
உருகும் தோழர் எண்கண் இராமதாஸ்

‘‘பள்ளியில் தமிழ் மாணவர் மன்றம் அமைத்து, அதன் தலைவராக இருந்தார் கருணாநிதி. அவருக்கு, சிறந்த ஆளுமைத் திறன் இருந்தது. அதனால், அவரை சக மாணவர்களான நாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டோம். ஒருமுறை பள்ளி ஆண்டு விழாவுக்கு, அப்போது ஜில்லா போர்டு தலைவராக இருந்த நாடிமுத்தாப் பிள்ளை தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் ‘நட்பு’ என்ற தலைப்பில் கருணாநிதி அடுக்கு மொழியில் அருமையாகப் பேசினார். அதைக் கேட்டு மகிழ்ந்த நாடிமுத்தாப் பிள்ளை மீண்டும் ஒருமுறை கருணாநிதியைப் பேசச் சொல்லி ரசித்தது என் நினைவில் பசுமையாக உள்ளது. ‘வணக்கம்... வாழ்க தமிழ்’ என்று பேச்சை ஆரம்பிக்கும் கருணாநிதிக்கு மடைதிறந்த வெள்ளம்போல் வார்த்தைகள் கொட்டும். அவரது பேச்சைக் கேட்க ஒட்டுமொத்த அரங்கமே காத்திருக்கும்’’ என்று நினைவுகளில் மூழ்குகிறார் எண்கண் கிராமத்தைச் சேர்ந்த இராமதாஸ்.
கருணாநிதி தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை திருவாரூர் அருகேயுள்ள தன் சொந்த ஊரான திருக்குவளையில் முடித்தார். உயர்கல்விக்காகத் தாய் அஞ்சுகம் அம்மாளுடன் திருவாரூருக்கு குடிபெயர்ந்தவர், செகண்ட் ஃபார்ம் மற்றும் தேர்டு ஃபார்ம் படிப்பை திருவாரூர் கமலாலயம் தென்கரையில் உள்ள போர்டு ஹைஸ்கூலில் தொடர்ந்தார். (தற்போது அந்தப் பள்ளி வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்றழைக்கப்படுகிறது) அப்போது, கருணாநிதியுடன் இணைந்து படித்தவர் இராமதாஸ். இப்போது இவர், திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மூலங்குடி கிராமத்தில் உள்ள இளைய மகள் வீட்டில் வசிக்கிறார். இவருக்கு கலா, சகிலா என்ற இரு மகள்கள் உள்ளனர். 2009-ல், மனைவி சுசீலா இறந்துவிட்டார். இந்த வயதிலும் கண்ணாடி அணியாமல் பத்திரிகைகள் வாசிக்கும் இராமதாஸ், இதுவரை ஒரு சினிமாகூட பார்த்ததில்லை என்கிறார். சுமார் 25 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரரான இவர், தீவிர விவசாயி. இப்போதும் சுறுசுறுப்பாய் வேலைகள் செய்கிறார்... சைக்கிள் ஓட்டுகிறார்... தமிழைப் பிசிறில்லாமல் பேசுகிறார்.
அவருடன் உரையாடியதிலிருந்து...

‘‘கருணாநிதியுடன் உங்கள் நட்பு எப்போது ஆரம்பித்தது?’’
‘‘திருவாரூர் போர்டு ஹைஸ்கூலில் செகண்ட் ஃபார்ம் படித்தபோது, கருணாநிதி எனக்கு அறிமுகமானார். நான், கருணாநிதி, தேவன் ஆகிய மூவரும் முன்வரிசையில் அமர்ந்திருப்போம். நண்பர்களின் தோளில் கைபோட்டுப் பேசுவது கருணாநிதியின் வழக்கம். ‘வாடா, போடா’ என்று எங்களுக்குள் உரிமையுடன் பேசிக்கொள்வோம். கருணாநிதியின் எல்லாச் செயல்களுக்கும் பக்கபலமாக நின்றவர் தேவன். திருவாரூர்க்காரரான தேவன் இப்போது உயிருடன் இல்லை.
படிக்கிற காலத்திலேயே பெரியாரின் கருத்துகளால் கருணாநிதி கவரப்பட்டார். இந்தியைக் கடுமையாக எதிர்த்தார். பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் முன்பு வாசலில் ஒருபக்கம் கருணாநிதியும், மறுபக்கம் தேவனும் நின்றுகொண்டு ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என்று கோஷமிடுவார்கள். பள்ளியின் 1,100 மாணவ, மாணவிகளும் அவர்களுடன் சேர்ந்து கோஷம் போடுவோம்.
இஸ்ரேல் என்ற தலைமையாசிரியர் இருந்தார். மிகவும் கடுமையானவர். ‘படிக்கிற வயசுல இதெல்லாம் உங்களுக்குத் தேவையா’ எனக் கண்டிப்பார். உடனே வகுப்புகளுக்குச் சென்றுவிடுவோம். ஆனால், இந்தி வகுப்பைப் புறக்கணிப்போம். ராம்குட்டி என்ற இந்தி பண்டிட் ரொம்ப நல்ல மனிதர். ஆனாலும், கருணாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தி வகுப்புக்கு யாருமே செல்ல மாட்டோம். மாணவர்கள் இல்லாமல் வகுப்பு காலியாக இருப்பதைக் கண்டு இந்தி பண்டிட் திரும்பிச் சென்றுவிடுவார்.’’
‘‘அப்போதே கருணாநிதிக்கு மஞ்சள் துண்டு அணியும் பழக்கம் இருந்ததாமே?’’
‘‘ஆமாம், அவர் எப்போதும் மஞ்சள் துண்டுதான் அணிந்திருப்பார். அம்மா மற்றும் அக்காள்களுக்குப் பயப்படுவார். அவரது சமூக சீர்திருத்தச் செயல்பாடுகள் குடும்பத்தினருக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.’’

