
நமக்குள்ளே...

21-வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஒவ்வொரு பெண்ணும், அன்று முதல் `அரசி’ என்ற பெருமையோடு குடும்பங்களாலும் நண்பர்களாலும் கொண்டாடப்படுகிறாள் - நெதர்லாந்து நாட்டில். 21-வது வயதை, `கிரௌன் இயர்’ என்று உற்சாகமாக அழைக்கிறார்கள் அந்நாட்டில்.
ஆப்பிரிக்க நாடுகளில் இதே 21-வது வயது, `கீ இயர்’ என்று கொண்டாடப்படுகிறது. தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்படும் சாவியை மகள்களுக்குப் பரிசளிக்கின்றனர் பெற்றோர். அன்று முதல், `பெரியவளாக’க் கருதப்படும் அந்தப் பெண், தன் எதிர்காலத்தைத் தானே திறக்கப் போகிறாள் என்பதன் குறியீடாக அளிக்கப்படுகிறது இந்தச் சாவி.
உலகெங்கும் இருபத்தொன்றாவது பிறந்தநாளுக்கு இப்படி பற்பல பெருமைகள் சேர்க்கப்படுகின்றன. கூடுதல் குஷியோடு சிறப்புக் கொண்டாட்டங்களும் களைகட்டுகின்றன.

உங்கள் அவள் விகடனுக்கு இது, `கிரௌன் இயர்’! 21-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் `அவளுக்கு’ மகுடம்சூட்டி என்றென்றும் அரசியாகக் கொண்டாடப்போவது பெற்றோரும் சுற்றமுமாகிய நீங்கள்தான் வாசகர்களே! பெற்றோர்களாக நின்று எங்கள் பாதையை நீங்களே தீர்மானிக்கிறீர்கள்; சுற்றமாகச் சூழ்ந்து எப்போதும் எங்களுடன் துணை நிற்கிறீர்கள்!
பரஸ்பரம் ஒருவரையொருவர் வழிநடத்திச் செல்லும் பணியும் பெரும் பொறுப்பும் நமக்கு இருக்கின்றன. நீங்கள் உயர உயர, நாங்கள் உயர்கிறோம். நாங்கள் உயர உயர, நீங்கள் உயர்கிறீர்கள். நாம் உயர உயர, சமூகம் உயர்கிறது!
21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘அவள் விகடன்’, உங்கள் அனைவரோடும் சேர்ந்து வெற்றிச் சுடரொளியோடு பயணிக்கிறது. நாங்கள் செய்யத் தவறியவற்றை எங்களுக்குச் சுட்டிக்காட்டுங்கள், பாடம் கற்கிறோம். எங்களின் பயனுள்ள பங்களிப்புகளை மனம்திறந்து பாராட்டுங்கள், உற்சாகத்தையும் ஊக்கத்தையும் நெஞ்சில் ஏற்றிக்கொள்கிறோம்.
வழக்கம்போலவே, 21-ம் ஆண்டின் சிறப்பிதழ், பற்பல மாற்றங்களுடனும் புதுப்பொலிவுடனும் உங்கள் கைகளில் தவழ்கிறது. முடிசூட்டிக்கொண்ட அரசிகளாக நாம் சேர்ந்தே வலம்வருவோம். மகிழ்ச்சி என்ற புதையல் அடங்கியிருக்கும் அறைக் கதவின் சாவி, நம் கைகளில் கிடைத்திருக்கிறது. கதவு திறப்போம்... கூடி நடப்போம்... மகிழ்ச்சிப் புதையல் நமதே!
உரிமையுடன்,

ஆசிரியர்