
வாழ்க்கை
நம் கற்பனைக்கே எட்டாத ஒரு தொழில் அது. பணம் கொடுத்தாலும் பக்கத்தில் வர மறுக்கிற அளவுக்கு அச்சமும் அவலமும் நிறைந்த அந்தத் தொழிலில் கால் பதித்து கவனம் ஈர்த்திருக்கிறார் மதுராந்தகம் அருகேயுள்ள மலைப்பாளையத்தைச் சேர்ந்த அமுதா.

“15 வயசுல இருந்தே விவசாயக் கூலி, கட்டட வேலைனு எல்லாம் செய்வேன். என் 25-வது வயசுல, டைட்டஸுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. இரு வீட்டினரின் சம்மதத்தோடு நடந்த காதல் கல்யாணம் அது. அவர் டிரைவர். ஒரு பெண் குழந்தை பிறந்தது. திருமணமான சில வருடங்களிலேயே ஒரு விபத்துல அவர் கையில் பலத்த காயம்... அதனால வேலைக்குப் போக முடியாம வீட்டிலேயே முடங்கிட்டார். நான் கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். ஆனா, வருமானம் போதலை.
சென்னையில எங்க உறவினர் ஒருத்தர் ஆம்புலன்ஸ் தொழில் செய்றதைப் பார்த்திருக்கேன். இறந்தவர்களின் உடல்களை ஏற்றிக்கிட்டு போற அந்த வண்டியைப் பார்த்தப்போ, ‘நாம ஏன் ஆம்புலன்ஸ் வாங்கக் கூடாது?’னு தோணுச்சு. வீட்டுக்காரர்கிட்ட கேட்டேன். ‘ராத்திரி, பகல்னு எப்பவும் அவசரத்துக்குக் கூப்பிட்டுட்டே இருப்பாங்க... நமக்கு இது வேண்டாம்’னு சொன்னார். அப்புறம் என் மன உறுதியைப் பார்த்துட்டு சரின்னு சொல்லிட்டார்.

17 வருஷங்களுக்கு முன்னால, கையில் இருந்த 20 சவரன் நகைகளை அடகு வைத்தும், வங்கியில் கடன் வாங்கியும் ஓர் ஆம்புலன்ஸ் வண்டி வாங்கினோம். அதே ஆண்டில் வங்கிகளில் கடன் பெற்று மேலும் இரண்டு ஆம்புலன்ஸ்கள் வாங்கினோம். அப்போ 108 ஆம்புலன்ஸ் கிடையாது. விபத்து, பிரசவம், நெஞ்சுவலினு எந்நேரமும் தகவல் வரும். ஆனாலும், அலுப்பு பார்க்காம, ராத்திரி பகல் பார்க்காம உழைச்சேன். அதன் பலனா அடுத்த சில வருடங்களிலேயே நான்கு ஆம்புலன்ஸ்கள், மூன்று உடல் எடுக்கும் வண்டிகள் வாங்க முடிஞ்சது” என்கிறவர் அடுத்துக் கூறுவதெல்லாம் அதிர்ச்சிகள்தாம்.
``விபத்துல இறந்தவர்களின் உடலை மார்ச்சுவரிக்குக் கொண்டுவந்து சேர்க்கிறதுக்குள்ள நம்ம உடம்பெல்லாம் ரத்தமாகிடும். இறந்து பல நாள்கள் ஆன உடலை எடுக்கப்போறது, இன்னும் சவாலானது. துர்நாற்றத்தோடு, அழுகிய நிலையில் உள்ள அந்த உடலைத் தொட்டாலே உடல் பாகங்கள் தனித்தனியா வந்துடும். சில உடல்களில் புழுக்கள் நெளியும். அதை ஆம்புலன்ஸ்ல ஏற்றும்போது என் மேலேயும் புழு ஏறிடும். எதையும் பொருட்படுத்தாம, பிணத்தோடு உட்கார்ந்துவந்து, மார்ச்சுவரிக்குக் கொண்டுவந்து சேர்ப்பேன். வேலையை முடிச்சுட்டு பசிக்கு ஒரு காபி குடிக்கலாம்னு நெனச்சாலும் முடியாது. உடம்பு முழுக்க கெட்ட வாடை வீசும். வீட்டுக்கு வந்து குளிச்சாத்தான் சாப்பிட முடியும். ‘நீங்க பிணத்தைத் தூக்கிட்டு வந்தீங்க, அந்த ஆவி உங்க கூடவே வரும்’னு ஊருல சிலபேர் என்கூட நடந்து வரவே பயப்படுவாங்க. ஆனா, நான் இறந்தவங்களைக் கடவுளாகத்தான் பார்க்கறேன்’’ என்று சொல்லும் அமுதாவுக்கு, பர்சனல் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் பல.
``வாழ்க்கை நல்லா போய்க்கிட்டிருந் தப்போ, என் கணவர் மதுவுக்கு அடிமை யாகிட்டார். அவருடைய சிறுநீரகங்கள் பாதிப்படைந்து, தொடர் சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது. பல லட்சங்களைச் செலவு செய்தும், சிகிச்சை பலன் இல்லாம எட்டு வருஷங்களுக்கு முன் இறந்துட்டார். அப்ப என் மகள் தேன்மொழிக்கு 13 வயசு. மருத்துவச் செலவுகளுக்காகக் கையிலயிருந்த காசெல்லாம் போயிடுச்சு. மேற்கொண்டு கடனும் வாங்கினோம். அது வட்டியோடு சேர்ந்து கழுத்தை நெரிக்க, எல்லா வண்டிகளையும் வித்துட்டு கடனை அடைச்சேன். ஆனாலும், நான் சோர்ந்து போகலை. மிச்சம் இருந்த பணத்துல ஓர் ஆம்னி வண்டி வாங்கி, மறுபடியும் ஆரம்பித்திலிருந்து தொழிலைத் தொடங்கினேன். இரண்டு ஆட்டோக்கள், சவ ஊர்வலம் கொண்டு போக இரண்டு வாகனங்கள், உடலை எடுப்பதற்கு ஓர் ஆம்னி வண்டினு இப்போ அஞ்சு வண்டிகளுக்கு நான் ஓனர். என் மகள் தொழில்ல எனக்குப் பெரும் உதவியா இருக்கிறா. பிபிஏ முடிச்சுட்டு எம்பிஏ படிக்கப் போறா. பழைய வீட்டை இடிச்சுட்டுப் புது வீடு கட்டிட்டிருக்கேன்.
நம்மகிட்ட இன்னிக்கு இருக்குற ஒண்ணு நாளைக்கு இல்லாம போகலாம்; இங்க எதுவும் நிரந்தரமில்லே. ஆனா, உழைப்பு இருந்தா எந்த ஏமாற்றத்திலிருந்தும், இழப்பிலிருந்தும் மீண்டு வரலாம். அவசியம் நம்ம வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு வந்துடுங்க!” - நம்பிக்கை வார்த்தைகளால் நம்மை வழியனுப்பி வைத்தார் அமுதா.
பா.ஜெயவேல் - படங்கள் : தா.அபினேஷ்