மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வ மனுஷிகள் - பொன்னி - 18

தெய்வ மனுஷிகள் - பொன்னி
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வ மனுஷிகள் - பொன்னி

இப்போ பொன்னி பல குடும்பங்களுக்குத் தலைமகளா வேர்விட்டு நிக்குறா...

ணஞ்சன் இருக்காரே... அவருதான் அந்த ஊருக்கு நாட்டாமைக்காரரு. ஊருல பாதி வெள்ளாமை அவரோடதுதான். அணஞ்சனோட பொண்டாட்டி மாரி. நல்ல மகராசி. வேலையாளுகளை சொந்தக்காரக கணக்கா கவனிப்பா.

இவுகளுக்கு மொத்தம் ஏழு ஆம்பளைப் புள்ளைக. ‘வரிசையா ஏழு ஆம்பளைப் புள்ளைகளைக் கொடுத்த சாமி, தங்களுக்கொரு பொம்பளைப் புள்ளைய கொடுக்கலியே’ன்னு கவலை. அந்தக் கவலையைத் தீர்க்குறமாதிரி எட்டாவதா முழுகாம இருந்தா மாரி. ‘இந்தப் புள்ளையாவது பொம்பளைப் புள்ளையா பொறக்கணும்’னு சாமிக்கு வேண்டுதல் வெச்சு பூசையெல்லாம் போட்டாக மாரியும் அணஞ்சனும். அவங்க கோரிக்கை வீண் போகலே. தங்க விக்கிரகம் மாதிரி ஒரு பொம்பளைப் புள்ளை பொறந்துச்சு. அந்தப் புள்ளைக்கு ‘பொன்னி’னு பேரு வெச்சாக. நாட்டாமைக்கு பொம்பளைப் புள்ளை பொறந்ததை ஊரே கொண்டாடுச்சு. அண்ணங்காரனுகளுக்கும் ரொம்ப சந்தோஷம். எல்லாரையும் கூப்பிட்டு, கெடா வெட்டி விருந்து வெச்சுக் கொண்டாடுனாக.

பொன்னி பூரிப்போட வளந்தா. ஊருக்கு வெளியில அடிவாரக் காட்டுல ஒரு சுனை.  தினமும் காலையில எழுந்து தோழிகளோட அந்தச் சுனைக்குப் போவா பொன்னி. நேரம் போறதே தெரியாம நீந்தி விளையாடுவா. பலநாள், ‘குளிக்கப்போன புள்ளையைக் காணுமே’னு தேடிவந்து திட்டி, கூட்டிக்கிட்டுப் போவா மாரி. வயசு பதினாறாகியும் விளையாட்டுப் புள்ளையா வளந்தா பொன்னி.

தெய்வ மனுஷிகள் - பொன்னி
தெய்வ மனுஷிகள் - பொன்னி

ஒருநாள், ஆசைதீர குளிச்சுட்டு தோழிகளோட வீட்டுக்குத் திரும்பிக் கிட்டிருந்தா பொன்னி. அப்போ, அந்தப் பக்கமா தன் நண்பர்களோட வந்தான், திருமலை நாயக்கரோட சொந்தக்காரன் சூரப்பெருமா. ஆளு, பெரிய வீரன். அப்பங்காரன், நாயக்கருக்கு தளவாய். பொன்னியைப் பாத்ததும் அசந்துபோனான் சூரப்பெருமா. வெச்ச கண்ணு வாங்காம அவளையே பாத்துக்கிட்டிருந்தான். பொன்னிக்கு வெட்கமாப் போச்சு. விலகி வேகவேகமா ஓடிப்போனா.

சூரப்பெருமாக்கு அடுத்த அடி எடுத்து வெச்சு நடக்க வாய்க்கலே. வந்த வேலையை மறந்துட்டு நேரா வீட்டுக்குப் போயி தாயி, தகப்பன்கிட்ட சொல்லி, ‘கட்டுனா அவளைத்தான் கட்டுவேன்’னுட்டான்.

பொன்னிக்கும் நிலைக்கொள்ளலே... ‘என்ன ஒரு கம்பீரம்... முகத்துல ஏதோ ஓர் ஒளி அடிச்ச மாதிரி இருந்துச்சே. இவன் நமக்குக் கணவனா வந்தா நல்லாயிருக்குமே’னு ஆசை.

