தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

லக்கி - ஆலிஸ் செபோல்ட்

லக்கி - ஆலிஸ் செபோல்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
லக்கி - ஆலிஸ் செபோல்ட்

எதிர்க்குரல்

ன் உதடுகள் கிழிந்திருந்தன. பின்னாலிருந்து அவன் என்னை இறுக்கிப்பிடித்து என் வாயைப் பொத்தியபோது என் உதடுகளை நானே கடித்துக்கொண்டுவிட்டேன். ‘கத்தினால் கொன்றுவிடுவேன்!’ என்றான் அவன். என்னிடம் சிறு சலனமும் இல்லை. ‘நான் சொல்வது புரிகிறதா? கத்தினால் நீ இறந்துபோவாய்!’ - நான் தலையசைத்தேன். என் கைகள் என்னோடு சேர்த்து ஒட்டிக்கொண்டதைப் போல இருந்தன. அவனுடைய வலதுகரம் என்னைச் சுற்றி வளைத்திருந்தது. இடதுகை என் வாயை அழுத்திப்பிடித்திருந்தது.  பிறகு, அவன் தன் கையை எடுத்தான். சட்டென்று கத்தினேன். விரைவாக அவன் என் வாயை மீண்டும் பொத்தினான். என் கால்களை எட்டி உதைத்தான். கீழே விழுந்தேன். ‘உன்னைக் கொல்வதுதான் சரி.’

1981 மே 8... நியூயார்க். விடியற்காலை நேரம். கல்லூரி வளாகத்திலிருந்து தனது வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தார் 17 வயது ஆலிஸ் செபோல்ட். ஒரு பூங்காவைக் கடந்து அவர் சென்று கொண்டிருந்தபோது இடைமறிக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். முதலில் அவன் ஆலிஸை அடித்திருக்கிறான். தன்னிடம் இருந்த சிறு கத்தியால் அவள் உடலைக் கீறியிருக்கிறான். ‘அவனைப் பிடித்துத் தள்ளினேன். கடித்தேன். ஓடத் தொடங்கினேன். அவனோ, எல்லா பலமும் கொண்ட ஓர் அரக்கனைப் போல ஓடிவந்து என்னுடைய நீண்ட கூந்தலைப் பற்றினான். நான் அலற அலற, தலைமுடியைப் பிடித்து இழுத்து என்னைத் தரையில் மண்டியிட வைத்தான். நான் அவனிடம் மன்றாடத் தொடங்கினேன். நிலத்தில் என் முகத்தைப் புதைத்துத் தரையோடு தரையாக என்னை வைத்து அழுத்தினான். என்மீது ஏறி அமர்ந்துகொண்டான். சபித்தான். கல்லை எடுத்து தலையில் அடித்தான். என் உடலைத் திருப்பிப்போட்டு என் மார்பின்மீது உட்கார்ந் தான். இரு கைகளாலும் என் கழுத்தைப் பிடித்து இறுக்க ஆரம்பித்தான். என் தலைசுற்றியது. மயக்கம் வருவதுபோல இருந்தது. என் உடலை அவனிடம் முழுமையாக ஒப்படைத்தேன்.’

எல்லாம் முடிந்த பிறகு ஆலிஸ் எழுந்துகொண்டார். `நான் இப்போது போக லாமா?' அவன் குழைந்தபடி, `ஓ' என்றான். `எனக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டுப் போயேன்' என்று இளித்தான். நடுக்கம் குறையாமல் நின்றுகொண்டிருந்தேன். அவன் என்னை நெருங்கி என்னுடைய ஜீன்ஸில் கையைவிட்டு நான் வைத்திருந்த எட்டு டாலரை உருவிக்கொண்டான்.  `என் புத்தகங்களை எடுத்துக்கொள்ளட்டுமா?' என்றேன். அவனே புத்தகங்களை எடுத்து என் கையில் வைத்தான். நான் எதற்கு அவனிடம் ஒவ்வொன்றுக்கும் அனுமதி கேட்டுக்கொண்டு நிற்கிறேன்? எதற்காக அவனுடைய உத்தரவு எனக்குத் தேவைப்படுகிறது?  என் உடலை மட்டுமல்ல; என்னையுமேகூட முழுமையாக அவன் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுவிட்டான் என்று நான் நம்புகிறேனா? பயமா?

லக்கி - ஆலிஸ் செபோல்ட்

நடக்கத் தொடங்கினேன். `எந்தப் பக்கமாகப் போகிறாய்?' என்றான். நான் கை காட்டினேன். `சரி போ' என்றான். `டேக் கேர்!'

