சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“இவங்க இல்லுமினாட்டியா, இல்லையா?”

“இவங்க இல்லுமினாட்டியா, இல்லையா?”
பிரீமியம் ஸ்டோரி
News
“இவங்க இல்லுமினாட்டியா, இல்லையா?”

“இவங்க இல்லுமினாட்டியா, இல்லையா?”

``டேய்... கமல் ஒரு இல்லுமினாட்டியாம்... பிக்பாஸ்கூட அவங்க வேலைதானாம்... அவங்கதான் உலகையே இயக்குறாங்களாம்.” சமூக வலைதளம் மட்டுமல்ல; நேர்ப்பேச்சிலும் இதை நீங்கள் கேட்டிருக்கலாம். கமல் மட்டுமல்ல; இங்கே பல ‘இல்லுமினாட்டிகள்’ இருக்கிறார்கள்! அதிர்ச்சியடைய வேண்டாம்... முழுதும் படித்துவிட்டு முடிவுக்கு வாங்க! 

“இவங்க இல்லுமினாட்டியா, இல்லையா?”

இல்லுமினாட்டி என்ற சொல் லத்தீன் மொழியிலிருந்து வந்தது. ‘ஞானம் அடைந்தவன்’ என்று பொருள். இல்லுமினாட்டியை உலகம் முழுவதும் கொண்டுசேர்த்த பெருமை இணையத்தில் உலவும் பல்வேறு சதிக் கோட்பாட்டாளர்களையே சேரும். இவர்களுடைய விசித்திரக் கோட்பாடுகளில் நம்பகத்தன்மை என்பது துளியும் இல்லாததால் அவர்கள் எப்போதுமே காமெடி பீஸுகளாகவே பார்க்கப்படுகிறார்கள்!

இதில் விசித்திரம் என்னவென்றால், இந்த ரகசிய அமைப்பு இயங்கியது என்னவோ வெறும் பத்து வருடங்களுக்கும் குறைவாகத்தான். ஆனால், இன்றும் நூற்றாண்டுகள் கடந்து பல்வேறு அமைப்புகள் ‘இல்லுமினாட்டி’ என்று பெயர் சூட்டப்பட்டுக் குற்றம் சாட்டப்படுகிறார்கள். வரலாற்று ஆய்வாளர்களும், ஆதாரம் ஏதுமில்லை என்று கூறி அவர்களை அப்புறப்படுத்தி வருகிறார்கள். அப்போது அனைவருக்கும் எழும் ஒற்றைக் கேள்வி இதுதான்... “இந்த இல்லுமினாட்டிகள் உண்மையில் யார்?”

“எட்டிவிட முடியாத இலக்குதான். ஆனால், அந்த ஆறு அல்லது ஒன்பது பேர், உலகை ஆளவே விரும்பினார்கள்!”

- ‘கான்ஸ்பிரசி தியரீஸ் அண்டு சீக்ரட் சொசைட்டீஸ் ஃபார் டம்மீஸ்’ (Conspiracy Theories and Secret Societies for Dummies) புத்தகத்தின் இணை ஆசிரியரான கிரிஸ் ஹொடப் சொன்ன வார்த்தைகள் இவை.
இவர் கூறும் அந்த ஆறு அல்லது ஒன்பது பேர் கொண்ட குழுதான் முதன்முதலில் அதிகாரபூர்வமாக இல்லுமினாட்டிகள் என்று அழைக்கப்பட்ட ரகசிய இயக்கம். 18-ம் நூற்றாண்டில் இவர்கள் ‘பாவரியன் இல்லுமினாட்டி’ என்ற ரகசிய இயக்கத்தில் இயங்கினார்கள். இந்த இயக்கம் அதிகாரபூர்வமாக இயங்கியது 1776 முதல் 1785 வரை மட்டுமே என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் இப்போதும் யாரும் யாரை வேண்டுமானாலும் ‘இல்லுமினாட்டி’ என்று முத்திரை குத்திவிட முடிகிறது.

“இவங்க இல்லுமினாட்டியா, இல்லையா?”

உண்மையான இல்லுமினாட்டி இயக்கத்தைத் தொடங்கியவர் ஜெர்மானிய சட்டப் பேராசிரியரான ஆடம் வெயிஷ்ப்ட் (Adam Weishaupt).  அறிவொளிச் சிந்தனைகளை ஊக்குவிப்பதில் பெரும் பங்காற்றினார். இன்றைய இளைஞர்களுக்குப் பகுத்தறிவு, தொண்டு மனப்பான்மை மற்றும் பிற மதச்சார்பற்ற மதிப்புகள் குறித்து போதிப்பதன் மூலம், அவர்கள் பிற்காலத்தில் நாட்டின் முக்கியமான அரசியல் பொறுப்புகளில் அமர்கையில் எதிர்காலத்தையே மாற்றும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள் என்று நம்பினார். அதற்காக அவர் தோற்றுவித்த ரகசிய இயக்கம்தான் இந்த ‘இல்லுமினாட்டி.’

இயக்கம் ஆரம்பித்த காலகட்டத்தில் ஆறு அல்லது ஒன்பது பேர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். மிகப்பெரும் இயக்கமாக அது வளர்ந்தபோதும் அதில் 700 முதல் 2,500 உறுப்பினர்கள் வரை மட்டுமே இருந்தனர். அது, இல்லுமினாட்டி போல பல ரகசிய இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் இருந்த காலம். அதனால், இல்லுமினாட்டி இயக்கத்தை வலுப்படுத்த, அவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் பலர் மற்ற இயக்கங்களில் ஊடுருவினர். முக்கியமாக ‘ஃப்ரீமேசன்ஸ்’ (Freemasons) என்னும் இன்னொரு ரகசிய அமைப்பில் பெருமளவில் நுழைந்தனர். அங்கிருந்த நபர்களை மூளைச்சலவை செய்து இல்லுமினாட்டியில் சேர்த்துக்கொண்டனர்.

பலருக்கும் இல்லுமினாட்டியின் மீது ஆர்வம் ஏற்பட முக்கியக் காரணம், அவர்கள் வித்தியாசமான நடைமுறைகளைக் கடைப்பிடித்ததுதான். தாங்கள் இல்லுமினாட்டி இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்பதை வெளியே சொல்ல அவர்கள் என்றுமே விரும்பியதில்லை. சங்கேத மொழிகள், ஆந்தை, ஒற்றைக் கண், முக்கோண வடிவங்கள், பிரமிடுகள், எங்கும் பரவும் ஒளி போன்ற சின்னங்கள், நோவைஸ் (புதியவன்), மினர்வல், இல்லுமினேடட் மினர்வல் (இல்லுமினாட்டி - ஞானம் பெற்றவர்) போன்ற சிக்கலான பதவி அடுக்குகள் என மிகவும் விந்தையான முறையில் இயக்கத்தை நடத்தினர்.

முக்கியமாக, அவர்கள் ஆரம்ப காலத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களை நம்பியதே இல்லை என்கிறார் கிரிஸ் ஹோடப். அவர்களின் நடைமுறைகள் விந்தை யானவையாகவே இருந்தாலும் பகுத்தறிவையும் சுயமரியாதையையும் விட்டுக்கொடுக்காமல் இருந்தனர். எப்போதும் தங்களை மத எதிர்ப்பாளர்களாகவும், அரசாங்கத்தை எதிர்ப்பவர்களாகவும் மட்டுமே அடையாளப்படுத்திக்கொண்டார்கள்.

“இவங்க இல்லுமினாட்டியா, இல்லையா?”

இன்று பலரும் நினைப்பதுபோல இவர்கள் அரசாங்கத்தை ஆட்டுவிக்கும் இடத்தையெல்லாம் நெருங்கியதே இல்லை என்பதுதான் வரலாறு. சொல்லப்போனால் இவர்கள் ஊடுருவிய ஃப்ரீமேசன்ஸ் அமைப்பு இவர்களைவிடச் சக்தி வாய்ந்த இயக்கம்.

இன்று கமல், ஒபாமா, ட்ரம்ப் எனப் பலர் பட்டியல் போட்டு இல்லுமினாட்டி முத்திரை குத்தப்பட்டாலும், இல்லுமினாட்டிகள் இந்த 21-ம் நூற்றாண்டில் உண்மையிலேயே இருக்கிறார்கள் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் நம்மிடம் இல்லை.

