அலசல்
Published:Updated:

முத்தமிழறிஞர் தந்த மூன்று முத்தங்கள்! - நெகிழும் லியோனி

முத்தமிழறிஞர் தந்த மூன்று முத்தங்கள்! - நெகிழும் லியோனி
பிரீமியம் ஸ்டோரி
News
முத்தமிழறிஞர் தந்த மூன்று முத்தங்கள்! - நெகிழும் லியோனி

முத்தமிழறிஞர் தந்த மூன்று முத்தங்கள்! - நெகிழும் லியோனி

முத்தமிழறிஞர் தந்த மூன்று முத்தங்கள்! - நெகிழும் லியோனி

“என் தமிழாசிரியர் புலவர் ராமசாமி, தினமும் ஒரு தடவையாவது கலைஞரைப் பத்தி வகுப்புல பேசிடுவார். கலைஞர் மாதிரியே அவர் பேசிக்காட்டுவார். அந்தக் குரல் எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. கலைஞர் மாதிரியே பேசணும்னு எனக்கும் ஆசை வந்துச்சு. பட்டிமன்றத்துல நான் பேச ஆரம்பிச்சப்புறம் ஒரு நாள், திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ்ல இருந்து எனக்கு போன் வந்துச்சு. நான் அதுவரை பட்டிமன்றத்துல பேசின எல்லா கேஸட்களையும் முதல்வர் கலைஞர் கேட்டதா சொன்னாங்க. உடனே கொடுத்து அனுப்பினேன். அதைக் கேட்டுட்டு, என்னைப் பார்க்கணும்னு அவர் சொல்லியிருக்கார். அதை பிறகு திருச்சி கலெக்டர் என்னிடம் சொன்னார்” - இப்படியாக, தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் தான் அறிமுகமான தருணத்தைச் சுவாரஸ்யமாக விவரிக்க ஆரம்பித்தார் பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி.

“ஒரு நிகழ்ச்சியில் நான் பேசுவதாக இருந்தது. திடீர்னு அங்கே ஒரே கலவரம். போலீஸ்காரங்க தலையிட்டு என்னைப் பத்திரமா கூட்டிட்டுப் போயிட்டாங்க. மறுநாள் காலையில கலைஞர்கிட்ட இருந்து போன். ‘பேப்பர்ல பார்த்தேன். நேத்து என்ன நடந்துச்சு? உனக்கு ஒண்ணும் ஆகலையே... நல்லாயிருக்கியா’னு கேட்டார். நடந்த விஷயங்களைச் சொன்னேன். ‘என்ன பிரச்னைன்னாலும் எனக்கு போன் பண்ணு... சென்னைக்கு வந்தா கோபாலபுரம் வா’னு தலைவர் சொன்னார். எனக்கு ஒரே சந்தோஷம். தலைவரோட பவள விழாவுல, ‘கலைஞரின் புகழுக்குக் காரணம் அரசியல் பணியா. கலைப் பணியா?’ என்ற தலைப்புல ஒரு பட்டிமன்றம். நிகழ்ச்சியைப் பார்க்க கலைஞர் வருவார்னு ஸ்டாலின் சொன்னார். ஆனா, கலைஞர் வரலை. நிகழ்ச்சி முடிஞ்சதும், ‘தலைவர் வரலையா?னு கேட்டேன். ‘நீங்க பேச ஆரம்பிச்சவுடனே அவர் வந்துட்டார். நடுவுல வந்தா தொந்தரவா இருக்கும்னு, ரூம்ல இருந்து கேட்டு ரசிச்சார்’னு சொல்லி, என்னை ஸ்டாலின் அந்த ரூமுக்குக் கூட்டிட்டுப் போனார். அதுதான் முதல் சந்திப்பு. அதனால், உள்ளுக்குள் கொஞ்சம் பயம். ரூமுக்குள்ள போனவுடனே, எழுந்து நின்னு என் கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்தார் கலைஞர். எனக்குப் பயமெல்லாம் போயிருச்சு.

