மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இது இனிஷியல் போராட்டம்! - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி - 11

சட்டம் பெண் கையில்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில் ( யாழ் ஶ்ரீதேவி )

சட்டம் பெண் கையில்

தந்தையின் ஆதரவின்றி முழுக்க முழுக்க தாயின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளுக்கான உரிமையை நிலைநிறுத்தும் விதமாக, தீர்ப்பை வழங்கியது நீதிமன்றம்.

திருமணத்துக்குப் பின் பல்வேறு காரணங்களால் தனித்து வாழும் பெண்கள், சந்திக்கும் சங்கடங்கள் ஏராளம். பதில் சொல்ல முடியாமல் கடந்து செல்லும் கேள்விகள் எண்ணற்றவை. திருமணம் ஆகாமல் தாயாகும் பெண்கள் தங்களுக்கான ஒவ்வோர் உரிமையையும் போராடியே பெற வேண்டிய நிலையில் உள்ளனர். இவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் இவர்களுக்கான சட்ட நடைமுறைகள் குறித்து விளக்குகிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

‘`ஒரு குழந்தையின் பிறப்பில், வளர்ப்பில் தாய் தந்தை இருவருக்கும் சம பொறுப்பு உள்ளது. ஆனால், அந்தக் குழந்தைக்கான இனிஷியல் என்று வரும்போது கணவன் பெயருக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இங்கு பெண் புறக்கணிக்கப்படுகிறாள்.  இது காலம் காலமாகத் தொடர்கிறது. இனிஷியலுக்குத் தந்தை பெயரைத்தான் கொடுக்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. பெண்ணை சமமாக உணரச்செய்ய, சமுதாயம் பின்பற்றிவரும் இதுபோன்ற சம்பிரதாயங்களை மாற்ற பெண்ணுக்கு நீதிமன்றம் துணை நிற்கிறது.

இது இனிஷியல் போராட்டம்! - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி - 11

பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் இடம்பெறாத இந்தியாவின் முதல் குழந்தை!

பிறப்புச் சான்றிதழில் தந்தை, தாய் என்று இரண்டு பிரிவுகள் இடம்பெற்றிருக்கும். அதில் எழுத்துப்பிழை, பெற்றோர் பெயரில் திருத்தம் செய்ய வேண்டும் என்றால்கூட இதற்கான நடைமுறைகளை முடிக்க நீண்ட காலம் பிடிக்கும். இந்த நிலையில், ‘என் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் என்ற பிரிவை நீக்க வேண்டும்’ என மதுமிதா என்பவர் வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றுள்ளார். இது அவ்வளவு சாதாரணமாக நடந்துவிடவில்லை. மதுமிதா விவாகரத்தானவர். விந்தணு தானம் பெற்று, கருத்தரித்துக் குழந்தை பெற்றார். மதுமிதா சிகிச்சை பெற்றபோது அவரின் நண்பர் உதவிசெய்தார். திருச்சி வருவாய்த்துறை, மதுமிதாவின் குழந்தை தப்ஷிக்கு பிறப்புச் சான்றிதழ் அளித்தது. அதில் ‘தந்தை’ என்ற இடத்தில் மதுமிதாவின் நண்பர் பெயர் தவறுதலாக எழுதப்பட்டிருந்தது. மதுமிதா, வருவாய்த்துறையினரிடம் தந்தையின் பெயரை நீக்கும்படி கோரிக்கை வைத்தார்.

‘தந்தையின் பெயரில் திருத்தம் மட்டுமே செய்ய முடியும், தந்தை பெயரை நீக்க முடியாது’ என வருவாய்த்துறை மதுமிதாவுக்குப் பதிலளித்தது. இதில் திருப்தியடையாத மதுமிதா தன் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயரை நீக்க, நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம், பிறப்புச் சான்றிதழில் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புடன் வருவாய்த்துறையை நாடிய மதுமிதாவுக்குக் கிடைத்த பதில் இதுதான் - ‘பெயரை நீக்குவது எங்கள் கட்டுப்பாட்டில் வருவதில்லை. பிறப்பு, இறப்பைப் பதிவு செய்யும் பதிவுத் துறைக்கே இதற்கான அதிகாரம் உள்ளது’ என்றது.