1785-ம் ஆண்டு பவேரியாவின் பிரபுவாக நியமிக்கப்பட்ட கார்ல் தியோடோர் (Karl Theodor) தன் முதல் வேலையாக, தேனீக்கூட்டம் போல ஆங்காங்கே இயங்கிய ரகசிய இயக்கங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். புதிதாக ரகசிய இயக்கங்களில் சேர விரும்பியவர்களுக்கும் கொடூர தண்டனைகளைத் தயங்காமல் அளித்தார். பல இயக்கங்களின் ரகசியத் தகவல்களைப் பகிரங்கமாகவும் வெளியிட்டார். இதில்தான் நாம் மேலே பார்த்த, இல்லுமினாட்டி இயக்கம் குறித்த தகவல்களும் வெளியே வந்தன. பின்னாளில் அரசின் ஒடுக்குமுறையால் இல்லுமினாட்டிகளும் அழிந்துபோயினர்.

“இவங்க இல்லுமினாட்டியா, இல்லையா?”இல்லுமினாட்டிகள் அழிந்துவிட்டாலும், அவர்களைப் பற்றிய கதைகள் காலங்கடந்தும் வாழத் தொடங்கின. அதற்கு மிக முக்கியக் காரணம் இலக்கியமும் சதிக்கோட்பாட்டாளர்களும்தாம். 18-ம் நூற்றாண்டின் இறுதியில் இல்லுமினாட்டி என்ற இயக்கம் செயல்பாட்டிலேயே இல்லாதபோதும், ஃப்ரீமேசன்ஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர், இன்னமும் தங்கள் இயக்கத்தினுள் இல்லுமினாட்டிகள் நிறையவே இருப்பதாக அஞ்சினர்.

இல்லுமினாட்டிகளை மையப்படுத்தி அவ்வப்போது புத்தகங்களும் வெளிவந்துகொண்டே இருந்தன. அதில் முக்கியமான படைப்பு 1970-களில் ராபர்ட் ஷியா மற்றும் ராபர்ட் வில்சன் எழுதிய ‘தி இல்லுமினேடஸ் ட்ரைலாஜி’ என்று மூன்று பாகங்கள் கொண்ட நாவல். இன்று இல்லுமினாட்டிகள் குறித்துப் பக்கம் பக்கமாகப் பேசும் சதிக்கோட்பாட்டாளர்களுக்கு எல்லாம் இந்தப் புத்தகம்தான் அடிநாதம். 18 வருடங்களுக்கு முன் சர்ச்சை எழுத்தாளர் டான் பிரவுன் எழுதிய ‘ஏஞ்சல்ஸ் அண்டு டீமன்ஸ்’ என்ற நாவலில், இல்லுமினாட்டிகள் சாத்தான் வழிபாடு நடத்தியவர்கள், ஃப்ரீ மேசன்ஸில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் என்றெல்லாம் இல்லுமினாட்டிகளுக்குச் சற்றும் தொடர்பில்லாத விஷயங்களை உள்ளே சேர்த்தார். அதன்பிறகு இன்றுவரை இல்லுமினாட்டி என்ற சொல்லை யாராலும் அழிக்க முடியவில்லை.

எது எப்படியோ, நீங்களோ நானோ அல்லது அந்த மூன்றாவது தெருவில் வேலையில்லாமல் அலைந்துகொண்டிருக்கும் இளைஞனோ இல்லுமினாட்டி என்று இங்கேயுள்ள எந்தச் சதிக்கோட்பாட்டாளனும் சொல்ல மாட்டான். ‘இல்லுமினாட்டி’ என்று குற்றம் சாட்டப்படுபவர்கள் எல்லாம் உயர்ந்த பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளும் பிரபலங்களும்தாம். இப்படி சர்ச்சையைக் கிளப்புவதன் மூலம், இந்த சதிக்கோட்பாளர்களுக்குப் புகழ் வெளிச்சம் கிடைக்கிறது என்பதுதான் இதற்குக் காரணம். மற்றபடி இது ஒரு ‘சிரிச்சாப் போச்சு’ ரவுண்டு.

ர.சீனிவாசன்

“இவங்க இல்லுமினாட்டியா, இல்லையா?”

