
கலை
“மறுசுழற்சி முறையில் காகிதத்தைப் பயன் படுத்தி, சுற்றுச்சூழல் பாது காப்புக்குப் பங்களிப்பதும், அடுத்த தலைமுறைக்குக் காகிதக் கலையைக் கொண்டுசேர்ப்பதுமே என் லட்சியம்’’ என்கிறார் கேரள மாநிலம், கொச்சியில் வசிக்கும் விஜிதா ரித்தீஷ். குப்பையாக எறியும் காகிதங்களிலிருந்து பூக்கள் முதல் பொம்மைகள் வரை தயாரிப்பவர்; கின்னஸ், லிம்கா உலக சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்தவர்.

“சிறு வயதிலிருந்தே கைவேலைப்பாடு களில் ஆர்வமாயிருப்பேன். குறிப்பாக, காகிதப்பூக்கள் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.
திருமண அழைப்பிதழ், பழைய புத்தகம், உபயோகப்படுத்த முடியாத காகிதம், நோட்டீஸ் என எந்தக் காகிதத்தையும் பயன்படுத்துவேன். தேர்தல் நேரங் களில் அரசியல் கட்சிகளால் சாலையெங்கும் சிதறவிடப்படும் நோட்டீஸ்களைச் சேகரித்து
வைத்து, அவற்றுக்குக் கலைவடிவம் கொடுப்பேன். ஒருகட்டத்தில், நாள் ஒன்றுக்கு 10-15 பொம்மைகள் தயாரிக்க முடிந்தது. பள்ளி, கல்லூரி அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றேன். உளவியலில் முதுகலைப் பட்டம் மற்றும் ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் முடித்தேன். திருமணத்துக்குப் பின், புகுந்த வீட்டினரும் கலை ஆர்வம்மிக்கவர்களாக அமைந்தது என் அதிர்ஷ்டம். அவர்கள் கொடுத்த ஆதரவில் இதை முழு நேரத் தொழிலாகக் கையிலெடுத்தேன்'' என்கிற
விஜிதா, ஒரு மாத உழைப்பில், 2016-ம் ஆண்டு 50 அடி நீளத்தில் ஹேண்ட்மேடு பேப்பர் நெக்லஸ் தயாரித்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார். க்வில்லிங் முறையைப் பயன்படுத்தி 1,350 பொம்மைகளைத் தயாரித்தார். அதுதான் 2017-ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத் தில் இவரை இடம்பெற வைத்தது.

இப்போது, முகநூல் மூலமாகப் பல நாடுகளில் இருந்தும் விஜிதாவின் தயாரிப்புகளை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். அதோடு பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறார். கைவினைப் பொருள்கள் மேம்பாட்டு வாரியத்தின் விற்பனை கண்காட்சிகளிலும் இவரின் தயாரிப்புகள் இடம்பெறுகின்றன.
``காகிதக் கலையை வீட்டிலிருந்தே பழக வழிகாட்டும் வகையில் புத்தகம் ஒன்றை வெளியிடும் பணியில் இப்போது மும்முரமாக இருக்கிறேன். அடுத்து, கலைநயமிக்க காகிதத் தட்டுகள் தயாரிப்பில் ஈடுபட இருக்கிறேன். காகிதப்பூக்களில் ஆரம்பித்த பயணம் இன்று கின்னஸ்வரை என்னை அழைத்துவந்திருக்கிறது. பிடித்துச் செய்யும் செயல்களின் பலன் இப்படித்தான் இருக்கும்!” என்று பூவாக மலர்ந்து சிரிக்கிறார் விஜிதா.
ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்