ஹெலிகாப்டர் விபத்தில் மெக்ஸிகோ நாட்டின் மாகாண கவர்னர் ஒருவர் பலியாகியுள்ளார். பதவியேற்ற 10 நாள்களில், அவருக்கு இந்தத் துயரச் சம்பவம் நேர்ந்துள்ளது.
மெக்ஸிகோ நாட்டில் பியூபாலா மாகாண கவர்னராக இருந்தவர் மார்த்தா எரிக்கா அலோன்சோ. மெக்ஸிகோ பழமைவாத தேசியச் செயல் கட்சியின் முக்கியத் தலைவரான இவர், கடந்த 14-ம் தேதிதான் பியூபாலா மாகாணத்தின் கவர்னராகப் பதவியேற்றார். தொடர்ந்து, நேற்று ஓர் ஆய்வுக்காக கணவர் ரபேல் மொரினோவுடன் ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், அலோன்சோவும் அவரது கணவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேநேரம், ஹெலிகாப்டரின் பைலட் உடல்நிலை குறித்தும் விபத்துக்கான காரணம் குறித்தும் முழுத் தகவல் வெளியாகவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக, மெக்ஸிகோ பழைமைவாத தேசியச் செயல் கட்சியின் முக்கியத் தலைவர்கள், விமான விபத்துகளில் சிக்கி உயிரிழந்துவருகின்றனர். இதேபோல, 2008 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில், இதே கட்சியின் இரண்டு அமைச்சர்கள், விமான விபத்துகளில் பலியான சோக சம்பவமும் நடந்தது. இந்த வரிசையில், பதவியேற்ற 10 நாள்களுக்குள்ளாக அலோன்சோ இறந்திருப்பது அக்கட்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவுக்கு மெக்ஸிகோ அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், அலோன்சோவின் உயிரிழப்பு பியூபாலா மாகாண மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அலோன்சோ மறைவுக்கு, அவர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.