சூரப்பெருமா உறுதியா இருக்கிறதைப் பாத்த பெத்தவங்க, அணஞ்சனுக்குத் தகவல் சொல்லி அனுப்பிட்டு, சீரு செனத்தியோட பொண்ணு பாக்கப் போனாக. அணஞ்சனுக்கும் மாரிக்கும் பெருமை புடிபடலே... நாட்டோட தளவாய் மகனே பொண்ணுக் கேட்டு வந்திருக்காரே. ஊரு, உறவுகள்லாம் கூடிநின்னு திருமணத்துக்கு நாள் குறிச்சாக.

ஊரையே மடக்கி, பெரிய பந்தல் போட்டாக. கன்னியாகுமரிப் பக்கமிருந்து பிரபலமான சமையக்காரங்களை கூட்டியாந்து விதவிதமா சமைச்சு விருந்து வெச்சாக. அரண்மனையில இருந்து நாயக்கரும் ராணியும் பரிவாரத்தோட வந்து கல்யாணத்துல நின்னாக. ஊரு உலகமே மூக்குல விரல் வைக்குறமாதிரி பெரிசா கல்யாணத்தை நடத்தினாரு அணஞ்சன். அண்ணங்காரனுக தங்கச்சிக்கு பாத்துப் பாத்து சீரு செனத்தியை அள்ளிவிட்டானுக.

ரதம் தயாராச்சு. பொன்னி புகுந்த வீட்டுக்குப் புறப்பட்டா. அண்ணனுங் கெல்லாம் தங்கச்சி பிரிவுதாங்காம கதறி அழுவுறானுவ. அணஞ்சனும் மாரியும் ஆனந்தக்கண்ணீர் வடிக்கிறாக. தோழிகளெல்லாம் பொன்னியைக் கட்டிப்பிடிச்சு விடை கொடுக்கிறாக. ரதம் கெளம்பிருச்சு. 

சூரப்பெருமா வீட்டுல, பொன்னிய ராணி மாதிரி பாத்துக்கிட்டாக. ஒரு வேலை செய்ய விடுறதில்லை. நாள்கள் சந்தோஷமாப் போச்சு.

பொன்னி முழுகாம இருந்தா.  தங்கச்சி முழுகாம இருக்கிற செய்தியைக் கேட்டு அண்ணனுங்களுக்கெல்லாம் சந்தோஷம் தாங்கலே. சீரு செனத்தியோட தங்கச்சி வீட்டுக்குப்போய்க் கொண்டாடித் தீர்த்தானுக.

ஒரு நல்ல நாள் பாத்து மகளைக் கூப்பிட வந்தாக அணஞ்சனும் மாரியும். முதப் பெரசவம் தாய்வீட்டுலதானே நடக்கணும். பொன்னிக்குக் கிளம்பவே மனசில்ல. சூரப்பெருமாவுக்கு அனுப்ப மனசில்லை. தெருமுனை போற வரைக்கும் புருஷனைத் திரும்பி திரும்பி பாத்துக்கிட்டே வந்தா பொன்னி.

பொன்னிய தங்கத்தட்டுல வெச்சு தாங்குனானுங்க அண்ணனுங்க. மாரி, நாளொரு பூசை, வாரமொரு வழிபாடுன்னு மகளுக்கு நல்லவிதமா பிரசவமாகணும்னு வேண்டிக்கிட்டுத் திரிஞ்சா.

நிறைமாசம். இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கு பிரசவம். திடீர்னு பொன்னிக்கு ஓர் ஆசை. ‘அம்மா... சுனையில கொஞ்சநேரம் குளிச்சுட்டு வாரேம்மா’னா. மாரி ஒப்புக்கலே. ‘வயித்துப்புள்ளைக்காரி, அதுவும் எந்த நேரமும் பிரசவமாகலாம்னு வைத்தியச்சி தகவல் சொல்லியிருக்கா. இப்பப் போயி சுனையில  குளிக்கிறேங்கிறியே.  அதெல்லாம் சரிப்படாது’னு சொல்லிட்டா.  ஆனாலும், பொன்னிக்கு ஆசை அடங்கலே. அண்ணங்காரனுங்கக்கிட்ட போயி கண்ணை கசக்குனா. தங்கச்சி அழுவுறதைப் பொறுக்கமாட்டாத அண்ணங்காரனுங்க, ‘அம்மா... பொன்னி ஆசைப்படுறா. தோழிகளோட அவளை அனுப்பி வைக்கலாமே’னு சொன்னானுங்க. மாரிக்கு மனசேயில்லை. ஆனாலும் புள்ளைக சொல்லிட்டானுவளே.

