
ரீவைண்டு
பூனை உளவாளிகள்!
அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ, 1960-களில் சோவியத் அரசை உளவு பார்க்க, புதிய உளவாளிகளைத் தயார்செய்தது. விலங்கு மருத்துவர்கள் மூலமாக பூனைகளின் உடலில் மறைவாக சிறிய மைக்ரோபோன், ரேடியோ டிரான்ஸ்மீட்டர் போன்றவை பொருத்தப்பட்டன. அவற்றின் புசுபுசு முடி கொண்ட உடலில் வயர்கள் மறைத்து வைக்கப்பட்டன. மாஸ்கோ நகரத்துக்குள் இந்தப் பூனைகளை அனுப்பி, அவற்றின்மூலம் உளவுபார்க்கும், தகவல்களைச் சேகரிக்கும் இந்தத் ஆபரேஷனுக்கு Acoustic Kitty என்று பெயரிடப்பட்டிருந்தது.

சோதனை முயற்சியாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்திலுள்ள சோவியத் தூதரகத்தின் அருகில், உளவுப் பூனை ஒன்று விடப்பட்டது. தூதரகத்துக்குள் செல்லாத அந்தப் பூனை, அங்குமிங்கும் ஓடி இஷ்டத்துக்கு சேட்டைகள் செய்து, பின் ஒரு காரில் நசுங்கிப் பலியானது. இப்படி எந்த ஒரு பூனைக்கும் அவர்களால் பயிற்சி கொடுக்கவே முடியவில்லை. ‘நான், அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்’ என்றே எல்லா பூனைகளும் முரண்டு பிடித்தன.
இறுதியில், சிஐஏ இந்த பூனை உளவாளித் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட்டது. இந்தத் திட்டத்துக்கென அமெரிக்க அரசு செலவு செய்த தொகை $20 மில்லியனும் நஷ்டமானது. மியாவ்!
வெள்ளை மாளிகை முதலை!
மார்குவிஸ் டி லாஃபாயெட், பிரான்ஸைச் சேர்ந்த ராணுவத் தளபதி. அமெரிக்க புரட்சிப் போர், பிரெஞ்சுப் புரட்சி, ஜூலைப் புரட்சி போன்ற வரலாற்று நிகழ்வுகளில் முக்கியமாகப் பங்காற்றியவர். கி.பி 1824 ல், அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்துக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரை மக்கள் அவரை கொண்டாட்டத்துடன் வரவேற்று, விதவிதமான பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.

ஒருவர், உயிருள்ள பெரிய முதலை ஒன்றை லாஃபாயெட்டுக்குப் பரிசாக அளித்தார். அவரால் மறுக்க முடியவில்லை. முதலையுடன் அவரது சுற்றுப்பயணம் தொடர்ந்தது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு விருந்துக்குச் சென்றார் லாஃபாயெட். அப்போதைய அமெரிக்க அதிபரான ஜான் குவின்ஸி ஆடம்ஸ், முதலையுடன் வந்த லாஃபாயெட்டைக் கண்டு திகைத்துப் போனார். ‘இந்தப் பரிசை உங்களுக்காகத்தான் கொண்டுவந்தேன்’ என்று லாஃபாயெட் அதிபரிடம் முதலையை ஒப்படைத்தார். அதிபர் மாளிகையில் அந்த நீளமான, கூரிய பற்களைக் கொண்ட முதலை வளர ஆரம்பித்தது.
அமெரிக்க அதிபரைச் சந்திக்க பல்வேறு விருந்தினர்கள் வருவதுண்டு. ‘நீங்கள் இந்த அறையை உபயோகித்துக் கொள்ளுங்கள்’ என்று கைகாட்டுவார் அதிபர். வந்த விருந்தினரும் அந்த அறைக்குச் செல்வார். அது கட்டி முடிக்கப்படாத அறையாக இருக்கும். அங்கே ஒரு பெரிய பாத்-டப் இருக்கும். அதன் அருகே செல்லும் விருந்தினர் அலறி அடித்து வெளியே ஓடி வருவார். ஏனென்றால் அந்த பாத்-டப்பில் முதலையார் ஏகாந்தமாக மிதந்து கொண்டிருப்பார். இப்படி விருந்தினர்களைப் பயமுறுத்துவதற்கென்றே அமெரிக்க அதிபர் அந்த முதலையைப் பயன்படுத்திக் கொண்டார்.
1929-ல் அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றவர் ஹெர்பெர்ட் ஹூவெர். அவரது மகனான ஆலன், இரண்டு முதலைகளை வளர்த்தார். அவை இரண்டும் வெள்ளை மாளிகையில் வராண்டாக்களிலும் தோட்டத்திலும் ஹாயாக வாக்கிங் சென்றன.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர்கள் மட்டுமல்ல, முதலைகளும் வசித்தன.
டைனிங் டேபிள் ரயில்!
குவாலியர் சமஸ்தானத்தை ஆட்சிசெய்த மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா, மிகவும் வேடிக்கையானவர். அவர் அரண்மனையின் விருந்து மேசையில் ஒரே சமயத்தில் 200 பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். மகாராஜா, அந்த நீளமான மேசையின் நடுவே சுமார் 100 மீட்டருக்கு வெள்ளியாலான சிறிய தண்டவாளத்தை அமைத்திருந்தார். அதன்மேல் அழகான சிக்குபுக்கு இன்ஜின், அதன் பின்னால் இணைக்கப்பட்ட சில பெட்டிகள். முழுவதுமே வெள்ளி. மின்சாரத்தால் இயங்கக்கூடிய மினி ரயில் அது.

விருந்து ஆரம்பித்ததும் அந்தக் குட்டி ரயில், தன் பெட்டிகளில் பானங்கள், உயர்ரக உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா போன்றவற்றைச் சுமந்து கொண்டு விசில் எழுப்பியபடி சுற்றி வரும். மகாராஜா, தன் கையில் உள்ள ரிமோட் மூலம் ரயிலை இயக்குவார். தேவைப்படும் இடங்களில் ரயிலை நிறுத்துவார். விருந்தினர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்வார்கள்.
1905 -ல் இங்கிலாந்தின் அடுத்த கிங் ஆகும் தகுதியில் இருந்த ஐந்தாம் ஜார்ஜும் அவரது மனைவி மேரியும் குவாலியர் அரண்மனைக்கு விருந்துக்காக வந்தார்கள். அப்போதும் விருந்து மேசையில் மகாராஜா ரயில் ஓட்டினார். ஜார்ஜும் மேரியும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். அன்றைக்குப் பார்த்து அந்தக் குட்டி ரயில் தடம் புரண்டு கவிழ்ந்தது. ஜார்ஜ், மேரியின் உடைகள் ரயில் பெட்டிகளிலிருந்து சிந்திய பானங்களால் நாசமாகின. அவர்கள் இருவரும் கோபத்தில் எழ, மகாராஜா விழுந்து விழுந்து மன்னிப்பு கேட்டார். அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தச் சம்பவத்துக்குப் பரிகாரம் தேட நினைத்த மகாராஜா, பின்னர் தனக்குப் பிறந்த மகனுக்கு ‘ஜார்ஜ்’ என்றும், மகளுக்கு ‘மேரி’ என்றும் கூடுதல் பெயர் சூட்டினார். உண்மையான ஜார்ஜும் மேரியும் குளிர்ந்து போனார்கள்.
- முகில், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி