மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

நரி வேட்டை!  

##~##

புது டெல்லி நகரத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, டிசம்பர் 15-ம் தேதி 1911-ம் ஆண்டு நடைபெற்றது. 1905-ம் ஆண்டில் இருந்தே பிரிட்டிஷ் அரசு தலைநகரத்தை மாற்றக் காரணங்களைத் தேடிக்கொண்டு இருந்தது. அதன் விளைவுதான், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் அறிவிப்பு என்றும் சொல்கிறார்கள்.  

ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் வேட்டைக்கும் ஆதியில் நடைபெற்ற வனவாசிகளின் வேட்டை​களுக்கும் இடையில் என்ன வேறுபாடு என்ற கேள்வி வரக்கூடும். வனவாசிகள் தங்கள் அதிகாரத்​தைக் காட்டிக்கொள்வதற்காக ஒரு போதும் வேட்டையாடவில்லை என்பதுதான் அதற்கான பதில். ஆங்கிலேயர்கள் அடர்ந்த காடு இல்லாத தேசத்தில் இருந்து வந்தவர்கள். அதிலும், புலி போன்ற வலிமை மிக்க மிருகம் அங்கே கிடையாது. ஆகவே, அவர்கள் புலியை வெறும் ஆட்கொல்லியாக மட்டுமே அடையாளம் கண்டார்கள். புலியைக் கொல்வதை சாதனை என்று கூறி விருது கொடுத்தார்கள். அந்த எண்ணம்தான் இந்திய விலங்குகளை அவர்கள் கொன்று குவிக்கக் காரணமாக இருந்தது.

எனது இந்தியா!

இங்கிலாந்து கிராமங்களில் பல நூற்றாண்டுகளாக நரி வேட்டையாடுவது ஒரு பொழுதுபோக்கு. வேட்டை நாய்களை வைத்து நரிகளைத் துரத்தி வேட்டை​யாடுவார்கள். சில நேரங்களில், குதிரைகளில் சென்று துப்பாக்கியால் நரிகளைச் சுட்டுக் கொல்வதும் உண்டு. அது இயற்கையை அழிக்கும் செயல் என்று இங்கிலாந்து அரசு தடை விதித்தது. அவர்கள் நாட்டில் நரியைக் கொல்வதைத் தடை செய்த அரசு, இன்னொரு நாட்டில் காண்டா மிருகத்தைக் கொல்வதைக்கூட தவறாக நினைக்கவே இல்லை. அதுதான், பெரிய முரண்.

மனிதனைக் கொல்லும் இந்த மிருகங்களை ஏன் பாதுகாக்க வேண்டும்? மனிதன் தனது தேவைக்​காக மிருகங்களைக் கொல்வதில் என்ன தவறு இருக்கிறது? என்ற கேள்விகள் நமக்குள் எப்போதும் இருக்கின்றன. மிருகம் எந்த மனிதனையும் இருப்பிடம் தேடிவந்து கொல்வது இல்லை. அவன் தனக்கு இடையூறு செய்கிறான் என்று உணரும்போதுதான், தாக்குகிறது. பசிதான் அதன் ஒரே காரணம். மனிதனும் பன்னெடுங்காலமாகவே முன்பு பசிக்காக விலங்குகளை வேட்டை​யாடி இருக்கிறான். அது ஒரு மானோ, முயலோ, காட்டெருதாகவோ இருக்கக்கூடும். அதிலும், சினையாக உள்ள விலங்குகளை வேட்டையாட மாட்டார்கள். விலங்குகளின் இனப்பெருக்கக் காலத்தில் வேட்டைக்கு செல்லவே மாட்டார்கள். வேட்டையாடிய மிருகங்களை ஊரே கூடி பகிர்ந்து உண்பார்கள். அதுதான் நடைமுறை.

எனது இந்தியா!

காட்டில் புலி ஒரு மிருகத்தை வேட்டையாடி உண்ணும்போது, மீதமுள்ளதை  100 சிறு உயிர்கள் உணவாகப் பகிர்ந்துகொள்கின்றன. அதே செயல்பாடுதான் ஆதிமனிதர்​களிடமும் இருந்தது. ஆனால், மன்னர் காலத்திலும் அதன் பின்பு ஆண்ட வெள்ளைக் காலனிய காலத்திலும்தான் பொழுது போக்கவும், வீரத்தை நிரூபிக்கவும் மிருகங்களை வேட்டையாடினர்.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மட்டும் அல்ல... சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வேட்டை தொடங்கி மொகலாயர்களின் வேட்டை வரை எவ்வளவோ சாகச சம்பவங்கள் சரித்திரத்தில் இருக்கின்றன. அந்த வேட்டையில், துணைக்குச் சென்ற சாமான்யர்கள் புலி தாக்கி இறந்து போயிருக்கிறார்கள். ஆனால், ஓர் அரசன்கூட பலி ஆனதில்லை. இந்தியாவில் பிரதானமாக வேட்டையாடப்பட்டது நான்கே விலங்குகள். புலி, யானை, காண்டாமிருகம் மற்றும் அரிய வகை மான்கள். இந்த நான்கிலும் காடுகளில் இன்று இருப்பது 20 சதவீதமே. மற்றவை, வேட்டையில் அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டன.

புலி இனத்தில் ராயல் பெங்கால், தெற்கத்திய சீனம், இந்தோசீனம், சுபத்திரன், சைபீரியஸ், பாலி, ஹாஸ்பின், ஜாவா ஆகிய எட்டு வகைகள் இருந்தன. இவற்றில் 1940-ல் பாலி, ஹாஸ்பின் ஆகிய இனங்களும், 1970-ல் ஜாவா இனமும் முற்றிலும் அழிந்துவிட்டன. இப்போது, நான்கு வகையான புலி இனங்களே இருக்கின்றன. இவற்றில், இந்தியாவில் உள்ள பிரதான வகை ராயல் பெங்கால் புலிகள், சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியா முழுவதும் சேர்ந்து மொத்தம் 40,000-க்கும் மேற்பட்டவை இருந்தன. ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் படித்த இந்திய அதிகாரிகளின் வேட்டையால் அது வெகுவாகக் குறைந்துவிட்டது. 1973-ல் நடத்திய கணக்கெடுப்புப்படி, இந்தியாவில் உள்ள மொத்தப் புலிகளின் எண்ணிக்கை 1,800. இப்போது 1,411 என்கிறார்கள். ஒரு முதிர்ந்த ஆண் புலியைக் கொல்வது அதன் வம்சத் தொடர்ச்சியை அழிப்பதாகும்.

மொகலாய மன்னர் ஜஹாங்கீர், தான் வேட்டையாடிய விலங்குளைப் பற்றிய பட்டி​யலை தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார். தனது 12 வயதில் தொடங்கி 48 வயதுக்குள் அவர் வேட்டையாடிய விலங்குகளின் எண்ணிக்கை 28,532. அவர், தனி ஆளாகக் கொன்ற மிருகங்களின் எண்ணிக்கை  17,167. இவற்றில் சிங்கம், கரடி, புலி, சிறுத்தை, மான், எருது, யானை என சகலமும் அடக்கம்.

ரேவா சமஸ்தானத்தின் ஒவ்வொரு ராஜாவும் எவ்வளவு காட்டு மிருகங்களை வேட்டையாடினார்கள் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. 1911-ல் ராஜா ரகுராஜ் சிங் கொன்ற புலிகளின் எண்ணிக்கை 91. சிறுத்தைகள் 7, யானைகள் 5. ராஜா பவதேவ் கொன்ற புலிகள் 121. சிறுத்தை 12, கரடி 4. ராஜா குலாப் சிங் தனது முதல் புலியை சுட்டபோது, அவருக்கு வயது 13. அவர் கொன்ற புலிகளின் எண்ணிக்கை 616. இவற்றில் ஆண் 327, பெண் புலிகள் 289. இவை தவிர, யானை மற்றும் கரடிகளின் எண்ணிக்கை 526. இப்படி தலை​முறைக்குத் தலைமுறை அழியும் புலிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது.

புலிகளைப் போலவே, வெகுவாக அழிந்துபோன இன்னோர் இனம் காண்டா மிருகம். இதை வேட்டையாடியதைப்பற்றி பாபர் தனது நூலில் விரிவாக குறிப்பிட்டு உள்ளார். ஒரு காலத்தில் சிந்துச் சமவெளி முதல் வடக்கு பர்மா வரை பரவியிருந்த இந்தியக் காண்டா மிருகம், இன்று அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள இரண்டு இடங்களிலும், நேபாளத்தின் சித்தவான் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் மட்டுமே தென்படுகிறது.

எனது இந்தியா!

இந்தியக் காண்டா மிருகம் தனித்த வகைமை கொண்டது. ஒற்றைக் கொம்புகொண்ட இதற்கு மோப்ப சக்தி அதிகம். ஆனால், பார்க்கும் திறன் குறைவு. பெரும்பாலும் தனித்து வாழக்கூடியது. ஆகவே, இதை எளிதாக வேட்டையாடினார்கள். காண்டா மிருகத்தின் கொம்பு அதிக ஆண்மைச் சக்தி தரக்கூடியது என்ற நம்பிக்கை அந்தக் காலத்தில் இருந்தே நிலவி வருகிறது. அதன் கொம்பை வெட்டி எடுப்பதற்காக காண்டா மிருக வேட்டை இன்றும் தொடர்கிறது.

1993-ம் ஆண்டு பூடான் இளவரசி 22 காண்டா மிருகங்களின் கொம்புகளை தைவானுக்கு கடத்திச் செல்ல முயற்சி செய்தபோது பிடிபட்டார். அவரிடம் நடத்திய சோதனையில் இதுபோல நூற்றுக்கணக்கான காண்டா மிருகங்களை, மின்சாரம் பாய்ச்சிக் கொன்று அதன் கொம்புகளை விற்றதை ஒப்புக்கொண்டார். ஒரு கொம்பின் விலை ஒன்றரை லட்சம் டாலர். தோலின் விலை 40 ஆயிரம் டாலர்.

1683 வரை பிரிட்டனில் பொதுமக்கள் யாரும் காண்டா மிருகத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. 1683-ம் ஆண்டுதான் மக்கள் பார்வைக்காக காண்டா மிருகம், அங்கே காட்சிக் கூண்டில் வைக்கப்பட்டது. உலகில் உள்ள காண்டா மிருகங்களில் பாதிக்கும் மேல் இந்தியாவில்தான் வசித்தன. ஆனால், தொடர்ந்த வேட்டையாடலில் காண்டா மிருகங்கள் பெருமளவு அழிந்துவிட்டன.

இந்தியாவின் ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் ஒவ்வொரு விதமான விலங்குகளை வேட்டையாடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. இமயமலைப் பகுதியில் பனிச் சிறுத்தைகள், அஸ்ஸாமில் காண்டா மிருகம், நேபாளம் மற்றும் குவாலியர் பகுதியில் சிறுத்தை மற்றும் புலிகள் வேட்டையாடப் பட்டன. பறவைகள் அதிகம் வரும் பரத்பூர் பகுதிகளுக்குச் சென்றால், கறுப்பு வாத்துகளைக் கொன்று குவிக்கலாம். குஜராத் காடு களில் மான் வேட்டை, கிர் வனப் பகுதியில் சிங்கம், தெற்கே கேரளாவிலோ யானை வேட்டை சாத்தியம். இவை போக, கரடி, ஓநாய், மயில், காட்டுப்பன்றி, மிளா என்று இந்தியாவின் வன விலங்குகள் பெருமளவு, மன்னர்களாலும் காலனிய அதிகாரிகளின் சந்தோஷ விளையாட்டிலும் உயிரிழந்தன.

கர்ஸன் பிரபு வேட்டையாடிக் கொன்ற புலியின் முன்பு, தனது மனைவியோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மிகவும் பிரலபமானது. இறந்துபோன புலியின் தோலை பாடமாக்கி வைத்துக்கொள்வது, புலி வேட்டைக்காக தனியாக ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குவது இவை எல்லாம் சென்ற நூற்றாண்டு உயர்குடிப் பிரபுக்களின் வழக்கம்.

அதிகாரிகளை வன வேட்டைக்கு அழைத்துப் போய் வருவதற்காக சிகாரி எனப்படும் வழிகாட்டிகள் இருந்தார்கள். இவர்கள் காட்டை,  உள்ளங்கை ரேகை போல அறிந்தவர்கள். அவர்களின் துணை இல்லாமல் எந்த ஒரு வெள்ளைக்காரனும் வேட்டைக்குப் போய்விட முடியாது. சிகாரி செய்யும் உதவிக்கு பணமும், குடிப்பதற்கு மதுவும் கூலியாகத் தரப்பட்டது. இந்திய சிகாரிகளைப் போல காட்டு வாழ்வின் நுட்பங்களை அறிந்தவர்கள் உலகில் ஒருவரும் இல்லை என்று, வெள்ளைக்காரர்கள் பாராட்டி இருக்கின்றனர். ஆனால், விலங்குகளைக் கொல்வதை சிகாரிகள் விரும்புவது இல்லை. கொல்லப்பட்ட விலங்குகளின் முன்பு, 'தனது பாவத்தை மன்னிக்கும்படி சிகாரிகள் பிரார்த்தனை செய்கிறார்கள்’ என்று, ஆண்டர்சன் என்ற வேட்டையாடி எழுதி இருக்கிறார்.

வன வேட்டையின் வரலாறு குருதிக் கறை படிந்தது. அந்த நினைவுகள்தான், இந்தியன் என்றதும் வனவாசி என்று, வெள்ளைக்காரர்களை இன்றும் நினைக்கவைக்கிறது. கேளிக்கை என்று அறியப்பட்ட வேட்டையாடுதல், இயற்கையின் சம நிலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எறும்பில் இருந்து புலி வரை அத்தனையும் ஒன்று சேர்ந்து வாழும்போதுதான் காடு முழுமையாகிறது. அதை மறந்து ஓர் இனம் அழிக்கப்பட்டால், அதனைச் சார்ந்து வாழும் உயிரினங்களும் மெள்ள அழிக்கப்பட்டு விடும்.

நகர்மயமாதல், புதிய தொழிற்சாலை அமைப்பது என்று கடந்த 100 வருடங்களில் நிறையக் காடுகள் காணாமல்போயிருக்கின்றன. அதன் விளைவுகளே, இன்று நாம் அனுபவிக்கும் வறட்சி மற்றும் இயற்கை மாறுபாடுகள், சீற்றங்கள். அந்த விளைவுகளின் ஆதார வேர்களை வரலாறு நமக்கு அடையாளம் காட்டுகிறது.

நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்த இந்தக் கானுயிர் கொலைகளைத் தடுக்க, 1991-ம் ஆண்டு  நவம்பர் மாதம் வன வேட்டைத் தடுப்புச் சட்டம் அமலாகியது. அன்றோடு இந்திய வரலாற்றின் கரும்புள்ளி போல படிந்திருந்த வேட்டையாடுதல் அதிகாரபூர்வமாகத் தடை செய்யப்பட்டுவிட்டது என்றாலும், அலங்காரத்துக்காக மாட்டப்பட்டுள்ள மிருகங்களின் தலைகளும் பாடமாக்கப்பட்ட புலியின் உடலும் கடந்த காலத்தின் வன்முறையை நினைவுபடுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. மியூசிய சுவரில் மாட்டப்பட்டுள்ள புலியின் அசையாத கண்களில் அது கேட்க விரும்பிய கேள்வியும் உறைந்துபோய்தான் இருக்கிறது. அதைக் கவனிக்காதது போல நாம் கடந்துவிடுகிறோம் என்பதுதான் நிஜம்.

தொடரும் பயணம்..