போவெல்லாம் இங்கே வந்து நிப்பேன். இப்போ அவரு முகத்தப் பாக்க அஞ்சு நாளா காத்துக் கெடக்கேன்.  தலைவர் இறந்துட்டதா சொல்றங்க. தாங்கிக்க முடியலை. இனிமே இந்த வீட்டு முன்னாடி நான் எதுக்கு வந்து நிக்கப்போறேன்’’ என்கிற ஒரு பெரியவருக்கு ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லை. எல்லோரும் கருணாநிதி பற்றிய நினைவுகளுடன் கண்கலங்கிக் கொண்டிருந்தனர்.

காவேரி மருத்துவமனையிலிருந்து அந்த முன்னிரவில் ஓர் ஊர்வலம் போலவே ஆயிரக் கணக்கான தொண்டர்கள் நடந்துவர, அவர்களின் பின்னால் நிதானமாக ஊர்ந்து வந்தது கருணாநிதியின் உடலைச் சுமந்துவந்த வாகனம்.

கோபாலபுரம் வீட்டு முன்பு குவிந்த தொண்டர்களை போலீஸார் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க, கூட்டத்தைச் சமாளிக்க துணை ராணுவப்படை அங்கே வந்தது. ‘‘எங்க தலைவர் வாழ்ந்த வீடு... ஒரு தடவையாச்சும் உள்ளே விடுங்கய்யா’’ என்ற தொண்டர்களின் வேண்டுதலை கண்டுகொள்ளா மல், அவர்களை அப்புறப்படுத்தியது காவல்துறை.

அறைக்குள் சென்ற அழகிரி... வீல் சேரில் வந்த தயாளு... மயங்கிச் சரிந்த செல்வி!

பின்வாசல் அனுமதி!

மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்த கலைஞரின் மகள் செல்வி அழுகையை நிறுத்தவே இல்லை. மூன்று அடுக்குகளைக் கொண்ட கோபாலபுரம் இல்லத்தில், முதல் அடுக்கில் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களும் இரண்டாவது அடுக்கில் கட்சியைச் சேர்ந்தவர்களும் கடைசி அடுக்கில் கலைஞர் குடும்பத்தின் பெண்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

செல்வியின் அழுகையை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. சோபாவில் அமர்ந்திருந்த செல்விக்கு அருகில் அமர்ந்து ஆறுதலாக அவரது தோளைப் பற்றிக் கொண்டிருந்தார் துர்கா ஸ்டாலின். உடலை கோபாலபுரம் கொண்டுவருவது எப்போது என்பதை உறவினர்களுக்குச் சொல்வது முதல் அங்கிருந்த அத்தனை வேலைகளையும் கவனித்து வந்தார், முரசொலி மாறனின் மனைவி மல்லிகா. குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அனைவரும் பின்வாசல் வழியாகவே வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

வீட்டின் கூடத்துக்குச் செல்லும் வழியில் கருணாநிதியின் ‘தங்க’ ஃப்ரேம் போட்ட படம் ஒன்று இருக்கிறது. அதைப் பார்த்துப்பார்த்து கண்ணீர் வடித்தபடியே அமர்ந்திருந்தார் செல்வி. வந்த அனைவரும் செல்வியின் கரங்களைப்பற்றி ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்க, கிருத்திகா உதயநிதியும் செல்வியின் மகளும் அங்கு வந்தவர்களை அழைத்துச்சென்று அருகிலுள்ள ஹாலில் அமர வைத்தனர்.

கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையி லிருந்து புறப்பட்டது என்ற தகவல் வந்ததும், அனைவரின் முகங்களிலும் பெரும் சோகம் படர்ந்தது. ‘‘ஆம்புலன்ஸ் புறப்பட்டுவிட்டது, வந்துகொண்டிருக்கிறது, கூட்டத்தில் சிக்கி மெதுவாக வருகிறது’’ என்று செல்விக்கு லைவ் அப்டேட்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் குடும்ப உறுப்பினர் ஒருவர்.

வீட்டின் கடைசிக் கூடத்துக்கு அருகில் இருக்கும் அறையில் தயாளு அம்மாள் தங்க வைக்கப்பட்டிருந்தார். . அவரைப் பார்க்க பலரும் அறையின் வாசல்முன் நின்றுகொண்டிருந்தனர். ஆனால், அவரைப் பார்க்க உறவினர்கள் யாருக்கும் அனுமதி இல்லை

அறைக்குள் சென்ற அழகிரி... வீல் சேரில் வந்த தயாளு... மயங்கிச் சரிந்த செல்வி!

அழுதபடி வந்த குஷ்பு!

