Published:Updated:

பிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்!

பிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்!
News
பிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்!

ஊடகவியலாளர்களின் சந்திப்பில் என்ன நடந்தது?

மீபத்தில், தமிழகத்தின் பிரதான ஊடகவியலாளர்கள் சிலர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்தார்கள். மரியாதை நிமித்த சந்திப்பு என்று சொல்லப்பட்ட அதுகுறித்துப் பொதுவெளியில் பல்வேறு யூகங்கள் கிளம்பின, விகடனையும் தொடர்புபடுத்தி. விகடன் செய்தி அறையில் இயங்கும் எங்களுக்கு, விகடன் பற்றி அந்த யூகங்கள் நிறுவ விரும்பும் கருத்துகள் ஆச்சர்யம். மோடியுடனான சந்திப்பில் பங்கு பெற்றிருந்தவர்களில் விகடன் குழும நிர்வாக இயக்குநர் மற்றும் ஆனந்த விகடன் ஆசிரியர் பா.சீனிவாசனும் ஒருவர். ‘மோடியுடனான  சந்திப்பு எப்படி நடந்தது, அங்கு என்ன நிகழ்ந்தது, இப்போது பரவும் யூகங்களுக்கு விகடனின் எதிர்வினை என்ன... மனம் திறந்து பகிர்ந்து கொள்ள முடியுமா’ என அவரிடம் கேட்டேன்.  இதோ... அவருடைய வார்த்தைகளிலேயே...  

பிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்!

 ‘‘பிரதமர் மோடியுடனான இந்தச் சந்திப்பு எப்போது திட்டமிடப்பட்டது?’’

``ஒரு நாள்... ஒரு தொலைபேசி அழைப்பு. இணைப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். ‘பிரதமர் மோடி அவர்கள், தமிழக ஊடகவியலாளர்களை மரியாதை நிமித்தம் சந்திக்க விரும்புகிறார். உங்கள் வரவை அவசியம் எதிர்பார்க்கிறார்’ என்று சொன்னார். ‘பிரதமர் மோடியின் முந்தைய சென்னை வருகையின்போதே திட்டமிடப்பட்டு, சில காரணங்களால் நிகழாமல்போன ஊடகவியலாளர்களுடனான இந்தச் சந்திப்பை, இப்போது டெல்லியில் ஏற்பாடு செய்திருக்கிறோம்’ என்றார். டெல்லியில் ஜூலை 30-ம் தேதி மாலை 6 மணியளவில் நிகழ்ந்தது சந்திப்பு!’’

 “பிரதமர் மோடியைச் சந்திக்க நீங்கள் ஒப்புக்கொண்டது ஏன்?’’

     
“சந்திப்புக்கான அழைப்பின்போது குறிப்பிட்டதுபோல மரியாதை நிமித்தம்தான். பத்திரிகையாளர்கள் பிரதமர்களைச் சந்திப்பது இது முதல் முறையுமல்ல... நிச்சயம் கடைசி முறையாகவும் இருக்காது. இந்திய அரசின் செயல்பாடுகள் தொடர்பான  கருத்தோ, எதிர்க்கருத்தோ, அதைப் பதிவு செய்ய இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என நினைத்தேன். சராசரி இந்தியக் குடிமகனின் மனநிலை பற்றியும், சாமான்ய மக்கள் அனுதினம் எதிர்கொள்ளும் சூழல் குறித்தும் பிரதமரிடம் விவாதிக்கக் கிடைக்கும் வாய்ப்பாக இதைப் பார்த்தேன். எனவே, ஒப்புக்கொண்டேன்!’’

பிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்!

“சந்திப்பில் என்ன நடந்தது?’’

“25 பேர் அமரக்கூடிய அறையில் காத்திருந்தோம். மூன்று பேருக்கான இருக்கை காலியாக இருந்தது. மாலை 6.19 மணிக்கு வந்தார் பிரதமர் மோடி. `வணக்கம்’ என்றபடி அமர்ந்தார். அவருக்கு அருகே அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் அமர்ந்தனர். தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பின்னர் கலந்துரையாடலில் இணைந்தார். ‘அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்கவே விருப்பம். ஆனால், அன்றாடப் பணிகளுக்கிடையே அது சாத்தியமில்லை என்பதால், இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தேன். தமிழக ஊடகங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்துப் பேசலாம். அலுவல்ரீதியாக இல்லாமல் மனம் விட்டுப் பேசுங்கள். ஆனால், இங்கு பேசுவது எல்லாமே ஆஃப் தி ரெக்கார்ட்’ என்று உரையாடலைத் தொடங்கினார் மோடி. `டிரெண்டிங் பதற்றம்’ முதல் 200 வருடப் பழைமையான நீர்த்தேக்கத் தொட்டி வரை கருத்துப் பரிமாற்றங்களால் நிறைந்த அந்த மாலை, ஒரு தேநீர் விருந்துடன் நிறைவு பெற்றது!’’

