
பதவியின் விலை என்ன?
தலைமைப் பதவி வகிப்பவர்களுக்கு முக்கியமான ஒரு பண்பு வேண்டும். அதைப் பற்றின்மை என்றும் சொல்லலாம். எதன் மீதும் ஆசைப்படாமல் இருப்பது; கிட்டத்தட்ட துறவறம் போன்றது. இந்த அடிப்படை புரியாததுதான் பல நிர்வாகக் கோளாறுகளுக்குக் காரணம். நிர்வாகக் கோளாறுகள், அடிமட்டத்தில் இருப்பவர்வரை பாதிப்பை ஏற்படுத்தும். மிகப் பெரிய பொறுப்பிலிருந்தும் தங்கள் நிலையை உணர்ந்த தலைவர்களும் இருந்திருக்கிறார்கள்... அவர்களில் ஒருவர் லால் பகதூர் சாஸ்திரி. சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் பதவிவகித்தவர்.
ஒரு நாள், லால் பகதூர் சாஸ்திரி ஒரு டெக்ஸ்டைல் மில்லுக்குப் போயிருந்தார். வந்திருப்பது நாட்டின் பிரதமரமல்லவா..! அந்தத் தொழிற்சாலையின் உரிமையாளர் சாஸ்திரியை உரிய மரியாதை செலுத்தி வரவேற்றார்; அவரே உடன் வந்து தொழிற்சாலையைச் சுற்றிக் காட்டினார். சாஸ்திரி மெதுவாகத் தொழிற்சாலை இயங்கும்விதம், தொழிலாளர்களின் ஊதியம், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாகக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டார்.

கடைசியாக இருவரும் தொழிற்சாலைக் கிடங்குக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே பல சேலைகள் விற்பனைக்காகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்ததும் லால் பகதூர் சாஸ்திரியின் கண்கள் விரிந்தன. ``எனக்கு சில சேலைகளை எடுத்துக் காட்ட முடியுமா?’’ என்று கேட்டார்.
``நிச்சயமா...’’ என்ற தொழிற்சாலையின் உரிமையாளர், சாஸ்திரியை ஓர் நாற்காலியில் அமரச் சொன்னார். ஒரு சிப்பந்தியை அழைத்து சேலைகளை எடுத்துப் போடச் சொன்னார். எல்லாமே தரமான, அழகான டிசைன்களில் அமைந்திருந்த சேலைகள். சாஸ்திரி, நான்கைந்து சேலைகளைப் பார்த்துவிட்டு, ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். ``இது என்ன விலை?’’ என்று கேட்டார்.
``800 ரூபா ஐயா.’’
இதைக் கேட்டு சாஸ்திரியின் முகம் சுருங்கியது. ``இதைவிடக் குறைந்த விலையில புடைவைகள் இல்லையா?’’
``இருக்குங்கய்யா....’’ என்ற சிப்பந்தி மேலும் சில சேலைகளை எடுத்துக் காண்பித்தார். சாஸ்திரி ஒவ்வொன்றின் விலையையும் கேட்டுக்கொண்டே வந்தார்.
``இது 500 ரூபா...’’
``இதைவிட விலை குறைவா...’’
``இது 400 ரூபா...’’
``இன்னும் கம்மியா... என்னை மாதிரி ஏழை வாங்குற விலையில எடுங்களேன்...’’
இதைக் கேட்டு தொழிற்சாலை உரிமையாளர் குழம்பிப் போனார். ``ஐயா... நீங்க இந்தியாவின் பிரதமர். நீங்க எப்படி உங்களை ஏழைனு சொல்லிக்க லாம்? எல்லாத்தையும்விட, இங்கே இருக்குற எந்தச் சேலையை வேணும்னாலும், எத்தனை வேணும்னாலும் நீங்க எடுத்துட்டுப் போகலாம். அதுக்கு நீங்க பணம் தரவேண்டியதில்லை. அது என் பரிசு...’’
``நண்பரே, அவ்வளவு விலை உயர்ந்த பரிசை என்னால ஏத்துக்க முடியாது. நான் பிரதமரா இருக்கலாம். அதுக்காக என்னால விலை கொடுத்து வாங்க முடியாததையெல்லாம் வாங்கி என் மனைவிக்குக் கொடுக்க முடியாது. எனக்கும் சில வரையறை உண்டு. என்னால வாங்க முடிகிற விலையில சேலைகளைக் காண்பியுங்க...’’ கொஞ்சம் கடுமையாகவே சொன்னார் சாஸ்திரி.
தொழிற்சாலை உரிமையாளர் எவ்வளவோ வற்புறுத்தியும் இலவசமாகச் சேலையை வாங்க மறுத்துவிட்டார் லால் பகதூர் சாஸ்திரி. அன்றைக்கு அவர் தன் மனைவிக்காக வாங்கிய சேலையின் விலை 125 ரூபாய்!
- பாலு சத்யா
ஒரு துளி சிந்தனை
`அறிவு உங்களுக்கு ஆற்றலைப் பெற்றுத் தரலாம்; குணம்தான் மரியாதையைப் பெற்றுத் தரும்.’ - புரூஸ் லீ