
குறுந்தொடர்ஓவியங்கள்: ஸ்யாம்
#metoo
பதினோராவது மாடியின் உச்சியில் நின்றிருந்தாள் நாகபூஷணம். காற்று ஜிவ் ஜிவ் எனச் சுழன்றடித்தது. கட்டியிருந்த சேலை படபடத்தது. கீழே பார்த்தபோது பயம் போய், ஒரு சுவாரஸ்யம் சேர்ந்துகொண்டது. ‘ஒரு நொடியில் எல்லா பாவங்களும் ரத்தக் கூழாகிவிடும். பாவம், சுத்தம், அச்சம், கற்பு எல்லாமும் ரத்தசகதியில் கலந்துவிடும்.’ நாகபூஷணம், ‘குதிச்சுட்டா எல்லாம் சரியாபூடும்’ என மட்டும்தான் நினைத்தாள். கதைக்குத்தான் மேற்படி விவரணை தேவையாக இருக்கிறது.
நேற்று தளம் ஊற்றினார்கள். மேல் பகுதியில் பாத்தி கட்டி நீர் நிரப்பியிருந்தார்கள்.
சூரியன் கிடைமட்டத்துக்கும் கீழே இறங்கிவிட்டதால் நீர் இளம்சூடாக மாறியிருந்தது. மாடியில் யாருமில்லை. எல்லோரும் கீழே இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லோரும் கிளம்பிவிடுவார்கள். அப்போது குதித்தால் யாருக்கும் தெரியாது. செக்யூரிட்டிகள் இருப்பார்கள். அவர்கள் பார்த்துவிட்டுப் போலீஸுக்கும் வீட்டுக்கும் தகவல் சொல்வார்கள். அப்புறம் என்ன நடக்கும்? நாகபூஷணத்தின் அப்பா போதையில் இருந்தால் காலையில்தான் விஷயம் எட்டும்.
சிவகாமி, அழுவாள். ‘நல்லாத்தானே பேசிக்குனு இருந்தா. இப்பிடி பண்ணிபுட்டாளா பாவி’ என்பாள். நீரின் சூடு குறைவதை உணர முடிந்தது. காலை நீரில் அலையவிட்டு, நகத்தில் ஒட்டியிருந்த சிமென்ட் காரையைத் தேய்த்துக் கழுவினாள். ஒரு சினிமாவில் கடலில் குதித்து சாக முடிவெடுத்த பெண் ஒருத்தி, மேக்அப் போட்டுக்கொள்வது நினைவுக்கு வந்தது. ‘அழுக்கா இருந்தா இன்னா இப்போ?’ என உள்ளே ஒரு குரல் ஒலித்தது. இன்னும் ஓரடி முன்னே வைத்தாள். கட்டடத்தின் விளிம்புக்கு இன்னும் சில அடிகள்தாம் இருந்தன. அந்தக் கட்டடம் ஒவ்வொரு மாடியாக வளர்ந்தபோது... செங்கல்லையும் சிமென்ட் கலவையையும் தூக்கிச் சுமந்தபோது அது தனக்காகத்தான் வளர்கிறது என நினைக்கவே இல்லை. எல்லாக் கட்டடமும் கட்டி முடித்தபின் இன்னொருவருக்குச் சொந்தமாகிவிடும். அங்கிருந்து இன்னொரு கட்டடத்துக்குக் கிளம்புவாள். இது..? இவளுக்கான கடைசி கட்டடம்.

