மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

நினைவுகள் அழிவதில்லை  

##~##

இந்தியாவுக்கு வெளியில் இருந்து கொண்டு இந்தியாவின் விதியை மாற்றியமைக்க முயற்சி செய்த மாபெரும் வீரர்கள் என்று இருவரைச் சொல்வேன். ஒருவர் ஜப்பானில் வாழ்ந்து கொண்டு இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய ராஷ் பிகாரி போஸ். இன்னொருவர் ஜெர்மனியில் வாழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த செண்பகராமன் பிள்ளை. இருவருமே, இந்திய விடுதலை குறித்த பெருங்கனவுடன் செயல்பட்டவர்கள். இந்திய தேசிய ராணுவம் என்ற உடனேயே, நம் நினைவுக்கு வருவது நேதாஜிதான். ஆனால், அவர் ஐ.என்.ஏ.வை உருவாக்கவில்லை. அதன் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் ராஷ் பிகாரி போஸ்.  தேடப்படும் முக்கிய அரசியல் குற்றவாளிகள் பட்டியலை பிரிட்டிஷ் அரசு வைத்திருந்தது. அதில் உள்ள எவரைப்பற்றி தகவல் கொடுத்தாலோ அல்லது பிடித்துக் கொடுத்தாலோ நூறு ஏக்கர் நிலம் பரிசு தருவதாகவும் அறிவித்து இருந்தது.

அந்தப் பட்டியலில் முதல்பெயர்... ராஷ் பிகாரி போஸ்!  மேற்கு வங்காளத்தின் பர்தவான் மாவட்டத்தில் உள்ள கபால்டா எனும் கிராமத்தில் 1886-ம் ஆண்டு மே25-ம் தேதி பிறந்தவர். தமது 15-வது வயதில், சாரு சந்திரராய் என்பவர் தலைமையில் நடந்த 'சுஹ்ரித் சம்மேளம்’ என்ற புரட்சிகர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். வங்காளத்தில் உள்ள புரட்சியாளர்களுடன் இணைந்து

எனது இந்தியா!

ஆங்கிலயேர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட முடிவு செய்தார் ராஷ் பிகாரி. அதன் ஒரு பகுதியாக, டெல்லியில் பிரம்மாண்டமான ஊர்வலம் நடத்தும் வைசிராயை வெடிகுண்டு வீசிக் கொல்ல முடிவு செய்யப்பட்டது. 1912-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி டெல்லி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

கல்கத்தாவில் இருந்து மாறி, புதிய தலைநகரமாக புதுடெல்லி உருவானதைக் கொண்டாடும் விதமாக, வைசிராய் ஹார்டிங் தன் மனைவியுடன் யானை மீது அம்பாரியில் அமர்ந்து, டெல்லியில் ஊர்வலம் வந்தார்.

காலை 11.45 மணிக்கு சாந்தினி சௌக் பகுதியில் உள்ள பஞ்சாப் வங்கியின் எதிரில் இருந்த கடிகார கோபுரம் ஒன்றின் மேல் இருந்து முக்காடு அணிந்த இரண்டு பெண் உருவங்கள், யானை மீது பவனி வரும் வைசிராயை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருந்தன. யானை ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது. 500 காவல் அதிகாரிகள், 2500 பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ வைசிராய் பெருமிதத்துடன், மக்களை வேடிக்கை பார்த்தபடியே வந்து கொண்டிருந்தார். கடிகார கோபுரத்தில் மறைந்திருந்த பெண், சிகரெட் டப்பா ஒன்றில் அடைக்கப்பட்ட வெடிகுண்டை யானையை நோக்கி வீசினாள். இன்னொரு பெண்,  ஒரு எறிகுண்டை கூட்டத்தை நோக்கி எறிந்தாள்.

அந்த வெடிகுண்டு யானையின் அம்பாரி மீது விழுந்து வெடித்தது. வைசிராய் தடுமாறி விழுந்தார். பாகன் அந்த இடத்திலேயே உடல் வெடித்துச் செத்தான். இரண்டு பெண்களும் தங்களது முக்காட்டை களைந்து விட்டு ஓடினார்கள். அவர்கள் ஆண்கள் என்பது அப்போதுதான் தெரிந்தது. ஒட்டுமொத்த டெல்லியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, பட்டப்பகலில் துணிச்சலாக வைசிராய் மீது வெடிகுண்டு வீசி, ஆங்கிலேயர்களின் சர்வாதிகாரத்துக்கு சவால் விட்ட அந்த இளைஞர்களில் ஒருவர்தான். ராஷ் பிகாரி போஸ்!