தோழிகளுக்கெல்லாம் மகிழ்ச்சி. ரொம்ப நாள் கழிச்சு பொன்னியோட குளிக்கப்போறோம்னு குதூகலமா வர்றாளுக. எல்லாரும் சேர்ந்து சுனையில இறங்கிக் குளிச்சாக.

பாழாப்போன வானம். அதுவரைக்கும் வெளுத்துக்கிடந்துச்சு. திடீர்னு கறுக்க ஆரம்பிச்சுச்சு. சடசடன்னு தூறல் விழுந்துச்சு. இடி, மின்னல்னு அந்தச் சூழலே மாறிப்போச்சு. விறுவிறுன்னு எல்லாரும் கரையேறுனாக. ரெண்டு தோழிங்க, பொன்னியோட கையப் புடிச்சு கரையேத்தி விட்டாக. வேகவேகமா நடக்க ஆரம்பிச்சாக. மேகம் சூழ, நல்லா இருட்டிப்போச்சு. பொன்னியால நடக்க முடியலே. ரெண்டு தோழிகளைக் கூப்பிட்டு, ‘வீட்டுக்குப் போய் அண்ணனுங்களை வண்டி கட்டிக்கிட்டு வரச்சொல்லுங்கடி’னு சொன்னா பொன்னி. அவளுக ஓடுனாளுக. மத்த ரெண்டு பேரும் முன் நடக்க பொன்னி மெதுவா பின் நடந்தா.

மழை அடிச்சுப்பேயுது. இருட்டுல தோழிகளோட நடந்த பொன்னி வழிமாறிப் போயிட்டா. அவளுக்குப் பயம் வந்திருச்சு. தோழிகளைக் கூப்பிட்டுப் பாக்குறா. சத்தமேயில்லை. பக்கத்துல காட்டாளம்மன் கோயிலு. அதுக்குள்ள போயி நின்னுக்கிட்டா. மின்னல் வெட்டி வெட்டி அடிக்குது. இடியும் பயங்கரமா இருக்கு. சோர்வும் பயமும் உடம்புல ஏறி வதைக்க, மயங்கிச் சாஞ்சுட்டா பொன்னி.

காட்டாளம்மா கோயிலுக்குள்ள நாலைஞ்சு திருடனுங்க நின்னுக்கிட்டிருக் கிறது பொன்னிக்குத் தெரியலே. உள்ளேயிருக்கிற புதையலை எடுக்க வந்தவனுக. கூடவந்த சாமியாரு, ‘காட்டாளுக்கு ஒரு சூலிப்பொண்ணைப் பலிகொடுத்தாதான் புதையலை எடுக்க முடியும்’னு சொல்லிட்டாரு. ‘சூலியை எங்கிருந்து புடிச்சாறது’னு யோசிச்சுக் கிட்டிருக்கும்போதுதான் பொன்னி அங்கே போயி சிக்குறா. அவளைப் பாத்துட்டான் ஒரு திருட்டுப் பய.

உள்ளே போயி, ‘காட்டாளம்மா நமக்குன்னே ஒரு சூலியை இங்கே கொண்டாந்துவிட்டிருக்கா. அவளைத் தூக்கியாந்து பலி கொடுத்திடலாம்’னு சொன்னான். ஒரு வாழையிலையை விரிச்சு வெச்சு அதுல பொன்னியைத் தூக்கி வெச்சு கோயிலுக்குள்ள கொண்டு போனானுக.