12 வயதிலிருந்து சித்தாள் வேலை. அம்மாவின் ரவிக்கையையே பின் குத்தி மாட்டிக்கொண்டு, அம்மா புடவையையே இரண்டாகக் கிழித்து தாவணியாக்கி... முதன்முதலாக சித்தாள் ஆனபோது பூரித்துப்போனாள். அயப்பாக்கத்தில் ஓர் ஆஸ்பத்திரி கட்டுமான வேலை. ஆஸ்பத்திரிகாரர்களுக்கு ஏரியை ஒட்டி இடம் இருந்தது. அங்கேயே கொட்டாய் போட்டுக் கொடுத்திருந்தார்கள். வேலைக்குப் போனதும் மேஸ்திரி, ‘‘இன்னா வயசுடி உனுக்கு?’’ என்றார். அம்மா 18 வயசு எனச் சொல்லச் சொல்லியிருந்தது. சொன்னாள். மேலும் கீழுமாக வயதை ஆராய்ந்தார். ‘‘த பாரு... சின்ன பசங்களை வேலைக்கி வெச்சா என்னை வூட்டுக்கு அனுப்பிடுவாங்கோ...’’
‘‘அய்ய போன ஆடியோட 17 முன்ஜிச்சி... பாத்தா தெர்ல?’’ என்று தைரியமாகச் சொன்னாள் நாகபூஷணத்தின் அம்மா. அனுமதியாக எடுத்துக்கொண்டு இன்னொரு முறை பார்த்தார். ‘`சரி போடி.’’
உண்மையிலேயே 18 வயது ஆகும்போது நாகபூஷணத்தின் அம்மா இல்லை. ஆஸ்துமா என்றார்கள். தூசு இல்லாமல் இருக்க வேண்டும் என்றார்கள். எந்த நேரமும் சிமென்டும் மணலும் பறக்கிற இடத்தில் தூசு மட்டும்தான் இருந்தது. அவளுடைய அப்பாவுக்கு ‘பெரியாளு’ வேலை. தினமும் தூங்குவதற்கு குவாட்டர் அடிப்பார். காலையில் வேலை செய்வதற்கு இன்னொரு குவாட்டர்.
நன்றாக இருட்டிவிட்டது. சாலையில் வாகனங்கள் லைட் போட்டுக்கொண்டு நகர்ந்தன. இன்னும் ஓரடி எடுத்து வைத்தாள். சத்தமில்லாமல் சாக இதுதான் நேரம். திடீரென யோசித்து இரண்டு கால்களுக்கும் இடையில் பாவாடையை இணைத்துப் பின் குத்தினாள். கோக்குமாக்காக விழுந்து உடை விலகிவிட்டால்? பின் குத்தி நிமிர்ந்த நேரம், பின்னாலிருந்து ஏதோ சத்தம் கேட்டது. யாரோ நடந்து வருகிற சத்தம். அவர்கள் வருவதற்குள் குதித்துவிடலாம் என்பதையும் மீறி, வருவது யாரென்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. நின்று படிக்கட்டு தொடங்கும் இடத்தைக் கூர்ந்து பார்த்தாள். மேஸ்திரியா?
பேன்ட் சட்டை போட்ட இளைஞன்... சூப்ரவைஸர் ஜானகிராமன்.
‘‘யார்மா... இந்த நேரத்தில?’’ என்றான்.
பதில் சொல்லலாமா? குதிக்கலாமா?
‘‘ஒண்ணுல்ல சார்!’’
அவன் யாரென்று நெருங்கிவந்து பார்த்தான். நாகபூஷணம் இன்னும் ஒரு எட்டு விளிம்பை நோக்கி வைப்பதற்குள் அவன் வேகமாக அருகே வந்துவிட்டான்.
‘‘என்ன பண்றே இங்க?’’
‘‘சும்மாதான் பராக்கு பாக்லாம்னு.’’
‘‘மொதல்ல கீழ இறங்கு. உங்க ஆளுங்க எல்லாமே போய்ட்டாங்க. பராக்கு பாக்குறியா பராக்கு. விழுந்தியன்னா ஒரு எலும்பு தேறாது.’’

அவளுக்கு மேற்கொண்டு திட்டு வாங்க திராணியின்றி கீழே இறங்கினாள். அவன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகைக்க ஆரம்பித்தான். நாகபூஷணம், ‘தைரியமா சாகக்கூட முடியலையே?’ எனப் படிகளில் இறங்கினாள்.