“ஆஃப் தி ரெக்கார்ட் என மோடி குறிப்பிட்டதாகச் சொன்னீர்கள். ஆனாலும், கலந்துரையாடலின் மையமாக என்னவெல்லாம் இருந்தன எனத் தெரிவிக்க முடியுமா?’’

``ம்ம்ம்... நாம் தினசரி கடக்கும் நிகழ்வுகளும் அதன் பின்னணிகளும் தான்.  நீட் சர்ச்சைகள், தமிழக நீர்வள சிக்கல்கள், டாஸ்மாக் செயல்பாடுகள், இலங்கை அகதிகளின் துயரங்கள், ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், சமூக வலைதளங்களின் வரமும் சாபமுமாகப் பலதிசைகளில் நீண்டது விவாதம். வளமான தமிழகம் முதல் வாட்ஸ்-அப் வதந்திகள் வரை, ஊடகவியலாளர்களின் மன நிலையைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினார் மோடி!’’  

பிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்!

``தமிழக ஊடகவியலாளர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள மட்டுமே மோடி இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தாரா?’’

‘`அதுவும் ஒரு நோக்கம். ஆனால், சந்திப்பின் இறுதியில் அவர் தெரிவித்த ஒரு கருத்து, அவர் மனநிலையை உணர்த்தியது. `இந்தச் சந்திப்பின் மூலம் நான் வேண்டிக்கொள்வது ஒன்றுதான். ‘பிரதமர் இப்படிச் சொன்னார்... இவர்களைச் சந்தித்தார்’ என்றெல்லாம் செய்தியாக்குவதை விட, அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைந்திருக்கின்றனவா என்று கண்டறிந்து சொல்லுங்கள். அது தொடர்பான விமர்சனங்களையும் பதிவு செய்யுங்கள். குறை இருப்பின், எனது அரசாங்கத்தை விமர்சிக்கத் தயங்காதீர்கள். நாங்கள் செய்திருக்கும் நல்ல விஷயங்கள் மக்களுக்கு நன்மை அளித்திருக்கிறது என்று நீங்கள் நம்பினால், உறுதிப்படுத்திக் கொண்டால், அவற்றைச் செய்தியாக்கவும் தவறாதீர்கள்’ என்றார்!’’

“இதை, ‘இனி மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசுக்கு ஆதரவாக மட்டுமே செய்திகளைப் பிரசுரிக்க வேண்டும்’ என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்பட்டது என்று புரிந்து கொள்வதா?!’’ 

பிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்!

“ஹா..ஹா..! வல்லரசுகளையும், உச்ச அதிகாரங்களையும் தனி மனிதர்கள் உலுக்கியெடுக்கும் இன்றைய டிஜிட்டல் மீடியா யுகத்தில், அது சாத்தியமா என்ன? நான் நம்பவில்லை. மோடியுடனான சந்திப்பில் நடந்த விவாதங்கள், மிகவும் வெளிப்படையாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தன!’’

“பிரதமருடனான சந்திப்புக்குப் பின் விகடனின் அச்சு, இணையம், காட்சி ஊடகங்களில் பி.ஜே.பி-க்கு ஆதரவான செய்திகள் அலையடிக்கும் எனக் குவியும் யூகங்களுக்கு உங்கள் பதில் என்ன?’’
 
“மத்திய அரசோ, மாநில அரசோ... அப்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகளை அதன் தரத்துக்கேற்ப விகடன் பாராட்டுவதோ, விமர்சிப்பதோ, கண்டனங்களைப் பதிவு செய்வதோ... முன்னெப்போதையும்போலத் தொடரும். இது இப்போதைய  பி.ஜே.பி அரசுக்கென அல்ல... 92 வருடங்களாக விகடன் கடைப்பிடிக்கும் ஊடக அறம்!’’

“‘மரியாதை நிமித்தம்’ பிரதமரைப் பத்திரிகையாளர்கள் சந்தித்தது பெரும் ரகசியமாக வைத்திருக்கப்பட்டதுபோலத் தோன்றுகிறதே!’’

பிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்!

“சந்திப்பு நிகழ்ந்தபோது அது இயல்பான ஒன்றாகத்தான் இருந்தது. ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ என்றும் சந்திப்பில் குறிப்பிடப்பட்டது. அதனால் அதைப் பற்றி விளம்பரப்படுத்த, மூடி மறைக்க என என்னிடம் எந்த முனைப்பும் இல்லை! ஆனால், சந்திப்பு தொடர்பான விவரங்களும் புகைப்படங்களும் அதிகாரபூர்வமற்ற முறையில் வெளியாகி, அது ஏதோ ரகசியமாகத் திட்டமிடப்பட்ட சந்திப்புபோலச் சித்திரிக்கப் பட்டது என்னை ஆச்சர்யப்படுத்தியது. மேலும், அந்தச் சந்திப்பைச் சுட்டிக்காட்டி விகடனின் இயல்பான செயல்பாடுகள்மீதே களங்கம் பூசப்பட்டது. ஆதாரமற்ற அவதூறுகள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால்,   ‘பிரதமருடனான சந்திப்பில் என்னதான் நடந்தது’ என்று கேட்பவர்களுக்கு, என் பதில் இதுதான்! போற்றுவோர் போற்ற... தூற்றுவோர் தூற்ற... எப்போதும்போலப் பணி செய்வான் விகடன்!’’

