தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

இந்தியாவின் முதல் பெண் இதயநோய் நிபுணர்; நாட்டின் முதல் இதயநோய் மருத்துவமனை தொடங்கியவர் - பத்மாவதி சிவராமகிருஷ்ணன்

இந்தியாவின் முதல் பெண் இதயநோய் நிபுணர்; நாட்டின் முதல் இதயநோய் மருத்துவமனை தொடங்கியவர் - பத்மாவதி சிவராமகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியாவின் முதல் பெண் இதயநோய் நிபுணர்; நாட்டின் முதல் இதயநோய் மருத்துவமனை தொடங்கியவர் - பத்மாவதி சிவராமகிருஷ்ணன்

முதல் பெண்கள்

“இந்தியாவில் இதயநோய் சிகிச்சை எப்படி வளர்ந்தது என்பதைக் கண்கூடாகக் கண்டவள் நான். இன்னமும் என்னிடம் வரும் நோயாளிகளைத் தொட்டு, என் கண்கள், காதுகளால் கேட்டும் பார்த்தும்தான் சிகிச்சையளிக்கிறேன். ஆனால், தொழில்நுட்பமும் நான் தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது இரண்டு சர்வதேச இதயநோய் மாநாடுகளில் பங்கேற்கிறேன். மருந்துகளை நம் பணியாள் போலத்தான் வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை நமக்கு முதலாளியாக்குவது தவறான அணுகுமுறை!” என்கிறார் 101 வயதான இந்தியாவின் முதல் இதயநோய் நிபுணர் டாக்டர் பத்மாவதி சிவராமகிருஷ்ணன்.

1917-ம் ஆண்டு பர்மாவின் மெர்க்வி நகரில் பிறந்தார் பத்மாவதி. தந்தை சிவராமகிருஷ்ணன் மற்றும் மூத்த சகோதரர் இருவரும் பர்மாவில் புகழ்பெற்ற பாரிஸ்டர்கள். சில தலைமுறைகளுக்கு முன்னர் பர்மா சென்று தங்கிவிட்ட தமிழர்கள். பள்ளி இறுதியாண்டு தேர்வில் மாகாணத்தில் முதல் மாணவியாக வெற்றி பெற்றவர் பத்மாவதி. மருத்துவப் படிப்பின்மீது கொண்ட ஆசையால், ரங்கூன் மருத்துவக் கல்லூரியில் முதல் பெண் மாணவியாகச் சேர்ந்து,  மருத்துவப் பட்டப்படிப்பிலும் முதலிடத்தைப் பெற்றார். அந்த வேளையில்தான் இரண்டாம் உலகப் போர் மூண்டது.

இந்தியாவின் முதல் பெண் இதயநோய் நிபுணர்; நாட்டின் முதல் இதயநோய் மருத்துவமனை தொடங்கியவர் - பத்மாவதி சிவராமகிருஷ்ணன்

“குடியிருந்த வீட்டை 24 மணி நேரத்துக்குள் காலி செய்துவிட வேண்டும் என்பது எங்களுக்கு இடப்பட்ட உத்தரவு. வீட்டுப் பெண்கள் மட்டும் மெர்க்வியிலிருந்து கடைசி விமானத்தில் தப்பினோம். நான், சகோதரி ஜானகி மற்றும் அம்மா மூன்று பேரும் கோயம்புத்தூர் வந்து சேர்ந்து, ஒரு வீடு வாங்கி தங்கிவிட்டோம். வீட்டு ஆண்கள் எங்களைக் கண்டடைந்து வந்து சேர மூன்று ஆண்டுகள் ஆனது” என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் டாக்டர் பத்மாவதி.

பின்னர், மருத்துவப்படிப்பின் மீதான ஆர்வம் உந்தித்தள்ள, லண்டனில் மேல்படிப்பைத் தொடர்ந்தார் பத்மாவதி. லண்டன் நகரின் பல பிரபல மருத்துவமனைகளில் பணியாற்றும் வாய்ப்பு பத்மாவதிக்குக் கிடைத்தது. அந்த அனுபவங்கள் ‘கார்டியாலஜி’ துறையின் மேல் அவருக்கு அளவற்ற ஆர்வத்தை ஏற்படுத்தின. விரைவில் எஃப்.ஆர்.சி.பி பட்டம் பெற்றவர், அடுத்து அமெரிக்கா பயணமானார்.

`புளூ பேபி’ எனப்படும் இதயநோயால் பாதிக்கப்பட்டுப் பிறக்கும் குழந்தைகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவரான டாக்டர் ஹெலன் டாசிக்குடன் சில மாதங்கள் ஆய்வில் ஈடுபட்டிருந்த பத்மாவதி, பாஸ்டனில் உள்ள ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியில் நான்காண்டுகள் நவீன இதயநோய் சிகிச்சையின் தந்தை என்று அறியப்படும் டாக்டர் பால் டட்லி ஒயிட்டிடம் கற்றுத்தேர்ந்து, ஸ்வீடன் நாட்டுக்குப் பயணமானார். 1950-களில் ஸ்வீடனின் மருத்துவர்கள்தாம் உலக அளவில் முதன்முறையாக இன்று இதயநோயை அறிய பரவலாகப் பயன்படுத்தப்படும் எக்கோ கார்டியோகிராம் முறையை அறிமுகப்படுத்தியவர்கள். அங்கு எக்கோ பற்றியும் கற்றுத்தேர்ந்த பத்மாவதி, 1952-ம் ஆண்டு அமெரிக்கா சென்று தன் மருத்துவப்பணியைத் தொடங்க எண்ணினார்.