ஆலிஸின் புகாரை எழுதி வாங்கிக் கொண்ட காவல் நிலைய அதிகாரி திகைத்துப் போனார். `நீ சொல்தை என்னால் நம்பவே முடியவில்லை. நீ குறிப்பிட்ட அதே பூங்காவில் மிகச் சமீபத்தில்தான் ஒரு பெண்ணின் உடலைக் கண்டெடுத்தோம். உன்னைப் போலவே அந்தப் பெண்ணும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தாள். ஆனால், கோரம்... அவளுடைய உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்தது. நல்லவேளையாக நீ பிழைத்துவிட்டாய். நீ நிஜமாகவே லக்கி!' 

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆலிஸ் தன் வாழ்க்கை கதையை எழுதி முடித்தபோது அதற்கு அவர் வைத்த பெயர் அதுதான். `லக்கி'.

ஆலிஸ் முதலில் ஒரு நாவல்தான் எழுத ஆரம்பித்தார். ஆனால், வாக்கியங்கள் தடுமாறின. கற்பனை ஒரு புதைக்குழிக்குள் சிக்கிக்கொண்டதுபோல இருந்தது. உன்னால் இதை எழுத முடியாது; நீ எழுதவேண்டிய கதை வேறு என்று உள்ளிருந்து ஒரு குரல் ஒலிக்க ஆரம்பித்தது.  ஆலிஸ், நீ சொல்லவேண்டியது உன் கதையை. ஒரு பெண்ணின் உடல் எப்படி அத்துமீறப்படுகிறது என்பதை நீ எழுத வேண்டும். நீ எத்தனை முயற்சி செய்தாலும் அந்த அனுபவம் உன்னைவிட்டுப் பிரியப்போவதில்லை. ஓர் இரும்பு குண்டு போல உன் மூளைக்குள் அது அசைவற்று உறைந்துபோயிருக்கிறது. அதை வெளியில் எடுத்து வீசும்வரை அது உன்னை உறுத்திக்கொண்டே இருக்கும். வலி கொடுத்துக்கொண்டே இருக்கும். ரணத்தை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கும். முதலில் உன் கதையை எழுது ஆலிஸ்.

ஆலிஸ் தயங்கியதற்கு ஒரு காரணம் இருந்தது. அவர் மீண்டும் அதை நினைவு படுத்திப் பார்க்க விரும்பவில்லை. ஒரு கொடுங்கனவாக நினைத்து அதை அவர் மறக்கவே விரும்பினார். போதை மருந்துகள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். என் நினைவுகளோடு சேர்த்து என் உடலும் அழிந்தால்தான் என்ன என்று தோன்றியது. `என்னுடைய அம்மா அப்பா தொடங்கி நண்பர்கள் வரை எல்லோரும் ஏன் என்னை விநோதமாகப் பார்க்க வேண்டும்? ஏன் என்னைத் தவறிழைத்தவள் போல் எல்லோரும் கருத வேண்டும்? அந்த ஒரு சம்பவம்தான் என் அடையாளமா? ஆலிஸ் செபோல்ட் என்றால் அந்த ஒரு நாளின் விடியற்காலை பொழுதுதான் உங்கள் நினைவுக்கு வருமா? அந்த நினைவோடுதான் என் கண்களைப் பார்ப்பீர்களா? ஆம் என்றால் நான் இனி மேல் வாழ்ந்து என்ன பயன்?'

ஆலிஸ் வெறுப்பின் உச்சியில் இருந்தபோது, அவன் மீண்டும் ஆலிஸின் வாழ்வில் குறுக்கிட்டான். இது நடந்தது சம்பவம் நடந்த சில மாதங்கள் கழித்து. வீதியில் இயல்பாக நடந்து சென்றுகொண்டிருந்த அவனைக் கண்டதும் உடனடியாக காவல் துறைக்குத் தகவல் அளித்தார் ஆலிஸ். அவர்கள் விரைந்து வந்து அவனைக் கைதும் செய்துவிட்டார்கள். ஆனால், குற்றவாளியை அடையாளம் காட்ட ஆலிஸ் அழைக்கப்பட்டபோது நடுக்கத்தில் தடுமாறிவிட்டார். கிட்டத்தட்ட அவனைப்போலவே தோற்றமளித்த இன்னொருவனைக் கைகாட்டி விட்டார். பிறகு சுதாரித்து, சரியான நபரை அடையாளம் காட்டிவிட்டார் என்றாலும், ஆலிஸின் அந்தக் கண நேர தடுமாற்றத்தை வழக்கறிஞர்கள் பயன்படுத்திக்கொள்ள முயன்றனர். `நீ  அன்று சுயநினைவோடு இருந்தாயா, இல்லையா? விடியும் நேரத்தில் ஏன் கல்லூரி வளாகத்திலிருந்து கிளம்பினாய்? ஓ, பார்ட்டியா? சரி, என்ன மாதிரியான பார்ட்டி அது?' நிதானம் இழக்காமல் குறுக்கு விசாரணைகளை எதிர்கொண்டார் ஆலிஸ். தீர்ப்பு சாதகமாகவே வந்தது.  குற்றம் உறுதி செய்யப்பட்டு, அவன் சிறைக்கு அனுப்பப்பட்டான். ‘பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பல பெண்களை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால், உன்னைப் போன்ற திடமான, துணிச்சலான பெண்ணை இதுவரை நான் சந்தித்ததில்லை’ என்று வழக்கறிஞர்கள் ஆலிஸை மனம்திறந்து பாராட்டினார்கள்.