இதுவரை இல்லுமினாட்டிகள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள்

டோனா, கேட்டி பெர்ரி, ஏஞ்சலினா ஜோலி, , பிரிட்னி ஸ்பியர்ஸ், ரிஹானா போன்ற பெண் இசைக் கலைஞர்கள், ஒபாமா, ஜார்ஜ் புஷ், ஹிட்லர், மைக்கேல் ஜாக்சன், பில் கேட்ஸ், சர்ச்சில் எனப் பெரும்பாலும் கலை மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்தவர்கள்தாம் இல்லுமினாட்டிகள் பட்டியலில் இணைக்கப்பட்டனர். தமிழகத்தில் கமல், ரஜினியைக்கூட ‘இல்லுமினாட்டிகள்’ என்று சொல்பவர்களும் உண்டு.

இந்திய இல்லுமினாட்டிகள்

க்ரவர்த்தி அசோகர், மௌரியர்களின் சாம்ராஜ்யத்தை இந்தியா முழுவதும் விரிவடையச் செய்யும் முனைப்புடன் செயல்பட்டார். ஆனால், கலிங்கத்துப் போர் கொடுத்த குற்ற உணர்ச்சியில், இனி அகிம்சை வழியில் தான் பயணிக்கப்போவதாக அறிவித்து, புத்த மதத்தைத் தழுவினார். இனி தன் சாம்ராஜ்ஜியத்தில் எங்குமே போர் நிகழக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டார். அதனால் போர் ஆயுதங்கள் செய்வதற்கான அறிவு தீயவர்களுக்குக் கிடைக்கக்கூடாது என்று  அறிவைச் சேகரித்தல், தீயவர்களிடம் அது கிடைத்துவிடாமல் பாதுகாத்தல், நன்மைக்கு மட்டுமே அதைப் பயன்படுத்துதல் போன்ற விஷயங்களை முனைப்புடன் செய்ய ஒன்பது பேர் கொண்ட ஒரு ரகசியக் குழுவை அமைத்தார். அவர்கள் ‘அறியப்படாத ஒன்பது மனிதர்கள்’ (The Nine Unknown Men) என்றும் அழைக்கப்பட்டார்கள். ஒன்பது பேரும் தாங்கள் சேகரித்த தகவல்களை ஒவ்வொரு புத்தகமாக மாற்றிப் பாதுகாத்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

“இவங்க இல்லுமினாட்டியா, இல்லையா?”

1923-ம் ஆண்டு டால்போட் முண்டி (Talbot Mundy) என்பவர் எழுதிய புத்தகம் இந்த ஒன்பது பேர் பற்றிய ரகசியத்தை உலகிற்குத் தெரியப்படுத்தியது. இவர் பிரிட்டிஷ் ஆண்ட இந்தியாவில் 25 வருடங்கள் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். இந்தப் புத்தகத்தில் அந்த ஒன்பது பேர் வைத்திருந்த புத்தகங்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன. பிரசாரத்தின் விளைவுகள் மற்றும் உளவியல் ரீதியான போர், உடலியல், ‘நரம்பு உந்து விசை’ என்னும் தற்காப்புக் கலை (ஜூடோவின் முன்னோடி), நுண்ணுயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம், ரசவாதம் மற்றும் உலோகப் பரிமாற்றம், வேற்றுக்கிரக வாசிகள் குறித்த தகவல்கள், வானியல் சாஸ்திரம், ஒளி அறிவியல், சமூகவியல் போன்ற விஷயங்களைப் பற்றி இந்தப் புத்தகங்கள் பேசுகின்றன. இந்த ஒன்பது பேர் கொண்ட இயக்கம் தற்போதும் செயல்பட்டுக்கொண்டிருப்பதாகவும், பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த போப் சில்வெஸ்டர் II முதல், இந்தியாவின் விக்ரம் சாராபாய் வரை இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தாம் என்கிறார்கள் சதிக்கோட்பாட்டாளர்கள்.

“இவங்க இல்லுமினாட்டியா, இல்லையா?”

அசோகர் ஒன்பது பேரைப் பணியில் அமர்த்தியது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால் அது காலங்காலமாகத் தொடர்ந்து ஓர் இயக்கமாக இயங்குகிறது என்பதெல்லாம், வேலைவெட்டி இல்லாதவர்கள் கிளப்பிவிட்ட வதந்திதான்!