இந்தியாவின் முதல் பெண் இதயநோய் நிபுணர்; நாட்டின் முதல் இதயநோய் மருத்துவமனை தொடங்கியவர் - பத்மாவதி சிவராமகிருஷ்ணன்

தாய்நாடு அவரை விடவில்லை. தமக்கை ஜானகி டெல்லியில் இருந்ததால், டெல்லி திரும்பிய பத்மாவதி, இந்தியாவின் அப்போதைய தலைவர்கள் நேரு மற்றும் அப்போதைய மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ராஜ்குமாரி அம்ரித் கௌர் ஆகியோரால் ஈர்க்கப்பட்டார். இந்தியத் தலைவர்களின் காந்தியக் கொள்கைகள் ஈர்த்ததன் காரணமாக, அமெரிக்கா செல்லும் எண்ணத்தைக் கைவிட்ட பத்மாவதி, அமைச்சர் ராஜ்குமாரியைச் சந்தித்தார். டெல்லியின் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி நியமனம் பெற்றார்.

அவரின் மருத்துவ ஆய்வுகளுக்குப் பெரும் களமாக அமைந்தது லேடி ஹார்டிங் கல்லூரி மருத்துவமனை. சிகிச்சைக்கு வந்தவர்களிடம் இருந்த விநோத நோய்களைக் கண்டு அதிர்ந்துபோன பத்மாவதி, அமெரிக்க ராக்ஃபெல்லர் ஃபவுண்டேஷனிடம் இருந்து மருத்துவ ஆய்வுக்கென நிதியுதவி பெற்றுப் பணியாற்றத் தொடங்கினார். தொடக்கத்தில் ருமாட்டிக் காய்ச்சல், நுரையீரல் நோய்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டவர், பின்னர் தனி இதயநோய்ப் பிரிவைத் தொடங்கவேண்டிய கட்டாயத்தை அரசுக்கு உணர்த்தினார். டெல்லி மருத்துவக் கவுன்சில் தேர்வாளராக இருந்தபோது, இதயநோய்க்கென தனி மேல்படிப்பை (எம்.டி) நாட்டிலேயே முதன்முறையாகத் தோற்றுவித்தார் பத்மாவதி.

1962-ம் ஆண்டு `ஆல் இந்தியா ஹார்ட் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத் தொடங்கினார் பத்மாவதி. இந்தியாவின் பின்தங்கிய பகுதிகளில்கூட, இதயநோய் சிறப்பு முகாம்களை நடத்திவருகிறது இந்த அமைப்பு.  இந்தியாவில் - ஆசியாவில் இதயநோய் சிகிச்சைக்கென முதன்முதலில் தொடங்கப்பட்ட தனி அமைப்பு இதுவே. 1981-ம் ஆண்டு பணிநிறைவு பெற்றதும், பத்மாவதி தொடங்கிய அமைப்பு `நேஷனல் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்’. குறைந்த கட்டணத்தில் சிறந்த இதயநோய் சிகிச்சைகளைச் செய்துவருகிறது இந்த அமைப்பு. 100 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையை இன்றும் அவ்வப்போது வந்து கவனித்துக்கொள்கிறார் 101 வயதான டாக்டர் பத்மாவதி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, வருடத்தின் ஆறு மாதங்கள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இப்போது நடப்பது சிரமமாக இருப்பதால், பயிற்சிக்குச் செல்வதில்லை. எனினும், வீட்டிலும் நோயாளிகளைச் சந்தித்து சிகிச்சையளிக்கிறார் இந்தச் சாதனைப் பெண்.

இவரது சேவையைப் பாராட்டி 1967-ம் ஆண்டு பத்மபூஷண் மற்றும் 1992-ம் ஆண்டு பத்மவிபூஷண் விருதுகளை வழங்கிக் கௌரவப்படுத்தியிருக்கிறது இந்திய அரசு. “நான் திருமணமே செய்து கொள்ளவில்லை, எப்போதும் ஆராய்ச்சி, மருத்துவம், நோயாளிகள் என்று பிஸியாக இருப்பதால், அது குறித்த வருத்தமும் எனக்கில்லை” என்று கூறியிருக்கிறார். இன்னும் ஐம்பதாண்டுகளில் இதயநோய் என்பதே உலகில் ஒழிந்துவிடும் என்று திடமாக நம்புகிறார், இந்தியாவின் முதல் பெண் கார்டியாலஜிஸ்ட்!

 - ஹம்சத்வனி, ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி