
சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிய தேன்சிட்டு!
ஈக்குவடார் நாட்டில் புதிய வகை ஹம்மிங் பேர்டு (தேன்சிட்டு) ஒன்றை, சர்வதேசப் பறவை ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். நீலக் கழுத்து ஹில்ஸ்டார் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பறவைக்கு, நான்கு அங்குல நீளத்துக்கு கருநீலக் கழுத்து இருக்கிறது. அழகில் அசரவைக்கும் இந்த இனம், அழிவின் விளிம்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அவற்றைப் பாதுகாக்கும் பறவை ஆய்வுக் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயியும் மழை மொழிகளும்!
* தவளை கத்தினால் தானே மழை.
* அந்தி ஈசல் பூத்தால், அடை மழைக்கு அச்சாரம்.
* தும்பி பறந்தால், தூரத்தில் மழை.
* எறும்பு ஏறில், பெரும் புயல்.
* மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.
* தை மழை நெய் மழை.
* தேங்கிக் கெட்டது நிலம், தேங்காமல் கெட்டது குளம்.
* ஆற்று வண்டல் தேற்றும் பயிரை.


பிங்க் பால்!
நீங்கள் எகிப்து நாட்டுக்குச் சென்றால், பிங்க் நிறத்தில் பால் விற்கப்படுவதைப் பார்க்கலாம். பாலில் ஏதாவது வண்ணப் பொருளைச் சேர்த்துள்ளார்களோ என ஆச்சர்யப்பட வேண்டாம். இது நீர்யானையின் பால். அது, பிங்க் நிறத்தில்தான் இருக்கும். நம் ஊரில் பசும்பால் எப்படித் தட்டுப்பாடில்லாமல் கிடைக்குமோ, அப்படி அங்கே நீர்யானையின் பால் அதிகம் புழக்கத்தில் உள்ளது.

அதிவேக ‘டிரெய்ன் 18’
30 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய விரைவு ரயில், சதாப்தி எக்ஸ்பிரஸ். இவை, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஓடுகின்றன. இதன் பெட்டிகள் வெளிநாடுகளில் தயாரானவை. இவற்றுக்குப் பதிலாக, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள ஐ.சி. எஃப் ரயில் தொழிற்சாலையில் புதிய ரயில் பெட்டிகள் தயாராகிவருகின்றன. இதற்கு ‘டிரெய்ன் 18’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அதிவேக விரைவு வண்டிகளாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கப்போகும் இந்த ரயில்கள், ஜனவரி மாதம் முதல் இயக்கப்படுமாம். தானியங்கிக் கதவுகள், குளிர்சாதன வசதி, இணைய வசதி (WIFI) போன்றவை இதன் சிறப்பாக அமையும்.

வாடிய வைப்பாறு!
காவேரி, வைகை எனச் சொன்னதும் ஆறுகள் எனத் தெரியும். வைப்பாறு எனக் கேள்விப்பட்டிருக்கீங்களா? காவிரி, வைகைக்கு இணையான ஆறு. கேரளாவில் உருவானாலும் தேனி, விருதுநகர் தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் வரை 130 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து மன்னார் வளைகுடாவில் கலக்கும். ஆனால், இத்தனை பெருமை வாய்ந்த வைப்பாறு, இப்போது நம் மண்ணில் இல்லை. வறண்ட நிலமே இருக்கிறது. பருவ மழை குறைந்தது, நதியின் பாதையைப் பராமரிக்காதது, அசுத்தம், அலட்சியம் ஆகியவற்றால் ஒரு நதியையே இழந்துவிட்டோம். இனியாவது இயற்கையைக் காப்பதில் கவனம்கொள்வது நம் அனைவரின் கடமை.