“மோடியுடனான சந்திப்பு குறித்த தகவல்களும் புகைப்படங்களும் எப்படி வெளியாகின?’’


``யாமறியேன் பராபரமே!’’
 
“நீங்கள் என்ன சொன்னாலும், ‘பிரதமருடனான சந்திப்புக்குப் பின் பி.ஜே.பி-யுடன் விகடன் நெருக்கம் பாராட்டும்’ என்றெழும் விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன?’’

“இந்தியப் பிரதமருடனான மரியாதை நிமித்தச் சந்திப்பு, ‘பி.ஜே.பி-யுடன் விகடன் நெருக்கம் பாராட்டும்’ வாய்ப்பாகப் புரிந்து கொள்ளப்படுவதற்கு நான் என்ன செய்ய முடியும்?! இதற்கு முன்னர் பல்வேறு தலைவர்களை விகடன் சார்பாகச் சந்தித்திருக்கிறேன். பல்வேறு ஆட்சிகளின் சாதக பாதகங்களை விகடனில் விரிவாகவே பதிவு செய்திருக்கிறோம். அப்போதும்கூட இப்படியான விமர்சனங்கள் வரத்தான் செய்தன.

பிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்!

தி.மு.க ஆட்சிக்காலத்தில் ‘பூணூல் பத்திரிகை’, ‘அவாள் பத்திரிகை’ என்றெல்லாம் விகடன்மீது முத்திரை குத்தப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியைக் கடுமையாக விமர்சித்ததற்காக, விகடன்மீது ஏராளமாக அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தது அ.தி.மு.க அரசு. இன்றளவும் அந்த வழக்குகளுக்காக நீதிமன்றப் படியேறிக் கொண்டிருக்கிறோம். வைகோவின் அரசியல் செயல்பாடுகளை விமர்சித்த சமயங்களில், ‘ஜூனியர் விகடனைத் தி.மு.க விலைக்கு வாங்கிவிட்டது’ என்று பிரசாரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ‘தி.மு.க சொம்பு’ என்றும்கூட விமர்சித்தார்கள். ஆனந்த விகடனில், `மந்திரி தந்திரி’ என்ற தலைப்பில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சிக்காலங்களிலும் அமைச்சர்களின் செயல்பாடுகளை சாதக பாதகங்களுடன் கடுமையாக விமர்சித்தே பதிவு செய்திருக்கிறோம். இவையெல்லாம் விகடனை ஆத்மார்த்தமாக நேசித்து வாசிக்கும் அன்பு வாசகர்கள் நன்கு அறிவர்.

சமீபமாக ‘ஆன்ட்டி இந்தியன்’, ‘ஆன்ட்டி -பிராமின்’, `நக்சல்’ என்றும் பல பட்டங்கள் விகடனுக்கு சூட்டப்படுகின்றன. அந்த வரிசையில் `பி.ஜே.பி பக்தன்’ என்பது பத்தோடு பதினொன்றாகச் சேர்ந்தாலும், நான் ஆச்சர்யப்பட மாட்டேன். ஏனென்றால், பழுத்த மரம்தானே கல்லடிபடும்!

நிறைவாக ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்...

 விருப்புவெறுப்பில்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தோள் கொடுக்கும் தோழனாகவும், குறை சுட்டும் விமர்சகனாகவும் இருந்திருக்கிறது விகடன். என்றென்றும் அப்படியேதான் இருக்கும். எந்தச் சமயம் தோழன்; எந்தச் சமயம் விமர்சகன் என்பதை அந்தக் கட்சிகளின் செயல்பாடுகள்தாம் தீர்மானிக்குமே தவிர, விகடன் அல்ல!

ஏனெனில், அப்போதும்... இப்போதும்... எப்போதும்... விகடன் நம்பும் ஒரே தலைவன்... விகடன் வாசகன் மட்டுமே!’

- கி.கார்த்திகேயன்

’விகடனின் விமர்சனப் பார்வை!

டந்த சில மாதங்களாக மத்திய /  மாநில அரசியல் கட்சிகள்மீதான விகடனின் விமர்சனப் பார்வைகளை  அறிய, தொடர்புடைய QR Code-களை ஸ்கேன் செய்து பார்க்கலாம்!

பிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்!

மோடியுடனான சந்திப்பு மற்றும் விகடனின் நிலைப்பாடு குறித்து தங்களின் கருத்தை கமென்ட்டில் பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்!