மதுமிதா விடவில்லை. தான் விவாகரத்தானவர் என்பதால் தன் முன்னாள் கணவர் இந்தக் குழந்தைக்குத் தகப்பன் கிடையாது என்று வாதாடினார். செயற்கை முறையில் நவீன மருத்துவத்தின் வழியாக மதுமிதா குழந்தை பெற்றுக்கொண்டதால், அவர் கோரிக்கையில் உள்ள நியாயத்தை நீதிமன்றம் பரிசீலனை செய்தது. குழந்தை தப்ஷியின் பிறப்புச் சான்றிதழில் தவறுதலாக எழுதப்பட்டிருந்த தந்தையின் பெயரை நீக்கவும், ‘தந்தையின் பெயர்’ என்ற இடத்தில் எதுவும் நிரப்பாமல் விடவும் உத்தரவிட்டது. பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் எழுதப்படாமல் தாயின் பெயர் மட்டும் எழுதப்பட்டிருக்கும் இந்தியாவின் முதல் குழந்தை என்ற சிறப்பு தப்ஷிக்குக் கிடைக்கப்போகிறது.

விவாகரத்துக்குப் பிறகு இனிஷியல்?

ஒரு பெண்ணுக்கு இனிஷியல் என்பது திருமணத்துக்கு முன் தந்தையின் பெயராகவும், திருமணத்துக்குப் பின் கணவனின் பெயராகவும் உள்ளது. இதனால் திருமணத்துக்குப் பின் அவர் பயன்படுத்தும் முக்கிய ஆவணங்கள் அனைத்திலும் கணவன் பெயரின் முதல் எழுத்தே இனிஷியலாக இடம்பெற்றிருக்கும். விவாகரத்தான பின் அனைத்து ஆவணங்களிலும் இனிஷியலை மாற்ற வேண்டியிருக்கும். மறுமணம் செய்து கொண்டவர்களும் தனது இனிஷியலை மாற்றிக்கொள்கின்றனர். விவாகரத்துக்குப் பின் தனித்து வாழும் பெண்கள் அவர்களின் முன்னாள் கணவரின் பெயரை இனிஷியலுக்குத் தொடர்ந்து பயன்படுத்தலாமா என்ற சர்ச்சை ஒருபுறம் தொடர்கிறது. இதுபற்றி நீதிமன்றங்கள் சொல்வதென்ன?

இது இனிஷியல் போராட்டம்! - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி - 11

கணவர் பெயரைப் பயன்படுத்தலாம்!

மும்பையில் வசித்த 67 வயதான ஹேமா என்பவர் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கச் சென்றார். ‘நீங்கள் விவாகரத்தானவர். உங்கள் முன்னாள் கணவரின் பெயரை இனிஷியலாகப் பயன்படுத்தக் கூடாது. அல்லது, அவரிடம் மறுப்பின்மைக் கடிதம் பெற்றுத்தர வேண்டும்’ என்று பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகம் தெரிவித்தது. மும்பை உயர் நீதிமன்றத்தில் அவரது வழக்கு விசாரணைக்கு வந்தது. ‘முன்னாள் கணவரின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று எந்தச் சட்டமும் இல்லை’ என்று ஹேமாவுக்குச் சாதகமான தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் வழங்கியது.

கணவர் மறுப்பு தெரிவித்தால்...

காவல்துறையில் பணியாற்றிய  நபர் ஒருவர், தன் முன்னாள் மனைவி, தனது பெயரை ‘சர் நேம்’ ஆக பயன்படுத்துவதைத் தடை செய்யக் கேட்டு நீதிமன்றத்தை நாடினார். விவாகரத்துக்குப் பின் முன்னாள் கணவரின் பெயரை மனைவி பயன் படுத்தலாமா, கூடாதா என்பதற்குத் தனிப்பட்ட  சட்டங்கள் எதுவும் இல்லை என்ற நிலையில், உச்சநீதிமன்றம் வரை வந்த இந்த வழக்கில் நீதிமன்றம் திடுக்கிடும் தீர்ப்பை வழங்கியது. ‘விவாகரத்தான என் மனைவி, என் சம்மதம் இல்லாமல் தொடர்ந்து என் பெயரைப் பயன்படுத்தினால், மற்றவர்கள் அவரை என் மனைவியாகவே கருதுவார்கள். இதனால் எனது பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது’ என்றார் மனுதாரர். நீதிமன்றம் அவரது வாதத்தை ஏற்றுக் கொண்டது. ‘காவல்துறை அலுவலரின் மனைவி, தன் கணவரின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது’ எனத் தீர்ப்பு வழங்கியது.  விவாகரத்துக்குப் பின் கணவர் மறுப்பு தெரிவித்தால், மனைவி அவர் பெயரை ‘சர் நேம்’ ஆக பயன்படுத்தக் கூடாது என்று இந்தத் தீர்ப்பு வலியுறுத்துகிறது.