இன்னும் ஒரு வாரம் தாமதித்தாலும் வயிறு காட்டிக்கொடுத்துவிடும். பாவிங்க... மூணு பேரு. இதே மாதிரி ஒரு பொழுது போன நேரம். கொத்தனார்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் கிளம்பினார்கள். காரில் கிளம்பிக்கொண்டிருந்த இன்ஜினீயர் சுரேந்தரன், ‘`ரெண்டாவது மாடியில என் செல்போனை வெச்சுட்டு வந்துட்டேன். ஓர் எட்டு எடுத்துட்டு வர்றீயா?’’ என்றான். ‘`நீங்க போங்க. இதோ வந்துடும்’’ என மற்றவர்களை அனுப்பிவைத்தான். செல்போனை புடவை முந்தானையில் சுத்தமாகத் துடைத்துக் கொடுத்தாள். ‘`மண்ணாயிட்சி சார்.’’
‘‘பிரியாணி சாப்புட்றியா நாகு?’’ எனப் பாசமாகத்தான் கேட்டான் அந்த இன்ஜினீயர்.
‘`வேணாம்... சார்’’ - மறுத்துவிட்டு காரைக் கடந்தபோது, ‘‘உங்கப்பனுக்கு ஒண்ணு எடுத்துட்டுப்போ’’ என்றான். காரை நெருங்கிய தருணம் கைக்குட்டையால் முகத்தை லேசாகத்தான் மூடினான். கண்கள் செருகி அப்படியே காரினுள் சாய்ந்தாள். அந்த அப்பார்ட்மென்ட் கட்டடத்தை ஒட்டி, டூ பெட்ரூம், த்ரி பெட்ரூம் மாதிரி வீடுகள் கட்டி வைத்திருந்தார்கள். கட்டப்போகும் வீடு எப்படி இருக்கும் என்பதை விளக்குவார்கள். அதில் ஒரு பெட்ரூமில் இருந்துதான் மயக்கம் தெளிந்து அவள் வெளியே வந்தாள். மூன்று பெட்ரூம். மூன்று பேர்.
பத்தாவது மாடியில் யாருமில்லை. அங்கிருந்து குதித்தாலும் சாகலாம்தானே என யோசனை தட்டியது. சூப்ரவைஸர் வந்துடுவாரோ என மேலே ஒரு பார்வை பார்த்தாள். இந்த முறை வேகமாக தளத்தின் விளிம்பை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சற்றும் எதிர்பாராத நேரத்தில் கலவை ஏற்றிச் செல்லும் லிஃப்ட் இயங்கும் சத்தம் கேட்டது. கரகரவென நாரச ஓசை. அவள் நின்ற ஓரத்தை ஒட்டி லிஃப்ட்டுக்கான இரும்புக் கயிறுகள் மேலே ஏறின. அப்படியே நின்றாள். லிஃப்ட் 11-வது மாடியில் இருந்து கீழே இறங்கியது. சூப்ரவைஸர் ஜானகிராமன்தான் அதில் இறங்கினான். 10-வது மாடியில் நாகபூஷணம் நிற்பதைப் பார்த்து லிஃப்டை நிறுத்தி இறங்கிவந்தான்.
‘‘இன்னாமா நெனைச்சுக்கிட்டிருக்க நீ?’’ இனிமேல் பராக்கு பார்ப்பதாகச் சொல்ல முடியாது. வேறு என்ன சொல்வதென அவளுக்குத் தெரியவில்லை. கள்ளத்தனம் கண்டவன் போல கூர்ந்து பார்த்தான்.
இந்தப் பழி வேறயா? அப்படியே அசைவற்று நின்றாள். அருகே வந்து, ‘‘மடி யில என்னது?’’ என்றான்.
‘‘அய்யா... மடியில ஒண்ணுமில்ல. கீழ குதிச்சி செத்துட்லாம்னு வந்தேன்... என்னை வுட்ருங்க’’ என தற்கொலையின் எல்லையை நோக்கி எத்தனித்தாள்.
- அதிர்ச்சி தொடரும்
- தமிழ்மகன்,