மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்!

நாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்!

நாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்!

று மனமே ஆறு... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு...’ - கணீரென்ற குரலில் பாடியபடியே கம்பீரமாக உள்ளே பிரவேசித்த நாரதர், வந்ததும் வராததுமாய் டி.வியை செய்திச் சேனலுக்கு மாற்றினார். அவர் சொல்லாமலேயே நாம் புரிந்துகொண்டோம், அவரின் பாட்டுக்கும் செய்திக்கும் ஏதோ தொடர்பிருக்கிறது என்பதை. ஆனாலும் அதை அவரே சொல்லட்டும் எனப் பொறுமையுடன் காத்திருந்தோம்.

நாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்!

சிலைக்கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்த செய்தித் தொகுப்புகளை சில நிமிடங்கள் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தவர்,  பிறகு நம் பக்கம் திரும்பினார்.

‘‘நீதிமன்ற உத்தரவை, ஆண்டவனின் கட்டளையாகவே சிலாகித்துப் பேசுகிறார்கள், ஆன்மிக அன்பர்கள். ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் பணி ஓய்வு பெறும் நாளில், ரயில்வே காவல்துறை சார்பில் அவருக்கு நடத்தப் பட்ட பிரிவு உபசார விழாவில், `இளைஞர்களை நம்பி இந்தப் பொறுப்பை விட்டுச் செல்கிறேன்’ என்று உருக்கமாக அவர் பேசிக்கொண்டிருக்க, நீதிமன்ற உத்தரவு குறித்த தகவலும் வெளியானது.

`சிலைக் கடத்தல் பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல்  நீடிப்பார்’ என்ற உத்தரவு ஆன்மிக அன்பர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.  இவை எல்லாவற்றையும் ஏதோ தெய்வ சங்கல்பமாகவே கருதி, சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். இனி நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை அவர்களுக்கு.’’

‘‘நல்லதே நடக்கட்டும்’’ - நமது ஆமோதிப்பை தலையசைத்து ஏற்றுக்கொண்டவராக அடுத்தத் தகவலுக்குத் தாவினார், நாரதர்.

நாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்!‘‘ஒருபுறம் இயற்கை தனது சீற்றத்தால் மக்களின் வாழ்வாதாரத்தைப் புரட்டிப் போட்டிருக்கிறது என்றால், இன்னொருபுறம் பொறுப்பற்ற சில மனிதர்களின் சுயநலம் நீராதாரங்களுக்குச் செயற்கை அழிவை ஏற்படுத்தி வருகிறது’’ என்று ஆதங்கப்பட்ட நாரதர், அதுபற்றி நாம் கேட்பதற்குமுன், அவரே தொடர்ந்தார்.

‘‘தஞ்சை-நாகை மாவட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்க ஆன்மிக அன்பர்கள் சிலர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். நானும் அவர்களுடன் கலந்துகொண்டேன். கடுமையான பாதிப்புகள்... விரைவில் அந்த மக்கள் மீண்டு வரவேண்டும். அதற்கான வல்லமை இறையருளால் அவர்களுக்கு நிச்சயம் கைகூடும்’’ கண்மூடி பிரார்த்தித்துக்கொண்டவரிடம் நாம் கேட்டோம்.

‘‘ஏதோ நீராதாரப் பிரச்னை குறித்து பேசத் தொடங்கினீரே...’’

‘‘கோயிலின் திருக்குளங்கள் முக்கியமான நீர் ஆதாரம் அல்லவா? அதிலும் புண்ணிய தலங்களில் புனிதத் தீர்த்தங்களாகத் திகழும் திருக்குளத்துக்குப் பாதிப்பு என்றால், அது உள்ளூர் மக்களை மட்டுமின்றி வெளியூர் பக்தர்களையும் பாதிக்கும்!’’

``எந்த ஊர்... எந்தக் கோயிலின் திருக்குளம் நாரதரே?’’

‘‘நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் திருக்குளத்தைப் பற்றியே சொல்ல வந்தேன். அதற்குமுன், அந்தக் கோயில் பற்றி வேறுசில புகார்கள் குறித்து சொல்லிவிடுகிறேன்’’ என்றவர், ஒவ்வொன்றாக விவரித்தார்.

