
தமிழ்மகன்
அரசியல் விருப்புவெறுப்புகளைக் கொஞ்சம் ‘சைலன்ட் மோடி’ல் போட்டுவிட்டு அமைதியாகப் பார்த்தால், இந்திய அரசியலில் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் பரபரப்பாக இயங்கிய, பன்முகம்கொண்ட ஒரு தலைவரை நினைவு கூர்வீர்கள். நடு வகிடு, கறுப்புக் கண்ணாடி இவற்றுடன் தோளில் ஒரு வேட்டியையே துண்டாகப் போர்த்தியபடி மைக் முன்னால் கர்ஜிக்கும் ஒரு முகம் நினைவுக்கு வரும். அவர்தான், மு.கருணாநிதி. கலைஞர், தமிழினத் தலைவர், முத்தமிழ் அறிஞர் என அவரது பெயரில் மரியாதை நிமித்தமாக அடைமொழிகள் மாறியபடி இருந்தன.

பெரும் திரளான மக்கள் கூட்டத்தைப் பேச்சால் கட்டிப்போடும் திறமை அவரிடம் இருந்தது. கவிதை, நாடகம், நாவல், கட்டுரை எனக் கவித்துவமான எழுத்து வலிமை இன்னொரு பக்கம். நிர்வாகத்திறன், நினைவாற்றல், அயராத உழைப்பு ஆகியவை அரசியல் களத்தில் அவருக்கு அனுசரணையாக இருந்தன. ஒரு முழுநேர எழுத்தாளரைவிடவும் அதிகமாக எழுதினார். முழுநேரப் பத்திரிகையாளரைவிடவும் அதிக நேரம் பத்திரிகை அலுவலகத்தில் கிடந்தார். முழுநேரச் சினிமாக் கதாசிரியர்களைவிடவும் அதிகமாக வசனம் எழுதினார். பேச்சாளர், நாடக நடிகர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, படத் தயாரிப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மாநிலத்தின் முதல்வர் எனப் பன்முகம் கொண்ட ஓர் அரசியல் தலைவர் கருணாநிதி.
ஐந்து முறை முதல்வர், ஐந்து முறை எதிர்க்கட்சித் தலைவர், 74 திரைப்படங்களுக்குத் திரைக்கதை அமைத்தவர், 50 ஆண்டுகளாக ஒரு கட்சியின் தலைவர் என எதையும் சாதனையாக நிகழ்த்திக்காட்டியவர். ஒரு சிப்பிக்குள் அடக்க முடியாத முத்து. அகம் புறம் எனப் பேதமில்லாத திறந்த புத்தகமாகத் தமிழ் மக்களுடன் கலந்துவிட்டது இந்த கோபாலபுரத்தாரின் வாழ்க்கை.
ஒவ்வொரு துறையிலும் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.

முழுமையான பத்திரிகையாளர்!
பள்ளி மாணவராக இருந்தபோதே பத்திரிகையாளர் அவதாரம் எடுத்தவர் கலைஞர். 15 வயதில் முரசொலி இதழைத் தொடங்கினார். தயாளு அம்மாளை அவர் மணந்தபோது, திருமண அழைப்பிதழில் ‘மு.கருணாநிதி - முரசொலி ஆசிரியர்’ என்றே பதித்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் எனப் பொறுப்புகள் மாறும்... இருக்கைகள் இடம் மாறும். ஆனால், அவர் பத்திரிகை ஆசிரியராக முரசொலியில் தலைகாட்டிவிட்டுச் செல்வது மட்டும் மாறவே இல்லை. சில சமயங்களில், அவரே கார்ட்டூன் வரைந்த வரலாறும் உண்டு.