‘‘பள்ளிக் காலத்தில், கருணாநிதி காதல் மன்னன் என்கிறார்களே?’’
(சிரிக்கிறார்) ‘‘ஆணழகன் கருணாநிதி. அப்படியொரு வசீகர முகம் அவருக்கு. அவரைப் பல பெண்கள் காதலித்தார்கள். பெருமாள் கோயில் பட்டாச்சாரியாரின் மகள் மிகவும் அழகாக இருப்பார். அவருடன்தான் கருணாநிதி அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பார்.’’
‘‘உங்கள் நண்பர் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்துள்ளார். அவர் கொண்டுவந்த திட்டங்களில் நீங்கள் பெரிதாகக் கருதுவது எவற்றை?’’
‘‘அந்தக் காலத்தில் விவசாய பம்புசெட்களுக்கு மின் கட்டணம் உண்டு. கட்டணம் கட்டவில்லை யென்றால் ஃப்யூஸ் கேரியரைப் பிடுங்கிக்கொண்டு போய்விடுவார்கள். கோவையில் அதுபோல் மின்கட்டணம் கட்டாத ஓர் ஏழை விவசாயியின் ஃப்யூஸ் கேரியரைப் பிடுங்க, அவரது சாகுபடி பாழாகிவிட்டது. ‘இனி எவனாவது ஃப்யூஸ் கேரியரை எடுத்தால் கையை எடுப்பேன்’ என்ற முழக்கம் தோன்றிய காலம் அது. இந்தச் செய்தி கருணாநிதியின் மனதில் ஆழமாகப் பதிந்தது. அவர் தமிழக முதல்வரானதும், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கினார். எனவே தமிழக விவசாயிகள், கருணாநிதிக்கு நன்றிக்கடன் பட்டவர்கள். அவர் செய்த இந்த உதவியைக் காலத்துக்கும் மறக்கக் கூடாது.
‘ஏரோட்டும் மக்கள் ஏங்கித் தவிக்கையில் தியாகராஜா உனக்குத் தேரோட்டம் ஒரு கேடா?’ என்று பகுத்தறிவுப் பாதையில் கேள்வி கேட்டவர்தான் கருணாநிதி. பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருவாரூர் தேருக்கு பல லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து தேரோட்டம் நடத்திக் காட்டியவரும் அவர்தான். தான் பகுத்தறிவுக் கருத்தை ஏற்றுக்கொண்டாலும், பக்தர்களின் மனதை மகிழச் செய்தவர் கருணாநிதி.
இவை இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தவை.’’

‘‘கருணாநிதி குடும்பத்துக்குத் தெய்வ பக்தி உண்டா?’’
‘‘இரண்டு மகள்கள் பிறந்தபின் ஆண் வாரிசு வேண்டுமென்று திருவாரூர் தெட்சிணாமூர்த்தி மடத்தில் வந்து கருணாநிதியின் தந்தை முத்துவேலர் வேண்டுவாராம். அங்கேயே இரவில் படுத்துவிட்டு, மறுநாள் காலையில் ஊருக்கு நடந்து செல்வாராம். அந்த தெட்சிணாமூர்த்தி அருளால் கருணாநிதி பிறந்ததால்தான், அவருக்கு தெட்சிணாமூர்த்தி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அவரின் நண்பர் தென்னனின் இயற்பெயரும் தெட்சிணாமூர்த்திதான். கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் அண்ணன் பெயரும் தெட்சிணாமூர்த்திதான். இந்த மூன்று தெட்சிணாமூர்த்திகளும் ஒரு திருமணத்தில் கலந்துகொண்டபோது, கருணாநிதியே இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார். இப்போதுகூட ஆவணி மாதத்தில் தெட்சிணாமூர்த்தி மடத்தில் நடைபெறும் குருபூஜையின்போது, கருணாநிதியின் குடும்பம் சார்பில் அர்ச்சனைப் பொருள்கள் வழங்குவது வழக்கத்தில் உள்ளது.’’
‘‘கருணாநிதியிடம் ஏதேனும் உதவி கேட்டுப் போயிருக்கிறீர்களா?’’
‘‘எனக்கு அதற்கு அவசியமே ஏற்படவில்லை. இந்தப் பக்கம் கருணாநிதி வந்தால் கூட்டத்தோடு கூட்டமாக அவருக்கு ஒரு மாலை போட்டு, வாழ்த்திவிட்டு வருவேன். அவ்வளவுதான்! ‘என் நண்பர் கருணாநிதி’ என்று நான் பெருமைக் கொள்ளும் உயர்ந்த இடத்தில் அவர் எப்போதும் இருந்தார். அந்த ஒரு பெருமை போதும் எனக்கு!’’
- மு.இராகவன்
படங்கள்: க.சதீஷ்குமார்