‘`முதல் புகார் அங்கிருக்கும் இடைத்தரகர்களைப் பற்றித்தான். திருக் கோயிலின் மேற்கு மற்றும் கிழக்கு வாயில்களில், சுமார் 50 இடைத்தரகர்கள்  சுற்றித் திரிகிறார்களாம். காவியுடுத்தி, நெற்றி நிறைய விபூதியுடன் பார்ப்பதற்கு பக்திப்பழமாகத் திகழ்வார்களாம்.  வெளியூரிலிருந்து வரும் பக்தர்களைக் கண்டால்... ‘கோயிலில் கணபதி, சுவாமி, அம்பாள், முருகன் சந்நிதிகளில் அபிஷேகம்-அர்ச்சனை என்று 1,800 ரூபாய் வரை கட்டணம் வசூலித்துவிடுகிறார்களாம். ‘1,300 ரூபாய் கொடுத்தால் போதும் கருவறை பக்கத்திலேயே நிற்கவைத்து அர்ச்சனை செய்துதருகிறோம்’ என்று கூறி பணத்தைக் கறந்துவிடுகிறார்களாம். கோயிலிலுள்ள சிலருக்கும் இவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், அர்ச்சனை முதலான  விஷயங்களை இவர்கள் எளிதில் சாதித்துக்கொள்கிறார்களாம். இந்த நிலையில், சில நாள்களுக்குமுன் ஒரு சுவாரஸ்யம் நடந்தேறியிருகிறது!’’

‘‘என்ன அது?’’ ஆர்வத்தோடு கேட்டோம்.

‘‘கடந்த வாரத்தில் ஒருநாள், அறநிலையத்துறை அதிகாரி ஒருவரின் மகளிடமே அவர் இன்னாரென்று தெரியாமல், வழக்கம்போல் பணம் வசூலித்துவிட்டார்களாம்’’

‘`விஷயம் விபரீதமாகியிருக்குமே?’’

நாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்!

‘`ஆமாம்! போலீஸில் புகார் செய்து பணத்தை மீட்டு ஒப்படைத் திருக்கிறார்கள். அதன்பிறகாவது அந்தப் பிரச்னை முடிந்ததா என்றால், அதுதான் இல்லை. ஓரிரு நாள்கள் கோயிலின் பக்கம் தலைகாட்டாத புரோக்கர் பட்டாளம், இப்போது மீண்டும் தங்களின் வசூலைத் தொடங்கி விட்டார்கள்!’’

``வேறென்ன புகார்கள்...’’

‘`தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கோயிலுக்கு வந்துசெல்கிறார்கள். முகூர்த்த நாள்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும். இங்கே, வைத்தியநாத சுவாமி மேற்குப் பார்த்து காட்சி தருவதால், பெரும்பாலான பக்தர்கள் மேற்குக் கோபுர வாயில் வழியாகத்தான் வருவார்கள். அந்தக் கோபுரம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், ‘பக்தர்கள் இந்த வழியாகப் பிரவேசிக்க வேண்டாம்’ என்று அறிவிப்புப் பலகையும் வைத்திருக்கிறார்கள். ஆனாலும், பக்தர்கள் அந்த வழியையே பயன்படுத்தி வருகிறார்கள்.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கோயில் நிர்வாகம் அலட்சியமாகவே இருக்கிறது’’ என்றவரிடம்,  ‘‘இரண்டு வருடங்களுக்கு முன்புகூட, கோயிலில் சண்முகவிலாஸ் மண்டபம் இடிந்து விழுந்ததாகச் சொல்லப்பட்டதே’’ என்று நமக்குத் தெரிந்த தகவலைப் பகிர்ந்து கொண்டோம்.

‘`ஆமாம்! தற்போது இங்கே மேற்குக் கோபுரம் மட்டுமல்ல, தெற்கு கோபுரத்திலும் மேற்கூரையில் விரிசல் விழுந்திருக்கிறது. மரத்தை வைத்து  முட்டுக்கொடுத்திருக்கிறார்கள். அதேபோல், மடப்பள்ளி, வசந்த மண்டபம் என்று பல இடங்கள் சிதிலமடைந்துள்ளன. இவை எல்லாவற் றுக்கும் காரணம், கடந்த 20 வருடங்களாகவே கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெறாததுதான் என்று ஆதங்கப்படுகிறார்கள் பக்தர்கள்.’’

‘`12 வருடங்களுக்கு ஒருமுறை கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்தாக வேண்டுமே...’’

‘‘ஆமாம். ஆனால் சம்பந்தப்பட்ட வர்களுக்கு அந்தக் கவலை இருப்ப தாகத் தெரியவில்லையே! நிதிப்பற்றாக்குறை என்றும் காரணம் சொல்ல முடியாது. `கோயிலுக்குப் போதுமான நிதி ஆதாரம் இருக்கிறது’ என்று உறுதியாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்’’ என்று விவரித்த நாரதர், அடுத்து கோயிலின் திருக்குளம் குறித்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார்.