பதில் சொல்வதற்கோ, அறிக்கை வெளியிடுவதற்கோ இதற்குமுன் வந்த அரசு ஆணைகள், தலைவர்கள் சொன்ன கருத்துகள் போன்றவற்றைத் தேடித்தரச் சொல்வார். அந்த அறிக்கை வந்த காலகட்டத்தையும், செய்தி வெளிவந்த தேதியையும் நினைவுபடுத்திச் சொல்வார். அடித்தல் திருத்தல் இல்லாத எழுத்து. ‘வரைகிறாரோ ஒவ்வொரு எழுத்தையும்’ என ஆச்சர்யமாக இருக்கும். நூறு பக்கங்கள் எழுதினாலும் அதே எழுத்துதான். கிறுக்கித்தரும் வழக்கம் இல்லை. சட்டசபைக்குச் செல்ல வேண்டியதோ, கவியரங்கத்துக்குச் செல்ல வேண்டியதோ, மாநாடுகளை ஒருங்கிணைக்க வேண்டியதோ, வழக்குகளுக்காக நீதிமன்றம் செல்ல வேண்டியதோ, திரைக்கதை எழுத வேண்டியதோ அவருக்கு நெருக்கடியாக இருக்கும். ஆனாலும், அவர் உடன்பிறப்பு களுக்காகக் கரிகாலன் பதில்கள் வழங்குவதையோ, கடிதம் எழுதுவதையோ நிறுத்தியது இல்லை. முழுமையாகப் பத்திரிகையாளனாய் தன்னை நம்புகிற ஒருவரால்தான் அப்படி ஓய்வின்றி செயல்பட முடியும்.
தடம்பதித்த திரைத்துறையாளர்
கருணாநிதி எழுதிய பல நாடகங்களில் அவரே கதாநாயகனாகவும் நடித்தார். பக்கம் பக்கமாக அடுக்குமொழி வசனங்கள் அணிவகுக்கும். திராவிடர் கழகக் கொள்கைகள் வாழைப்பழத்தில் ஊசி சொருகினாற்போல இருக்கும். ‘‘துணிந்தவனுக்குத் தூக்குமேடைப் பஞ்சு மெத்தை... அரசனை மட்டும் அல்ல; ஆண்டவனையும் எதிர்க்கத் துணிந்துவிட்டார்கள் மக்கள்’’ என்றெல்லாம் வசனம் அனல் பறக்கும். அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களைப் பற்றிய விமர்சனம், மூடநம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் நம்பிக்கைக்கு எதிர்ப்பு, பெண் சுதந்திரம் எல்லாவற்றையும் வரிசைப்படுத்திவிட்டு, அதற்கு நடுவே ஒரு கதையையும் சொல்லும் சாதுர்யம் அது. சாக்ரடீஸ் நாடகம், சிலப்பதிகாரத்தின் இலக்கியச் சுவை எல்லாம் இழையோடும். வெள்ளிக்கிழமை, தூக்குமேடை, சிலப்பதிகாரம், உதயசூரியன், மணிமகுடம், நச்சுக்கோப்பை போன்றவை கருணாநிதி எழுதிய நாடகங்கள். அவற்றில் சில, திரைப்படங்களாகவும் வெளிவந்தன. தி.மு.க-வின் பிரசாரம் எங்கெல்லாம் பலிக்குமோ, அங்கெல்லாம் கருணாநிதியின் அஸ்திரங்கள் செயல்பட்டன.
தமிழ் சினிமாவுக்குத் தமிழ் ரத்தம் பாய்ச்சிய பெருமை கலைஞருக்கு உண்டு. சுவாமி, நாதா, தேக பரிபாலனம், சொப்பனம் என மணிப்பிரவாளம் பேசிக்கொண்டிருந்த தமிழ் சினிமா, ‘அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள், மதிகெட்டவனே?’ என்றது கலைஞரின் தமிழில். ‘நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது’ என சிவாஜி கணேசன் முழக்கத்தில் வெளியான ‘பராசக்தி’ கோர்ட் சீன், 65 ஆண்டுகள் கடந்த பின்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. ‘‘என் சுயநலத்திலே பொது நலமும் கலந்திருக்கிறது. ஆகாரத்துக்காக அழுக்கை உண்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன்... அப்படி!’’ என அந்த வசனத்தின் ஒவ்வொரு வரியும் தீப்பொறியாக இருக்கும். ஆகாரத்துக்காக அழுக்கை உண்பது என்ன மாதிரியான சுயநலம்? ஆடம்பரமான ஒன்றை அனுபவித்தாலும் அதனால் பொதுமக்களுக்கு நன்மையே கிடைத்தது என்று சொல்லாமல், எவ்வளவு ஜாக்கிரதையாக வார்த்தையைப் பிரயோகித்தார் என்பது கவனிக்கத்தக்கது.
ஒருமுறை நடிகர் கமல்ஹாசனை நான் பேட்டி கண்டபோது, ‘‘கலைஞர் வசனம் எழுதிய காகிதங்களை மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அவர் வசனம் மட்டும் எழுதவில்லை. வசனப் பக்கங்களின் ஓரத்தில் அந்தக் காட்சிக்கு எப்படி ஷாட் வைக்க வேண்டும் என்பதையும் எழுதியிருந்தார். அவருக்குள் ஒளிந்திருக்கும் இயக்குநர் எனக்குத் தெரிந்தார்’’ என்று சொன்னார்.
போகிற போக்கில் சில திருத்தங்களைச் செய்ததைப் பலரும் பதிவுசெய்திருக்கிறார்கள். ‘பூம்புகார்’ படத்தில் கவுந்தி அடிகளாக நடித்த கே.பி.சுந்தராம்பாள் ஒரு பாடல் வரியைப் பாடமாட்டேன் எனச் சொல்லிவிட்டார். கோவலன் கொல்லப்பட்டதும் கண்ணகி மதுரையையே எரிக்கிறாள்... அப்போது சுந்தராம்பாள் பாடுவதாகக் காட்சி. அந்த வரி இப்படி இருந்தது... ‘அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது, நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்றுவிட்டது?’
‘தெய்வம் எங்கே சென்றுவிட்டது’ எனக் கடவுளையே கேள்வி கேட்கும் பாடலை நான் பாட மாட்டேன் என கே.பி.சுந்தராம்பாள் சொல்லிவிட்டார். விஷயம் கருணாநிதியிடம் வந்தது... ஒரு நொடி யோசித்தார். ‘நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்துவிட்டது’ என மாற்றினார். ‘தெய்வம் வந்துவிட்டது’ என்று சொன்னதில் சுந்தராம்பாளுக்கு மகிழ்ச்சி. கண்ணகியைத் தெய்வமாக்கிவிட்டதில் கருணாநிதிக்கு மகிழ்ச்சி. இதுதான் சாதுர்யம்.
எம்.ஜி.ஆருக்காக ‘எங்கள் தங்கம்’ படத்துக்கு கவிஞர் வாலி ஒரு பாட்டு எழுதினார். பாடலின் முதல் வரி... ‘நான் அளவோடு ரசிப்பவன்.’ அடுத்த வரி அவருக்கு இன்னும் அமையவில்லை... யோசனையில் இருந்தார். கருணாநிதி முதல் வரியைப் பார்த்தார். ‘‘அடுத்த வரி?’’ என்றார். ‘‘இனிமேல்தான் எழுத வேண்டும்...’’ என்றார் வாலி. ‘‘ ‘எதையும் அளவின்றிக் கொடுப்பவன்’ எனப் போடுங்கள்’’ என்றார் கருணாநிதி. அது கருணாநிதியின் தயாரிப்பு நிறுவனமான மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு. எம்.ஜி.ஆர் தன் தயாரிப்பு நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்ததற்கு நன்றி சொன்னதுமாதிரியும் அந்த வரி அமைந்தது.

இலக்கியப் பக்கங்கள்
எவ்வளவு பேசினாரோ, அவ்வளவு எழுதினார். சரித்திர நாவல்களின் பட்டியல் ஒரு பக்கம்; கவியரங்கக் கவிதைகள் ஒரு பக்கம்; சமூகக் கதைகளின் பட்டியல் ஒரு பக்கம்; சிறுகதைகளின் அணிவகுப்பு ஒரு பக்கம்; திருக்குறள் உரை, தொல்காப்பிய உரை, தாய்க் காவியம் என விளக்கவுரை எழுதிய நூல்கள் ஒரு பக்கம். இப்படி கருணாநிதியின் பக்கங்கள் எண்ணற்றவை. திரைக்கதை வசனங்கள், நாடகங்கள், கடிதங்கள், கேள்வி பதில்கள், கட்டுரைகள் என எழுதிக்குவித்தவையும் சேர்த்தால், ‘இந்த மனிதர் பிறந்ததிலிருந்து எழுதிக்கொண்டேதான் இருந்திருப்பார்’ என இவரை அறியாதவர்கள் நினைக்கக் கூடும்.