முத்தமிழறிஞர் தந்த மூன்று முத்தங்கள்! - நெகிழும் லியோனி

கோயம்புத்தூர்ல தி.மு.க-வின் முப்பெரும் விழாவையொட்டி பட்டிமன்றம். ‘மக்களுக்குப் பெரிதும் வழிகாட்டியது இன்னா நாற்பதா? இனியவை நாற்பதா?’ - என்பது தலைப்பு. அது அவர் கொடுத்ததுதான். இன்னா நாற்பது, இனியவை நாற்பது செய்யுள்களைப் புரட்டித் தயார் பண்ணிட்டு போனோம். ஆனா, எம்.பி தேர்தல்ல தி.மு.க ஜெயிச்ச தொகுதிகளை வச்சு உருவாக்கின தலைப்பு அதுன்னு எங்களுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது. அவரது தமிழ் ஆற்றலைப் பார்த்து வியந்துபோனேன். செம்மொழி மாநாட்டு பட்டிமன்றத்துல யாரெல்லாம் பேசப்போறாங்கன்னு அறிவிப்பு வந்துச்சு. பாரதிராஜாவோட ‘தெக்கத்தி பொண்ணு’ விழாவில நான் பேசுனதைப் பார்த்துட்டு, ‘இந்த தலைப்பில குஷ்புவுக்கு பதிலா மாநாட்டுல நீ பேசு’னு கலைஞர் சொன்னார். அந்தப் பட்டிமன்றத்துல, இருபது வருஷங்களுக்குப் பிறகு என் குருநாதர் சாலமன் பாப்பையா தலைமையில பேசினேன். அந்த வாய்ப்பு என் வாழ்நாளில் மறக்க முடியாதது.

என் மகனுக்கு ரெட்டைக்குழந்தைகள் பிறந்ததும், தலைவர்கிட்ட கூட்டிட்டுப்போய் ‘பெயர் வைங்க’னு சொன்னேன். பேரனுக்கு ‘தன்மானம்’ என்றும், பேத்திக்கு ‘தமிழரசி’ என்றும் பெயர் வெச்சார். ‘தன்மானம்ங்குற பெயரை இப்போதான் முதல்முறையா வைக்கிறேன்’ன்னு சொன்னார். ஒரு கூட்டத்துல நான் பேசினப்போ, ‘என்னை அ.தி.மு.க-வுல கூப்பிட்டாங்க. நான், அறிவாலயம் வாசல்ல சுண்டல் வித்தாவது பிழைச்சுக்குவேனே தவிர, என் சுயமரியாதை இழந்து அங்கே போகமாட்டேன்’னு சொன்னேன். அந்த நிகழ்ச்சி முடிஞ்சதும், ‘எப்போ சுண்டல் விக்கப்போற?’னு என் கன்னத்துல தட்டிட்டு, சிரிச்சிட்டே கார்ல ஏறினார்.

நான் அவரைப் பார்க்கப்போனால் வேட்டி சட்டை, சாத்தூர் காராசேவு, சிறுமலை வாழைப்பழம் வாங்கிட்டுப் போவேன். ‘வேட்டி சட்டையை நீயே வெச்சுக்கோ... காராசேவையும் வாழைப் பழத்தையும் தயாளுகிட்ட கொடுத்திடு’னு சொல்வார். மைசூர் பாக், சாத்தூர் காராசேவு ரெண்டையும் தட்டுல வெச்சுக்கிட்டு மாத்தி மாத்தி எடுத்துக் கடித்துச் சாப்பிடுவது கலைஞருக்கு ரொம்பப் பிடிக்கும்.

கலைமாமணி விருது வழங்கும் விழா. எல்லோ ருக்கும் அமைச்சர் பரிதி இளம்வழுதிதான் விருது கொடுத்தார். என் பெயரை அறிவிச்சதும், ‘பரிதி... அவனுக்கு நான் தர்றேன்’னு சொல்லி எனக்கு விருது கொடுத்தார் கலைஞர். அப்போ எனக்கு ஒரு முத்தமும் கொடுத்தார். முப்பெரும் விழாவுல எனக்கு பாரதிதாசன் விருது கொடுத்தார். அப்போதும் எனக்கு ஒரு முத்தம் கொடுத்தார். முத்தமிழறிஞர் கலைஞரிடம் மூன்று முறை முத்தம் வாங்கி யிருக்கேன். அவரிடம் மறுபடியும் ஒரு முத்தம் வாங்க ஆசையா இருக்கு. காத்திருந்தேன். ஆனா, காலம் அவரை அழைத்துக்கொண்டது!”

- உ.சுதர்சன காந்தி
படம்: சு.குமரேசன்