ஆலிஸ் வெடித்து அழ ஆரம்பித்தார். எதுவும் மாறிவிடவில்லை. எதுவும் முடிந்துவிடவில்லை. எதையும் நான் மறக்கப்போவதும் இல்லை. புல்தரையில் சிந்திய ரத்தத் துளிகளையும் எனக்கு மிக அருகில் உடைந்து கிடந்த பீர் பாட்டில் துண்டுகளையும் என்னால் மறக்க முடியாது. என் உடலும் உள்ளமும் அனுபவித்த வதைகள் மரணம்வரை என்னுடன் இருக்கும். ஆனால், மரணம் வரை வாழ்வை வாழ்ந்து தீர்த்தாகவேண்டியிருக்கிறது. என்ன செய்வது? நிறைய படிக்க வேண்டும் என்று விரும்பினேன். நாவல், கவிதை என்று நிறைய எழுத வேண்டும் என்று கனவுகள் கண்டேன். அந்தக் கனவுகள் எல்லாம் எங்கே போய்விட்டன? போய்விட்டனவா அல்லது நானே அவற்றைக் கொன்றுவிட்டேனா?17 வயது ‘ரேப் சர்வைவர்’ என்றுதான் காலம் என்னை நினைவில் வைத்திருக்குமா? நீ அதிர்ஷ்டக்காரி என்று சொன்ன காவல் துறை அதிகாரியின் முகம் சட்டென்று நினைவுக்கு வந்தது. ஆலிஸ் ஒரு முடிவுக்கு வந்தார். போதை மருந்துகளைத்  தூக்கி எறிந்தார். எழுத ஆரம்பித்தார்.

பதினெட்டு ஆண்டுகள் கழித்து `லக்கி' வெளிவந்தது. தனக்கு நேர்ந்த அனைத்தையும் ஒளிவுமறைவின்றி ஆலிஸ் அதில் விவரித்திருந்தார். `பாலியல் பலாத்காரம் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். தவறு. என் புத்தகத்தைப் படித்துப்பாருங்கள்' என்கிறார் ஆலிஸ். வாசித்தவர்கள் அனைவரையும் ஒரு கொடுங்கனவு போல் அந்தப் புத்தகம் பற்றிக்கொண்டது. இன்றுவரை அதன் தாக்கம் குறைந்தபாடில்லை.  முன்னதாக ஆலிஸ் எழுதத் தொடங்கி பாதியில் கைவிட்ட நாவல் (தி லவ்லி போன்ஸ்) 2002-ல் வெளிவந்து ஆரவாரமான வரவேற்பைப் பெற்றது. எலும்பைத் துளைத்துச்செல்லும் அளவுக்கு பயங்கரமும் வன்முறையும் சோகமும் அதில் போட்டிபோட்டுக்கொண்டு குவிந்துகிடந்தன. தூக்கி வாரிப்போடும் விஷயங்களைக்கூட கவித்துவமான நடையில் எழுதிச்சென்றார் ஆலிஸ். உலகம் முழுக்க அவர் எழுத்து சென்றடைந்தது. விருதுகள் தேடிவந்தன. நீங்கள் என்ன எழுதினாலும் ஏன் அதில் வன்முறை மிகுதியாக இருக்கிறது என்று ஒருமுறை கேட்கப்பட்டபோது ஆலிஸ் சொன்ன பதில் இதுதான். ‘நான் எதைப் பார்க்கிறேனோ, அதைத்தான் எழுதுகிறேன். சரி... எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. வாழ்ந்து தீர்த்தாகவேண்டியிருக்கிறது...'

- மருதன்