சரித்திரக் கதை எழுதுவது சாதாரணம் அல்ல. அந்தக் காலத்தில் பயன்படுத்திய உடை, உணவு, போர்க்கருவிகள், பயணிக்கும் முறை, மன்னர்கள் மற்றும் புலவர்களின் பெயர்கள், மொழிப் பிரயோகம், கால வித்தியாசம், தூர வித்தியாசம் அனைத்தும் மனதுக்குள் இருக்க வேண்டும். இலங்கைமீது போரிட்டான் என்றால் எப்படி படைக்கருவிகளைக் கொண்டுசென்றான், உணவுக்கு என்ன வழி செய்தான், வீரர்களுக்கு என்ன பயிற்சிகள் அளிக்கப்பட்டன, எதற்காகப் போரிட்டான் எனக் கதையைப் பின்னிக்கொண்டு போகவேண்டும். எவ்வளவு நாள்கள் பயணித்தனர். கப்பலைச் செலுத்துபவனின் அறிவு, நாவாய், பாய்மரம், படகு ஆகியவற்றுக்கான வித்தியாசங்கள் என நுணுக்கமாக அறிந்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் நேரம் அவருக்கு ஒத்துழைத்தா... நேரத்துக்கு அவர் ஒத்துழைத்தாரா என்ற ஆச்சர்யம்தான் அந்தச் சரித்திரக் கதைகளைவிடவும் முக்கியம்.
குறளோவியம் என ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு சிறுகதை எழுதி விளக்கியது குறள்மீது அவருக்கு இருந்த ஈர்ப்பை விளக்கும். அரசு சார்பில் கட்டப்பட்ட ஒரு கட்டடத்துக்குக் குறளகம் எனப் பெயர் வைத்திருப்பதும் அந்த ஈர்ப்புக்கு இன்னொரு அடையாளம். அவருடன் தி.மு.க-வில் பங்காற்றிய நெடுஞ்செழியன், அன்பழகன் போன்றவர்கள் எம்.ஏ படித்தவர்கள். நல்ல தமிழறிஞர்கள். ஆனால், எழுதும் ஆர்வத்தோடு ஒப்பிட்டால் கருணாநிதியை நெருங்க முடியாத தூரத்தில் இருந்தனர். நெஞ்சுக்கு நீதி எனத் தன் வாழ்க்கையைத் தானே பதிவு செய்ய நினைத்து, அதிலும் ஆறு பாகங்களை எழுதி முடித்துவிட்டார் கருணாநிதி.
சோதனைகள்... சாதனைகள்!
ஆட்சியில் இல்லாத நிலையிலும் அரசியல் நடத்துவதும், கட்சியைக் கட்டிக்காப்பதும் அவருக்கு இருந்த சவால். முரசொலியில் எழுதுகிற கடிதங்களை வைத்தே, 13 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத நிலையிலும் உடன்பிறப்புகளை உடன் தொடரவைத்தார். சுயமரியாதை திருமணத்தை சட்டரீதியாக செல்லுபடி ஆக்கியது, அனைவரும் அர்ச்சகராகும் உரிமை தந்தது எனச் சட்டத்துக்கு உட்பட்டுப் போராட வேண்டிய கடமைகள் அவருக்கு இருந்தன. ‘முதல்வரின் இலவசக் காப்பீட்டுத் திட்டம்’, தமிழக ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரமாக இருந்தது. மாநில பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தொழில்துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். ஐ.டி துறையை மாநிலத்தில் வரவேற்கும் விதமாக, அவரது பதவி காலத்தில், தரமணியில் டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். இணைய மாநாடு நடத்தினார். உழவர் சந்தை, சமத்துவபுரம் போன்றவை இவருக்குப் பெருமை சேர்த்த திட்டங்கள்.
திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ‘வள்ளுவர் கோட்டத்தை’ நிறுவினார். ஐயன் திருவள்ளுவருக்கு 133 அடியில் குமரியில் அமைத்த சிலை, வரலாற்றுச் சின்னமாக தென் திசையை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. சிலப்பதிகாரம் நினைவாக பூம்புகாரைப் புதுப்பித்தவர். குடிசை மாற்றுவாரியம், கை ரிக்ஷா ஒழிப்பு, கண்ணொளி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களால் ஏழை எளியவர்கள் பயன் அடைந்தனர். மாநில சுயாட்சிக் கொள்கை இவருடைய மகத்தான முழக்கமாக இருந்தது.
‘உன்மீது அடித்த வெயில்
பசிபிக் கடல்மீது அடித்திருந்தால்
பாதி கடல்
பாலையாகப் போயிருக்கும்’
எனக் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். இது கவிநயத்துக்காகச் சொல்லப்பட்டதுதான். ஆனால், இதில் உண்மையில்லாமல் இல்லை!