அமெரிக்கா- மெக்ஸிகோ எல்லைப் பகுதியில், பாதுகாப்பு காரணத்துக்காக சுவர் எழுப்ப திட்டமிட்டுள்ளார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். `இந்த திட்டத்துக்கு 40,000 கோடி ரூபாய் செலவாகும். அதற்கு செனட் சபை ஒப்புதல் தரவேண்டும்' என வேண்டுகோள் விடுத்திருந்தார். `இந்த வேண்டுகோளை நிறைவேற்றாவிட்டால், அமெரிக்க அரசாங்கம் காலவரையின்றி மூடப்படும் என்றும், எட்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கட்டாய விடுமுறையில் இருக்க வேண்டும் அல்லது ஊதியமில்லாமல் வேலை செய்ய உத்தரவிடப்படும்' எனவும் எச்சரித்திருந்தார்.
இதையடுத்து, கடந்த 22-ம் தேதி நடைபெற்ற செனட் சபை கூட்டத்தில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர், அதிபரின் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டனர். இதனால், அமெரிக்க அரசாங்கம் மூடப்படுவதாக ட்ரம்ப் அறிவித்தார். அமெரிக்க அரசாங்கத்தின் பணிகள் முடங்கி இன்றுடன் மூன்று நாள்கள் ஆன நிலையில், அதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.
அவரது பதிவில், ` ஏழையைப் போல வெள்ளை மாளிகையில் நான் தனிமையில் உள்ளேன். மெக்ஸிகோ எல்லை பாதுகாப்புப் பிரச்னை குறித்து ஜனநாயகக் கட்சியுடன் ஆலோசனை நடத்தக் காத்திருக்கிறேன். பாதுகாப்பு சுவர் தேவை. ஆனால், அதற்கு அதிக செலவாகும் என ஜனநாயகக் கட்சியினர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்காக நான் ஓவல் அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்துவருகிறேன். நாம் ஏற்கெனவே 115 மைல்களுக்கு சுவர் எழுப்பிவிட்டோம். இன்னும் சில இடங்கள் மட்டுமே மீதமிருக்கின்றன. ஜனநாயகக் கட்சியினர், பாதுகாப்புச் சுவரின் செலவீனத்துக்கு ஒப்புதல் அளித்து, அரசாங்கம் மூடப்பட்டுள்ளதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டுவருகிறது. அமெரிக்கா, கனடா, ஃபிரான்ஸ் போன்ற பல நாடுகளில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஒரு வாரத்துக்கு முன்னதாகவே நிகழ்ச்சிகள் களை கட்டத் தொடங்கும். இந்தச் சூழலில், தான் தனியாக இருப்பதாக அதிபர் தெரிவித்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.