அவரோடு உடனிருந்து வெடிகுண்டு வீசியவர் பசந்த குமார் பிஸ்வாஸ். இந்தச் சம்பவம் பற்றி 'எனது இந்திய வருடங்கள்’ என்ற நூலில் வைசிராய் ஹார்டிங் விரிவாக குறிப்பிட்டு உள்ளார். 'பாதுகாப்பு கருதி ஊர்வலம் செல்லும் பாதையில் எந்த வீட்டின் மேலும், கட்டடங்களின் மேலும் ஆட்கள் நிற்கக்கூடாது என கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. சாந்தினி சௌக் பகுதியின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு காவலர் நிறுத்தப்பட்டிருந்தார். இதற்காகவே, 4000 காவலர்கள் அண்டை மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு இருந்தனர். சாந்தினி சௌக்-கின் நெரிசலான வணிகப் பகுதியில் யானை அசைந்தாடி வரும்போதுதான் ஒரு வெடிகுண்டு வீசப்பட்டது. அம்பாரியில் குண்டு பட்டதால் சரிந்து விழுந்து விட்டேன். என் மனைவி பயத்தில் அலறினாள். எனக்கு கண்ணை கட்டிக் கொண்டு மயக்கம் வந்தது. ஹீக் பிரேசர் என்ற காவல்அதிகாரி ஒரு குழந்தையை தூக்குவதைப் போல என்னைத் தூக்கிக் காரில் கிடத்தினார். பாதி மயக்கத்தில் என்ன நடந்தது என்றே தெரிந்து கொள்ள முடியவில்லை. என்னுடன் இருந்த உதவியாளருக்கு காது கேட்காமல் போய்விட்டது. எனக்கும் ஒரு காது கேட்கவே இல்லை. வலி தாங்க முடியாமல் நான் அழுதேன். என் மனைவியும் கண்ணீர் விட்டாள்.  வெடிகுண்டில் ஊசிகள், ஆணிகள் இருந்திருக்கக்கூடும் போல. அவை, என் உடலில் பாய்ந்து ஆழமான காயத்தை ஏற்படுத்தி இருந்தன. ஆறு மாதங்கள் தொடர்ந்து சிகிக்சை பெற்ற பிறகே, எனது உடல் தேறியது. என்னைக் கொல்லத் திட்டமிட்ட அந்த இந்தியனை தேடும் வேட்டை அப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

எனது இந்தியா!

. 'டெல்லிச் சதி வழக்கு’ எனப்படும் இந்த வெடிகுண்டு வழக்கில் ராஷ் பிகாரி போஸை, போலீஸ் தேடியது. அவரைப் பிடிக்க, டேவிட் பேட்டர்சன் என்ற தலைமை காவல் அதிகாரி  தலைமையில்

எனது இந்தியா!

தனிப்பிரிவு அமைக்கப்பட்டது. அப்போது, ராஷ் பிகாரி போஸ் காட்டிலாகா அலுவலராக வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் இருந்த அவர், நடந்த சம்பவத்துக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பது போல, டேராடூனில் உள்ள தனது அலுவலகத்துக்கு வேலைக்குச் செல்ல தொடங்கி விட்டார். ராஷ் பிகாரி போஸோடு துணை நின்றவர்களை காவல்துறை கைது செய்தது. அவரையும் பிடிக்க லாகூர் சென்றது. ஆனால், மாறுவேடத்தில் போலீஸை ஏமாற்றி தப்பி வங்காளத்துக்குள் சென்று விட்டார். நினைத்த நேரம் நினைத்த உருவம் எடுத்துக் கொள்ளும் மாயாவியைப் போல அவர் இருந்தார் என்று போலீஸ் குறிப்புகள் கூறுகின்றன. ஓடும் ரயிலில் போலீஸ் சுற்றி வளைத்த போது, துறவி போல மாறுவேடம் அணிந்து தப்பி இருக்கிறார். ஒரு முறை போலீஸ் உயர் அதிகாரியின் குதிரை வண்டி ஓட்டுபவனாக உருமாறிக்கொண்டு, கூடவே பயணம் செய்து தப்பிச் சென்று இருக்கிறார்.