இரவு 8.45 மணிக்கு கோபாலபுரம் இல்லத்துக்கு வெளியே பெரும் சத்தம் எழுந்தது. கலைஞரின் உடல் கொண்டுவரப்பட்டதாக நினைத்து, பெருங்குரலெடுத்து அழத்தொடங்கிய செல்வி, திடீரென மயங்கிச் சரிந்தார். அங்கிருந்த எல்லோரும் பதறிப்போனார்கள். அதிக சர்க்கரை கலந்த எலுமிச்சை ஜூஸ் கொண்டுவந்து அவருக்கு கொடுத்தனர். வீட்டுக்கு வெளியில் இருந்த தொண்டர்கள் ‘வேண்டும் வேண்டும்... மெரினா வேண்டும்’ என எழுப்பிய முழக்கம்தான், அந்தப் பெரும்சத்தம் என்பதை வீட்டுக்குள் இருந்தவர் களுக்கு விளக்கினார் மல்லிகா மாறன். ‘மெரினாவில் இடம் இல்லை’ என்ற செய்தி குடும்ப உறுப்பினர் களிடம் சோகத்தை அதிகரிக்கச் செய்தது.

கருணாநிதியின் உடல் கோபாலபுரத்தை நெருங்க நெருங்க... வி.ஐ.பி-க்கள் அனைவரும் வரத்தொடங்கினர். இயக்குநர் குட்டி பத்மினி, கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், தமிழச்சி தங்கபாண்டியன் என ஒவ்வொருவராக வந்து  செல்விக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர். அழுதுகொண்டே வந்த குஷ்பு, செல்வியின் மடியில் தலைவைத்து அழ ஆரம்பித்தார். குஷ்புவுக்கு ஆறுதல் சொல்லப்போய் மேலும் அழ ஆரம்பித்தார் செல்வி. குஷ்பு, கடைசிவரை நின்றபடியே அழுதுகொண்டிருந்தார். அங்கு, அவருக்கு ஆறுதல் சொல்ல வேறு யாருமில்லை.

புத்தகங்களால் நிறைந்திருந்த கோபாலபுர வீட்டு மாடியில் கருணாநிதியின் கொள்ளுப்பேரன்கள் தங்கியிருந்தனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரும் மாடியில் போய் அமர்ந்திருந்தனர்.

கருணாநிதியின் வீட்டில் மொத்தம் எட்டு பணியாட்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் துக்கத்தில் இறுக்கத்துடன் காணப்பட்டனர். ஆனாலும், அழுதழுது சோர்ந்துபோய் இருப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பது, மயங்கிய செல்விக்கு விசிறிவிடுவது என அங்கு தேவையான எல்லா வேலைகளையும் செய்தனர்.  ‘‘எந்தச் சூழ்நிலையிலும் எங்களை யாரும் மரியாதைக் குறைவாக நடத்த அய்யா விடவே மாட்டாரு’’ என்றபடி, முந்தானையில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே தண்ணீர் பாட்டில்களை அடுக்கிவைத்தார் ஒரு பெண் பணியாளர்.

தலை தாழ்த்தியபடி வந்த தயாளு அம்மாள்!

‘‘தலைவரின் உடல், வீட்டை நெருங்கிவிட்டது. தயாளு அம்மாவை அழைத்துவாருங்கள்’’ என்று மெயின் ஹாலிலிருந்து குரல் வர, செல்வியின் அருகே நின்றுகொண்டிருந்த ஒரு பெண் எழுந்து சென்று அறைக் கதவைத் தட்டினார். கதவு திறந்தது. நிமிர்ந்து பார்த்தால், கருணாநிதியும் தயாளு அம்மாளும் இருக்கும் பெரிய புகைப்படம் ஒன்று அந்த அறைக்கு மேலே மாட்டப்பட்டிருந்தது. ‘‘அம்மாவைக் கூட்டிப் போகணும். சரவணனை வரச் சொல்லுங்க’’ என்று அறைக்குள் இருந்து குரல் வர, சரவணன் வரவழைக்கப்பட்டார். நீல நிலத்தில் பச்சை பார்டரில் சேலை அணிந்து, பெரிய பொட்டுவைத்து, தலையில் மல்லிகைப்பூ வைத்து வீல்சேரில் அழைத்துவரப்பட்டார் தயாளு அம்மாள்.

அவரை அந்தக் கோலத்தில் பார்த்ததும், வீட்டில் இருந்த அனைவரும் வெடித்து அழுதுவிட்டனர். துயரம் இறுகிப்போய் தலையைத் தாழ்த்தியடி வந்தார் தயாளு அம்மாள். அவரைத் தொடர்ந்து செல்வியும், துர்கா ஸ்டாலினும் மெயின் ஹாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

வெளியே சமுத்திரம் போல கேட்ட இரைச்சல் சத்தம், கலைஞரின் உடல் வீட்டுக்கு அருகே வந்ததை உள்ளே இருந்தவர்களுக்கு உணர்த்தியது. 10.20 மணிக்கு பின்வாசல் வழியாக ஸ்டாலினும் அழகிரியும் வர, இன்னும் இறுக்கமானது கோபாலபுரம் வீடு. மெயின் ஹாலுக்கு ஸ்டாலின் செல்ல, கலங்கிய கண்களுடன் அருகிலிருந்த அறைக்குச் சென்றார் அழகிரி. தயாளு அம்மாள், செல்வி, ஸ்டாலின், தயாநிதி மாறன், கலாநிதி மாறன், உதயநிதி, அருள்நிதி, துரை தயாநிதி என குடும்ப உறுப்பினர்கள் மட்டும் ஹாலில் நின்றுகொண்டிருந்தார்கள். ‘‘அப்பாவை நான் பார்க்க மாட்டேன். எத்தனையோ பேரை வாழ வச்சவரு. அவரை இந்த நிலையில பார்க்க மாட்டேன்’’ என்று அழுதுகொண்டே பின்பக்க அறைக்கு வேகமாகச் சென்றார் செல்வி. அவருக்குச் சமாதானம் சொல்லி அழைத்து வந்தார் செல்வியின் மகள்.

அறைக்குள் சென்ற அழகிரி... வீல் சேரில் வந்த தயாளு... மயங்கிச் சரிந்த செல்வி!

தொண்டர்களுக்கு அனுமதி!

1955-ம் ஆண்டு முதல் கோபாலபுரம் வீட்டின் நாயகனாக வலம்வந்த கலைஞரின் உடல், இரவு 10.28-க்கு வீட்டின் முக்கிய அறையில் வைக்கப் பட்டது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கண்ணீர்க் கடலுக்கு நடுவே, கண்ணாடிப் பெட்டிக்குள் உறங்கிக் கொண்டிருந்தார் அவர்.

தயாளு அம்மாளை அருகில் அழைத்துவந்து, கலைஞரின் முகத்தின் அருகே காட்டினர். அவர், சிறிது நேரம் கலைஞரின் உடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்குச் சூழல் புரிந்தது. தன் எதிரே நிகழ்ந்திருக்கும் பெரும் துயரத்தையும் அவரால் உணர முடிந்தது. ஆனால், எந்த உணர்வையும் வெளிப்படுத்த முடியாமல் அவர் அப்படியே நின்றிருக்க, அதைப் பார்த்து தாங்க முடியாமல் உறவினர்கள் பலரும் வேதனையில் அழுதனர்.

குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றதும், அருகில் இருந்த அறையிலிருந்து அழகிரி வந்தார். கருணாநிதியின் தலைமாட்டில் அமர்ந்துகொண்டு கண்ணாடிப் பெட்டியை அழகிரி தடவிக்கொண்டே இருக்க, ராஜாத்தி அம்மாளும் கனிமொழியும் வந்தனர். கருணாநிதியின் தலைமாட்டில் கனிமொழியும் அழகிரியும் இருக்க, இடதுபுறத்தில் ஸ்டாலினும் உதயநிதியும் நின்றுகொண்டிருந்தார்கள்.

உறவுகளுக்கு மத்தியில் கலைஞரின் உடல் இருக்க, ‘தலைவா... தலைவா...’ என்று வெளியே முழங்கிக்கொண்டிருந்த உடன்பிறப்புகளின் சத்தத்தில், கலைஞர் எழுந்துவந்து ‘‘உடன்பிறப்பே’’ என்று சொல்லமாட்டாரா என்ற ஏக்கம் அங்கிருந்த அனைவரின் கண்களிலும் தெரிந்தது. மம்தா பானர்ஜி, ரஜினி, வைகோ என ஒவ்வொருவராக வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திவிட்டுப் போக, கலைஞரின் உடலின் அருகே பேராசிரியர் அன்பழகனை ஒரு நாற்காலி போட்டு உட்கார வைத்தார் ஸ்டாலின்.

இரவு 12 மணிவாக்கில், கோபாலபுரம் வீட்டின்முன் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும் வீட்டுக்குள் வந்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி தரப்பட்டது. பின்பக்க வாசல் வழியாக நெருக்கியடித்துக் கொண்டு வீட்டுக்குள் வந்த தொண்டர்கள், ஹாலில் இருந்த கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, முன்பக்கம் வழியாக வெளியே சென்றனர். ‘‘முன்னாள் முதல்வர் வீடுதான். ஆனால், யாரு வேணா எப்போ வேணா வரலாம். அதான்யா கலைஞர்’’ என்று கூப்பிய கரங்களுடன் அஞ்சலி செலுத்திச் சென்றார் தொண்டர் ஒருவர்.

தொண்டர்களின் வரிசை தொடர்ந்தபடி இருக்க, நேரம் கடந்துகொண்டே போனது. ஒருகட்டத்தில் பின்பக்கக் கதவை மூடிவிட்டு, கலைஞரின் உடல் கோபாலபுரம் வீட்டிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டது. சுமார் 60 ஆண்டுகாலம் வாழ்ந்த வீட்டில் கடைசியாய் மூன்று மணிநேரம் மட்டும் வைக்கப்பட்டிருந்தது கலைஞரின் உடல். கோபாலபுர வீட்டுச் சுவர்களில் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களில் கம்பீரமாக அவர் சிரித்துக்கொண்டிருக்க, நள்ளிரவு 1.15 மணிக்கு சி.ஐ.டி நகர் வீட்டுக்கு இறுதிப்பயணம் புறப்பட்டது.

அறைக்குள் சென்ற அழகிரி... வீல் சேரில் வந்த தயாளு... மயங்கிச் சரிந்த செல்வி!

‘‘எப்படி உள்ளே வருவார்?’’

வழியெங்கும் அழுகுரல்கள். தங்கள் தலைவன் வந்த ஆம்புலன்ஸையாவது தொட்டுவிட நினைத்து முண்டியடித்தது கூட்டம். விளைவாக, கோபாலபுரம் நிரம்பி வழிய ஆரம்பித்தது. உள்ளே போக வாய்ப்பற்றவர்கள் அப்போதே சி.ஐ.டி காலனி நோக்கிப் படையெடுத்தார்கள். கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையிலிருந்து புறப்பட்டபோது திரளத் தொடங்கிய கூட்டம், கொஞ்ச நேரத்திலேயே மாபெரும் ஊர்வலமானது. முதலில் வந்தவர்களை எல்லாம் சேர் போட்டு வரவேற்றவர்கள், கூட்டம் எகிறுவதைப் பார்த்து கேட்டை இழுத்துச் சாத்தினார்கள்.

கிட்டத்தட்ட எட்டு தசாப்தங்கள் ஆண்ட தலைவனைக் கடைசி முறையாகப் பார்க்க நினைப்பவர்களுக்கு இரும்புக்கதவுகள் ஒரு தடையா என்ன? அதையும் நெட்டித்தள்ளி ‘தலைவா’ என கதறியபடி காம்பவுண்டுக்குள் நுழைந்தது ஒரு கூட்டம். அவர்களை அப்படியே வீட்டு நுழைவாயிலில் தடுத்து நிறுத்தினார்கள் சில உடன்பிறப்புகள். சி.ஐ.டி காலனி வீட்டின் முன் வரவேற்பறையில் உடலை வைப்பதாகத்தான் ஏற்பாடு. ஆனால், உடலை உள்ளே கொண்டுவருவதற்கோ, வரவேற்பறையில் வைப்பதற்கோ இயலாதபடி எல்லாப் பக்கமும் கூட்டம்.

பதற்றத்துடன் உள்ளறையிலிருந்து வந்த கனிமொழி, ‘‘இவ்ளோ கூட்டம் இருந்தா எப்படி தலைவர் உள்ளே வருவாரு? யாரையும் பார்க்கவேணாம்னு தடுக்கப்போறதில்ல. அதேசமயம் உள்ளே தலைவர் வர்றதுக்கு வழிவிடச் சொல்லுங்க’’ என்று கொஞ்சம் கோபமாகப் பேச, லத்தியைச் சுழற்றத் தொடங்கினார்கள் போலீஸ்காரர்கள். ஆனாலும், நூற்றுக்கணக்கான தொண்டர்களை சில போலீஸாரால் சமாளிக்க முடியும்? போலீஸ்காரர்கள் திணறியதால், அந்தப் பொறுப்பைத் தன் கையில் எடுத்துக்கொண்டார் ஆ.ராசா.

‘டி.வி-யில லைவ் போகுது!’’

அதே சமயத்தில் கோபாலபுரத்திலிருந்து புறப்பட்டுவிட்டார்கள் என்ற தகவல் வந்துசேரவும், சி.ஐ.டி காலனி வீடு மேலும் பரபரப்பானது. கூட்டத்தில் சிக்கிக்கொண்டு திணறிய யுவன்ஷங்கர் ராஜாவை இழுத்து வீட்டிற்குள் கூட்டிவந்தார்கள் ஆ.ராசாவுடன் இருந்தவர்கள்.

‘‘இவ்ளோ கூட்டம் வரும்னு தெரியும்ல? என்னங்க போலீஸையே காணோம்? என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க?’’ என போனில் யாரிடமோ சினங்கொண்டார் ராசா. அடுத்த சில நிமிடங்களில் குவிந்தது காக்கிப்படை. தனக்குப் பிடித்தமான சி.ஐ.டி காலனி வீட்டுக்கு இறுதியாக ஒருமுறை வந்திறங்கினார் கலைஞர். வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் அழுகைச்சத்தம் ஆரம்பிக்க, எல்லாரையும் இறுக்கம் சூழ்ந்தது.

அத்தனை பரபரப்புகளுக்கு மத்தியில், ‘‘டி.வி-யில லைவ் போகுது. இங்க வரமுடியாதவங்களும் தலைவரைப் பார்க்கணும்’’ என கேமராக்களை யாரும் மறைக்காமல் பார்த்துக் கொண்டார் ராசா. வீட்டுக்குள் இருந்த மயில்சாமி, கருணாகரன், விக்ராந்த், சதீஷ் போன்ற நடிகர்களும், மற்ற சொந்தக்காரர்களும் பார்த்துவிட்டு பின்வாசல் வழியாக அறையைவிட்டு வெளியேற... அதன்பின் தொண்டர்களுக்காகத் கதவுகள் திறந்துவிடப்பட்டன.

தன் வாழ்நாள் முழுவதும் தடுப்புகள் இல்லாமல் தொண்டர்களைச் சந்தித்த தலைவர், கடைசி நித்திரையின்போது சுற்றிலும் தொண்டர்கள் சூழவே இருந்தார். பார்த்தவர் களை ஒவ்வொருவராகப் பாதுகாவலர்கள் வெளியேற்ற, நிலைமை சீராகத் தொடங்கியது. உதயநிதியுடன் ஸ்டாலினும், துரை தயாநிதியுடன் அழகிரியும் உள்ளே வந்தார்கள். ஸ்டாலின் வந்தவேகத்தில் வெளியேற, அழகிரி மட்டும் உள் அறைக்குச் சென்றார். அவருடன் சில நிமிடங்கள் பேசிவிட்டுவந்த கனிமொழி, திரும்பவும் தந்தைக்கு அருகில் நின்றுகொண்டார்.

அறைக்குள் சென்ற அழகிரி... வீல் சேரில் வந்த தயாளு... மயங்கிச் சரிந்த செல்வி!

‘‘யாரும் ஏமாற வேண்டாம்!’’

ஒரு மணிநேரம் கழித்துத் திரும்பவும் வாசல் கதவுகள் மூடப்பட்டன. போலீஸ் உயரதிகாரிகளும், குடும்பத்தினரும் மட்டும் அஞ்சலி செலுத்துவதற்காக இந்த ஏற்பாடு. கருணாநிதி உடலின் இடதுபுறம் வெறித்த கண்களுடன் ராஜாத்தி அம்மாள் அமர்ந்திருக்க, தன் மகன் ஆதித்யா தோளில் முகம் புதைத்தபடி குலுங்கினார் கனிமொழி. மீண்டுமொரு முறை இறுக்கம் சூழ்ந்தது. நிலைமை கொஞ்சம் சரியாகவும், திரும்பவும் வாசல் கதவுகள் திறக்கப்பட்டு தொண்டர்கள் உள்ளே அனுமதிக்கப் பட்டனர். ‘‘யாரும் ஏமாற வேண்டாம். வர்றவங்க எல்லாம் பார்த்துட்டே போகட்டும்’’ என கனிமொழி கேட்டுக்கொண்டதற்காக இம்முறை கதவுகள் திறக்கப்பட்டன. இப்படியாக இன்னும் ஒரு மணி நேரம் கழிய, பலத்த கூக்குரல்களிடையில் தன் ‘அண்ணா’வின் சாலை வழியாக ராஜாஜி ஹாலுக்கு இறுதி யாத்திரையைத் தொடர்ந்தார் கருணாநிதி.

- நித்திஷ், இ.லோகேஷ்வரி, தமிழ்ப்பிரபா
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், தி.குமரகுருபரன், தெ.அசோக்குமார், வி.ஸ்ரீனிவாசுலு, கே.ஜெரோம், வெ.நரேஷ்குமார்