Published:Updated:

புதிய பயணம் ஆரம்பம்!

புதிய பயணம் ஆரம்பம்!
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய பயணம் ஆரம்பம்!

புதிய பயணம் ஆரம்பம்!

ரவு 11.30 மணி. சென்ட்ரல் ரயில் நிலையப் பேருந்து நிலையத்தில், வடபழனி செல்வதற்காக நின்று கொண்டிருந்தேன். ‘மா உலா’ என்று எழுதப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வந்த மாற்றுத்திறனாளி ஒருவர், ‘மேடம் எங்கே போகணும்.. உங்களை டிராப் பண்ணணுமா’என்றார். திடுக்கிட்ட என்னைப் பார்த்து, அவருமே கொஞ்சம் பயந்துவிட்டார். ‘நீங்க யாருங்க?’ எனத் திகிலோடு கேட்டதும் சுதாரித்துக்கொண்டு, ``எம்பேரு முகம்மது கதாபி. ஆட்டோக்காரங்க மாதிரிதான்மா நாங்களும். ஆனா ஆட்டோ சவாரியைவிட கம்மியாதான் சார்ஜ் பண்ணுவோம். கிலோ மீட்டருக்குப் பத்து ரூபாய் தான் வாங்குறோம்” என்று புன்னகைத்தார். அவரோடு பயணமானேன். ‘அது என்ன மா உலா. எத்தன பேரு இந்த சர்வீஸ் பண்றீங்க’ எனக் கேள்விகளை அடுக்கினேன். ‘என் நண்பர்களை அறிமுகப்படுத்தட்டுமா?’ என்றார். அடுத்த நாளே ‘மா உலா’ அலுவலகத்தில் சந்தித்தோம்.

புதிய பயணம் ஆரம்பம்!
புதிய பயணம் ஆரம்பம்!

``என் பேரு பாலாஜி. பத்தொன்பது வயதில் திடீரென ஏற்பட்ட நோய் பாதிப்பினால் என் கால்கள் செயலிழந்துட்டுது. அதுக்கப்புறம் என்ன பண்றதுன்னு தெரியல. மனசளவுல ரொம்பவே கஷ்டமான சூழலில் தள்ளப்பட்டிருந்தாலும் யாருக்கும் பாரமா இருக்கக்கூடாதுன்னு நினைச்சேன். அரசாங்கம் கொடுத்த இலவச டூவிலரில் எங்க ஏரியாவில் உள்ளவங்களை கிலோ மீட்டருக்குப் பத்து ரூபாய்க்கு டிராப் பண்ணேன். யாராவது பேருந்துக்காகக் காத்திருந்தால், எங்கே போகணும் சார்.. நான் டிராப் பண்ணவான்னு கேட்பேன். அவங்க சரி சொன்னா அவங்க போகணும்னு சொல்ற இடத்துல டிராப் பண்ணுவேன். இறங்கினதும் கிலோ மீட்டர் பார்த்துக் காசு கொடுப்பாங்க. அவங்க கூட டிராவல் பண்ணும்போது நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசிட்டுப் போவேன்’’ என்றார்.

புதிய பயணம் ஆரம்பம்!
புதிய பயணம் ஆரம்பம்!

மா உலாவில் செல்வி அக்கா மட்டும்தான் பெண் டிரைவர். ``எனக்கு எண்ணூர்தான்மா. நான் ஊனம்னு என் சொந்தக்காரங்க எல்லாரும் என்னை ஒதுக்கிட்டாங்க. ஒருகட்டத்துக்கு மேல எல்லோர்கிட்ட இருந்தும் விலகி, என்னை மாதிரி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் செஞ்சிட்டிருந்தேன். தனிமை நிறைய வலிகளைக் கொடுத்திருந்தாலும், வாழ்ந்து காட்டணுங்குற வைராக்கியத்தையும் கொடுத்துச்சு. பாலாஜி மூலமாதான் `மா உலா’ அறிமுகமாச்சு. எண்ணூரைச் சுத்தி இருக்கிற ஏரியாவுக்கு சவாரி செய்ய ஆரம்பிச்சேன். ஆண்களைப் பெரும்பாலும் வண்டியில் ஏத்த மாட்டேன். ஒருத்தன் எண்ணூர்ல இருந்து திருவொற்றியூர் போகணும்னு சவாரி ஏறுனான். நானும் கூட்டிட்டுப் போய்ட்டிருந்தேன். அப்போ அவனுடைய உறுப்பை வெச்சு என் பின்னாடி இடிச்சான். நெருப்பை அள்ளிக் கொட்டின மாதிரி இருந்துச்சு. `சார் கொஞ்சம் தள்ளி உட்காருங்க’ன்னு சொன்னதுக்கு ‘அப்போ நீ இந்த வேலைக்கே வந்துருக்கக்கூடாது, அட்ஜெஸ்ட் பண்ணிக்கோன்’னு சொன்னான். அந்த இடத்துலேயே வண்டியை நிறுத்தி அவனைத் திட்டி இறக்கிவிட்டு வந்தேன். மாற்றுத்திறனாளிகள் சொந்தமா உழைக்க நினைக்கிறாங்கன்னு யாரும் நினைக்கிறது இல்ல.. சில ஆண்கள் பாலியல் ரீதியா தொந்தரவு பண்றதுனாலதான் பலர் இந்த மாதிரி சொந்தமா உழைக்க பயப்படுறாங்கம்மா” என்றார் கண்ணீர் மல்க. ‘மா உலாவின்’ முக்கிய உறுப்பினர் முகம்மது கபாபி தொடர்ந்தார்.

புதிய பயணம் ஆரம்பம்!

``நான் பிஹெச்.டி முடிச்சிருக்கேன். ஒரு காலேஜ்ல கெஸ்ட் லெக்சரரா வேலை பார்த்துட்டு இருந்தேன். ஆள் குறைப்புத் திட்டம் மூலமா அங்கே இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு. இப்போ ஒரு ஆன்லைன் பத்திரிக்கையில் கன்டென்ட் ரைட்டரா வேலை பார்க்குறேன். இரவு இந்த வாகனம் ஓட்டுறேன். என் ஃப்ரண்ட், அவனுடைய ஃப்ரண்ட்னு சேர்ந்து ஒரு குழுவா இந்த வண்டியை ஓட்டலாம்னு முடிவு பண்ணுனோம். இப்போ எங்க குழுவில் 22 பேர் இருக்கோம். இது எங்களுடைய விருப்பம் தான். எங்களால் முடியுற நேரம் வண்டி ஓட்டுவோம். முடியலைன்னா லீவு எடுத்துப்போம். எங்களுடைய கஸ்டமர்ஸ் வீட்டுக்கே போய் அவங்களைப் பத்திரமா இறக்கிவிடுறதுனால எங்களுக்கென ரெகுலர் கஸ்டமர்ஸும் இருக்காங்க. ஒரு சிலர் குடிச்சிட்டு வந்தா, கொஞ்சம் தவறா பிஹேவ் பண்ணுவாங்க. காசு கொடுக்காமப் போயிடுவாங்க. இன்னும் சிலர், முந்நூறு ரூபாய் கொடுப்பதற்கு ஐந்நூறு ரூபாய் கொடுப்பாங்க. இந்தப் பயணங்கள் எல்லாமே புதுவித அனுபவத்தைக் கொடுக்கும்’’ என்றார் நம்பிக்கையோடு.

உலா சிறக்கட்டும்!

வெ.வித்யா காயத்ரி - படங்கள்: ப.பிரியங்கா