இன்னொரு முறை, காவல்துறை அதிகாரிகள் தேடிவந்த போது செத்துப்போய் ஆவியாக அலையும் கிழவனைப் போல வேடம் போட்டு காவலர்களைப் பயமுறுத்தி தப்பியிருக்கிறார். மற்றொரு முறை, தன்னைப் பிடிக்க அலைந்து கொண்டிருந்த காவல்துறை அதிகாரியிடம், கைரேகை ஜோசியம் பார்ப்பவனைப் போலச் சென்று நாளை நிச்சயம் ராஷ் பிகாரி போஸை கைது செய்ய முடியும் என்று நம்பிக்கை ஊட்டி அவரது வாகனத்திலேயே தப்பிச் சென்று இருக்கிறார். இப்படி, ராஷ் பிகாரி போஸின் நிஜவாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் இன்றுவரை கதை கதையாகப் பேசப்பட்டு வருகின்றன.

இதன் உச்சத்தைப் போல, 1915-ம் ஆண்டு மே12-ம் தேதி, எஸ்.எஸ்.சனூகி மாரு என்ற  ஜப்பானிய கப்பலில் மகாகவி தாகூரின் செயலாளர் என்று கூறி, பிரிட்டிஷ் போலீசாரை ஏமாற்றித் தப்பித்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து ஜப்பான் சென்றார் போஸ். பிரிட்டிஷ் போலீஸ் அங்கும் அவரைத் துரத்தியது.

அப்போது, ஜப்பானியப் பல்கலைக் கழகத்தில் கேரளாவில் இருந்து சில மாணவர்கள் மீன்வளத் துறையில் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரைப்போல ராஷ் பிகாரி போஸ் மாறுவேடம் அணிந்து கொண்டு, பல்கலைக் கழகத்துக்குள் சுற்றிக் கொண்டிருந்தார். அங்கும் சென்றது போலீஸ்

எனது இந்தியா!

படை. புத்த மதத்துறவி, வணிகர், தேநீர் கடை நடத்துபவர், கூலித் தொழிலாளி, நாடக நடிகர் எனப் பல வேடங்கள் போட்டு மூன்று வருடங்களுக்கு ஜப்பானிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார் போஸ். பத்து நாட்களுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கியிருக்க முடியாது. போலீஸ் சுற்றி வளைத்துவிடும். தப்பிப் போக வேண்டும். பிரிட்டிஷ் உளவாளிகள் பின்தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். அந்த நாட்களில், கேரளாவில் இருந்து மேல்படிப்புக்காக டோக்கியோ வந்திருந்த நாயர்சான் என்று அழைக்கபடும், ஏ.எம். நாயரின் அறிமுகம் கிடைத்தது. அவர், ராஷ் பிகாரி போஸ் ஒளிந்து கொள்ள பல உதவிகள் செய்திருக்கிறார். டோக்கியோவில் நகமுரயா என்ற உணவகம் பிரபலமானது. அந்த உணவகத்தை நடத்தி வந்தவர் சோம அய்சோ. அவரும் ராஷ் பிகாரி ஒளிந்து கொள்ள இடம் கொடுத்து உதவினார். அந்த நாட்களில் அய்சோவின் மகளோடு ராஷ் பிகாரிக்கு காதல் ஏற்பட்டது. ஜப்பானிய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால், பிரிட்டிஷ் போலீஸ் துரத்துதலில் இருந்து தப்பி விடலாம் என்பதற்காக சோமஅய்சோவின் மகளை திருமணம் செய்து கொண்டு ஜப்பானிய பிரஜையாகி விட்டார் போஸ்.  

அத்துடன், நகமுரயா உணவகத்தில் இந்திய உணவுகளை ராஷ் பிகாரி அறிமுகம் செய்து வைத்தார். இன்றும் கூட, டோக்கியோவில் இந்திய உணவுவகைகளை தயாரிக்கும் புகழ்பெற்ற உணவகமாக நகமுரயா விளங்குகிறது. 1942-ல் ராஷ் பிகாரி போஸ், ஜப்பானில் உள்ள இந்திய மாணவர்களில் சுதந்திர வேட்கை கொண்டவர்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அதில், இந்தியா விடுதலை பெறுவதற்கு பிரிட்டிஷை எதிர்க்கும் வலிமையான ராணுவம் தேவை என்று அறிவித்தார். அதற்கான முதற்படியாக  இந்திய சுதந்திர லீக் ஒன்றை உருவாக்கினார். அதற்கு, ஜப்பான் அரசு உதவி செய்தது.  

ஜப்பானியர்களால் யுத்த முனையில் பிடிக்கப்பட்டு கைதிகளாக இருந்த இந்தியர்கள் மற்றும் விடுதலை வேட்கை கொண்டவர்கள் அத்தனை பேரையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டதுதான், இந்திய தேசிய ராணுவம். மோகன் சிங் துணையோடு அதற்கு தலைமை பொறுப்பு ஏற்க நேதாஜி அழைக்கப்பட்டார். நேதாஜியை, ராஷ் பிகாரி தேர்வு செய்ததற்கு முக்கியக் காரணம், அவரும் தன்னைப் போல ஒரு சாகசமிக்க போராளியாக இருக்கிறார் என்பதே!

சிங்கப்பூரில் நடந்த விழாவில், இந்திய தேசிய ராணுவத்தின் தலைமைப் பொறுப்பை நேதாஜி  ஏற்றுக் கொண்டார். 80,000க்கும் மேலான இந்தியர்கள் அதில் இணைந்தனர். அதில், பாதிக்கும் மேலாக தமிழர்கள் இருந்தார்கள். பெண்களுக்கான தனிப்பிரிவும் அந்தப் படையில் இருந்தது. நேதாஜியின் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் எழுச்சியோடு மணிப்பூரின் கொகிமா மற்றும்  இம்பாலாவை நோக்கிச் சென்றது. மறுபுறம், ஜப்பானிய கூட்டுப்படை அந்தமானைக் கைப்பற்றி, அங்கே தேசிய ராணுவத்தின் புதிய ஆட்சி நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவித்தது. இதன் கவர்னர் ஜெனரலாக கர்னல் லோகநாதன் நியமிக்கப்பட்டார்.

எனது இந்தியா!

ஜப்பானியப் படைகள் உடனிருந்தே சூழ்ச்சி செய்து பின்வாங்கியதால், நேதாஜியின் 'டெல்லியைக் கைப்பற்றுவோம்’ என்ற திட்டம் முறியடிக்கப்பட்டது. இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த பலர் பிரிட்டிஷ் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு டெல்லியில் ஒரேநாளில் தூக்கிலிடப்பட்டார்கள். பெருங்கனவு ஒன்று கண்முன்னே சிதைவுற்றதை ராஷ் பிகாரி போஸ் உணர்ந்தார்.

இரண்டாம் உலகப்போர் காலத்தில், டோக்கியோ மீது விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.  மனைவி மற்றும் பிள்ளைகளை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி விட்டு அவர் மட்டும் டோக்கியோ நகரில் இருந்தார். ஜனவரி 21, 1945-ல் ராஷ் பிகாரி போஸும் மரணம் அடைந்தார்.

பிரிட்டிஷ் அரசுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய ராஷ் பிகாரி போஸின் சுதந்திரக்கனவு அவர் வாழ்நாளில் நிறைவேறவில்லை. ஆனால், அவர் உருவாக்கிய உத்வேகம் அயல் நாடுகளில் வாழும் இந்தியர்களை ஒன்றிணைத்தது. மலேசியா, பர்மா, சிங்கப்பூரில் இருந்த இந்தியர்களை ஒரே அணியில் திரளச் செய்தது. வலிமைமிக்க அந்த இணைப்புக்கு காரணமாக ராஷ் பிகாரி இருந்தார் என்பதே அவரது தனிச்சிறப்பு.

ராஷ் பிகாரி போஸ் போராடி ஒன்று சேர்ந்த அந்த இணைப்பு, இன்று சிதறடிக்கப்பட்டிருப்பதோடு ராஷ் பிகாரி போஸின் வரலாறும் இளம்தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.

வரலாற்று நிகழ்வுகளை எளிதாகக் கடந்து போய் விடும் வெறும் தகவலாக மாற்றி வைத்திருப்​பதுதான் ஒருவன் தன்னை இந்தியனாக உணரமுடியாத நிலைக்கு முக்கிய காரணம்.

எனது இந்தியா!