‘`கோயிலுக்கு வரும் பக்தர்கள், சித்தாமிர்தத் தீர்த்தக்குளத்தில் நீராடி வழிபட்டால், தீராத நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். அந்தத் தீர்த்தக் குளமே நோய்களை உருவாக்கும் குளமாக மாறிவிட்டதாக பக்தர்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

ஏற்கெனவே, பாசி படிந்து அழுக்கடைந்து கிடக்கும் தீர்த்தக் குளத்தில் ஊரின் கழிவுநீர் வந்து கலந்துகொண்டிருந்ததாம். இதுபற்றி புகார் தெரிவித்தும் கோயில் நிர்வாகம் கண்டுகொள்ள வில்லையாம். அதைத் தொடர்ந்து, ‘திருக்குளத்தில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்காவிட்டால், குளத்தில் இறங்கி போராட்டம் நடத்துவோம்’ என்று இந்து மக்கள் கட்சி  தரப்பில் அறிவித்திருக்கிறார்கள். அதன்பிறகே, அவசரகதியில் கல்லை வைத்து, கழிவு நீர் வரும் பாதையை அடைத்திருக்கிறார்கள். ஆனாலும், திருக்குளத்துக்குள் இன்னமும் கழிவுநீர் கசியவே செய்கிறது’’ என்று  கூறி முடித்த நாரதரிடம், ‘‘புகார்கள் அவ்வளவுதானா வேறு ஏதேனும் உண்டா’’ என்று நாம் கேட்க, ‘‘உண்டு... உண்டு’’ ஆமோதித்தவர், மேலும் தொடர்ந்தார்.

‘‘கோயிலின் மேற்குவாசலில்... ‘திருக்கோயிலின் அங்கீகாரம் பெற்ற நாடிஜோதிட நிலையம்’ என்ற பெயரில் சிலர், ‘வெளியே உள்ளவர்களிடம் கட்டணம் 300 ரூபாய்; எங்களிடம் 150 ரூபாய்தான்’ என்ற ரீதியில், கையைப் பிடித்து இழுக்காத குறையாக, பக்தர்களை நிர்பந்திக்கிறார்களாம். அவர்களிடமிருந்து தப்பிச் செல்வதே பெரும் சிரமமாக இருக்கிறது பக்தர்களுக்கு!’’

‘`இதுபற்றியெல்லாம் கோயில் நிர்வாகத் தரப்பில் விசாரித்தீரா?’’

‘`கோயிலின் நிர்வாகக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணனிடம் விசாரித்தேன். ‘நீங்கள் சொல்லும் எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு கும்பாபிஷேகம் நடத்துவதுதான். அதற்கு அனுமதி கேட்டு அறநிலையத் துறைக்குக் கோப்பு அனுப்பியுள்ளோம். விரைவில் திருப்பணிகள் ஆரம்பிக்கப்படும். அதேபோல், தீர்த்தக் குளத்தில் கழிவு நீர் கலப்பதையும் தடுத்துவிட்டோம். விரைவில் குளத்து நீரை வெளியேற்றிவிட்டு, புதிய தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்திருக்கிறோம்.
 
அர்ச்சனையைப் பொறுத்தவரை, ஐந்து சுவாமிகளுக்கும் அபிஷேகம், அர்ச்சனை செய்ய ரூ.1,800 கட்டணம் என்று அறிவிப்புப் பலகையே  வைத்திருக்கிறோம். ஆனால் சிலர், அர்ச்சனை செய்வதற்கு மட்டுமே ரூ.1.300 வசூலித்துவிடுகிறார்கள். `அர்ச்சனைப் பொருள்களுக்கு இவ்வளவு கட்டணமா’ என்று பக்தர்களும் யோசிக்காமல் ஏமாந்துவிடுகிறார்கள். இதுகுறித்து பக்தர்கள் புகார் தெரிவித்தால், காவல்துறை மூலம் சம்பந்தப் பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம். 

சமீபத்தில்கூட அப்படி நடவடிக்கை எடுத்தோம். ஆக, பக்தர்கள்தான் ஏமாறாமல் இருக்கவேண்டும். அல்லது எங்களிடமாவது வந்து கேட்கவேண்டும்’ என்று கூறி முடித்துக் கொண்டார்’’ - என்ற நாரதர், தானும் முடித்துக்கொண்டு மீண்டும் செய்திச்சேனலில் மூழ்கிப்போனார்!

- உலா தொடரும்...

படங்கள்: ம. ஹரிஷ்