சிங்கிள் பேரன்ட்... இனிஷியல் என்ன?!

சில பெண்கள், தங்களை விட்டுப்பிரிந்து வேறு ஒரு திருமணம் செய்துகொண்ட முன்னாள் கணவரின் பெயர், இனிஷியலாக தங்கள் வாழ்க்கையுடன் தொடர்ந்து கொண்டிருப் பார்கள். இதை இந்து இளவர் மற்றும் பாதுகாப்பாளர் சட்டம் 1956 (Hindu Minority and Guardianship Act) தெளிவுபடுத்துகிறது. இச்சட்டத்தின்படி, 18 வயதுக்குட்பட்ட மைனர் குழந்தைக்கு கார்டியன் என்ற முறையில் தந்தையின் பெயரையே குறிப்பிட வேண்டும். அவர்களுக்கு இயற்கையான கார்டியன் தந்தையே. தந்தை உயிரோடு இல்லாவிட்டால் தாய் கார்டியன் ஆகலாம். ஐந்து வயது நிரம்பாத குழந்தையாக இருந்தால் அதன் கஸ்டடி மட்டுமே தாய்க்குக் கிடைக்கும். இல்லெஜிடிமேட் (சட்ட ரீதியான அங்கீகாரமற்ற) மைனர் குழந்தைகளுக்குத் தாய்தான் இயற்கையான கார்டியன். அதற்குப் பின்னரே தந்தை கார்டியனாக இருக்க முடியும்.

சிங்கிள் பேரன்ட்டாக குழந்தையை வளர்க்கும் தாய்க்குச் சவாலாக இருக்கும் மேற்சொன்ன சட்டப் பிரிவுகளின் சிக்கலில் இருந்து அவரை விடுவிக்கும்விதமாக, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றி...

அடுத்த இதழில் பார்ப்போம்

ஓவியம் : கோ.ராமமூர்த்தி

கார்டியன்!

மைனர் குழந்தையின் தந்தை உயிருடன் இருக்கும்போது தாயை மட்டும் தனிப் பாதுகாப்பாளராக நியமிக்க முடியாது என்று சட்டம் சொல்லும் நிலையில், இது குறித்த வழக்குகள் அதிகம் பதிவாயின. கடந்த 2016-ம் ஆண்டில் இந்து இளவர் மற்றும் பாதுகாப்பாளர் சட்டத்தின் சில பிரிவுகளில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி தந்தைக்குப் பிறகு தாய் பாதுகாப்பாளராக இருக்க முடியும் என்பதை நீக்கிவிட்டு, மைனர் குழந்தைக்குத் தந்தை மற்றும் தாய் இயற்கைப் பாதுகாப்பாளர் என்று சேர்க்கப்பட்டுள்ளது.

இது இனிஷியல் போராட்டம்! - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி - 11

வாங்க பேசலாம்!

ஆளுமை மேம்பாட்டு வகுப்பில், பேசுபவர் கண்களைப் பார்த்துப் பேச வேண்டும். கை குலுக்கும்போது, அதில் தேவையான இறுக்கம் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லித் தருவார்கள். நீங்கள் கவனிக்கிறீர்கள் என்று பேசுபவருக்குப் புரிய வேண்டுமாம். யார் உங்களிடம் உரையாடினாலும், நீங்கள் நிஜமாகவே கவனித்தால், கவனிப்பதை உடல்மொழி மூலம் புரியவைக்க அவசியமற்றுப் போகும் என்பதுதான் உண்மை. முகமும் உடலும் தன்னாலே அதை பிரதிபலிக்கும். ஒருவேளை கவனிக்கும் மனநிலையில் நீங்கள் இல்லையென்றால், எண்ணங்களை எங்கோ அலையவிட்டுவிட்டு, முகத்தை மட்டும் கேட்பது போல வைத்துக் கொள்வதை விட, பிறகு பேசலாம் என்று நாகரிகமாகச் சொல்லிவிட வேண்டும். உரையாடலில் மல்ட்டிடாஸ்க்கிங் வேலைக்கே ஆகாது.