தெய்வ மனுஷிகள் - பொன்னி
தெய்வ மனுஷிகள் - பொன்னி

உடுக்கைச் சத்தம் மூளையை உசுப்ப மயக்கம் தெளிஞ்சு திடீர்னு கண்விழிச்சுப் பார்த்தா பொன்னி. என்ன நடக்கப்போகுதுன்னு புரிஞ்சுக்கிட்டா. திருட்டுப்பயலுகக்கிட்ட கெஞ்சி அழுதா. ‘இங்கே கிடைக்கிற புதையலைவிட அதிக பொன்னும் பொருளும் அள்ளித்தருவானுக என் அண்ணனுங்க. அதுவும் போதலேன்னா, என் வீட்டுக்காரர்  தன் சொத்தெல்லாம் தருவார். எங்க குடும்பத்து வாரிசைச் சுமந்துக்கிட்டிருக்கேன். என்னைய விட்டுருங்க’னு கதறுனா. எதுவும் அந்த பாவிக காதுல விழலே. சாமியாரு கண்ணசைச்சான். ஒரு திருட்டுப்பய, வாளையெடுத்து ஒரே வெட்டு. பொன்னி துவண்டுபோனா. காட்டாளம்மா முகத்துலபட்டுத் தெறிச்சுச்சு அந்த இளரத்தம். 

தகவல் சொல்லப்போன தோழிகள் போய் சேர்றதுக்குள்ளயே, மழையும் இடியுமா இருக்கிறதைப் பாத்துட்டு அண்ணங்காரனுங்க தங்கச்சியைத் தேடி வண்டியைக் கட்டிக்கிட்டு வந்தானுக. வழியில தோழிகளையும் ஏத்திக்கிட்டு காடு, கரையெல்லாம் தேடி அலைஞ்சானுக. ‘பொன்னி’, ‘பொன்னி’னு கத்திக் கூப்பாடு போட்டானுக. சூரப்பெருமாவுக்கும் தகவல் போயி அவனும் அலறி அடிச்சுக் கிட்டு ஓடியாந்தான். கடைசியா காட்டாளம்மன் கோயிலுக்கு எல்லாரும் வந்து சேர்ந்தாக.

உள்ளே... ரத்தம் பெருக பொன்னி கெடந்தா. அந்தக் காட்சியைப் பாத்த அணஞ்சனும் மாரியும் அப்படியே நெஞ்சடைச்சுக் கீழே விழுந்தாக. உசுருக்கு உசுரா வளத்த தங்கச்சியும் ஆயி அப்பனும் இப்படிக் கிடக்கிறதைப் பாத்து அண்ணங்காரனுக உடைஞ்சு போனானுக.

‘எங்க தங்கச்சிக்கிட்டேயே போய் சேந்திடுறோம்’னு சொல்லி, காட்டாளம்மாவுக்கு முன்னாடியிருந்த சூலாயுதத்தைப் புடுங்கிக் குத்திக்கிட்டு ஏழு பேரும்  செத்துட்டானுக. ‘இனி எனக்கு என்ன வாழ்க்கையிருக்கு’னு  சூரப்பெருமாவும் தன்னோட உடைவாளால நெஞ்சைக் கீறிக்கிட்டு செத்துப்போனான்.

காட்டளம்மா கோயிலே ரத்தத்துல மிதந்துச்சு. அந்தக் காட்சியைப் பார்த்த மக்கள், ‘பொன்னி சாதாரண மனுஷியில்லை. மனுஷியாப் பொறந்த தெய்வம்’னு நம்புனாக. காட்டாளம்மா கோயில்லயே பொன்னிக்கும் சூரப்பெருமாக்கும் சுதை வெச்சு கும்புட ஆரம்பிச்சாக. வழி வழியா வழிபாடு வளந்துச்சு.

இப்போ பொன்னி பல குடும்பங்களுக்குத் தலைமகளா வேர்விட்டு நிக்குறா. அவளைப் பாக்க விரும்புறவங்க, கடையம் பக்கத்துல இருக்கிற தோரணமலைக்கு வாங்க. அங்கே அடிவாரத்துல உக்காந்து
காவல் காத்துக்கிட்டிருக்கா பொன்னி.

‘பொன்னியம்மா’னும், ‘பொன்னிறத்தா’னும் அவளைக் கொண்டாடுறாக. ‘இனியொரு பொண்ணுக்குத் தனக்கு நேர்ந்த கொடுமை நடந்திடக்கூடாது’னு எப்பவும் தீர்க்கமா முழிச்சுக்கிட்டு உக்காந்திருக்கா மகராசி!

-   வெ.நீலகண்டன், படங்கள்:  எல்.ராஜேந்திரன்,