Published:Updated:

#நானும்தான் - குறுந்தொடர் - 4

#நானும்தான் - குறுந்தொடர் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
#நானும்தான் - குறுந்தொடர் - 4

#நானும்தான் - குறுந்தொடர் - 4

வர்னர் எப்போது வருவார் என்று தெரியவில்லை. மீனாட்சி தவிப்புடன் காத்திருந்தாள். சாலை எச்சரிக்கைத் தன்மையோடு இருந்தது. நூறு மீட்டருக்கு ஒரு போலீஸ்காரர். அதுதான் கணக்கு. அந்த இடைவெளியில் நிழல் வேண்டும் என்பது கணக்கில் இல்லை.

 நிழலற்ற ஒரு நூறாவது மீட்டரில் அவள் நின்றிருந்தாள். உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது. மீனாட்சி சற்று ஓரம் பதுங்கி அந்தப் பெட்டிக்கடையின் கூரை நீட்சியில் சொற்ப நிழல் தேட முனைந்தாள். வெயிலின் கடுமை எஸ்.ஐ ஆறுமுகத்தைவிட அதிகமாக மிரட்டியது. கடைக்காரனிடம், ``வாட்டர் பாக்கெட் இருக்கா?’’ என்றாள். எடுத்துக் கொடுத்தான். காலையில் இருந்து இவள்படும் வேதனையை உணர்ந்திருந்தான் அவன். ‘`ஸ்டூல் வேணுமாக்கா?’’ என்றான்.

‘`ரோந்து வர்ற நேரத்தில உக்காந்திருந்தா போச்சு.’’ பாக்கெட் ஓரத்தைப் பல்லால் கடித்துத் துப்பிவிட்டு, வாய்க்குள் கொஞ்சம் தண்ணீரைப் பீய்ச்சிக்கொண்டு கொஞ்சம் முகத்துக்கும் பீய்ச்சினாள். கைக்குட்டையால் துடைத்தபடி மீண்டும் சாலையில் வந்து நின்றாள்.

#நானும்தான் - குறுந்தொடர் - 4

வைஜயந்தி ஐ.பி.எஸ் மாதிரி கனவு மட்டும் நிறைய இருந்தது. ஆயுதப்படை பிரிவில் பெண் காவலர்களுக்கு அதிகபட்ச வாய்ப்பு இவைதாம்... அமைச்சர்கள், கவர்னர்கள் வருகையில் சாலை ஓரங்களில் காவல் நிற்பது, கோயில் திருவிழாக்கள், சாதி சங்க ஊர்வலங்கள், நீதிகேட்டுப் போராட்டம்... இங்கெல்லாம் ஒரு காக்கிச்சட்டை பிரதிநிதியாக நிற்க வேண்டியதுதான்.

எங்கே டூயூட்டி போடுவார்கள், என்ன வேலை என்பது அன்றைக்குத்தான் தெரியும். தொழிலாளர் போராட்டமா, ஊர்வலமா, தேர்த் திருவிழாவா என்பதெல்லாம் அன்றன்றைக்கான அரசு - மக்கள் கள நிலவரத்தைப் பொறுத்தது. இன்றைக்கு கவர்னர் பந்தோபஸ்து.

கவர்னர், பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசிவிட்டு மீண்டும் திரும்பி வருகிற வரை அந்த இடத்தில் இருக்க வேண்டும். தண்ணீர் குடித்த கொஞ்ச நேரத்தில் தண்ணீரை வெளியேற்ற வேண்டிய நெருக்கடி இருந்தது அவளுக்கு. சாதகமான ஹோட்டல், வங்கி, மால் எதுவும் அருகில் இல்லை. இன்னும் சிறிதுதூரம் கடந்து போனால் ஒரு பள்ளிக்கூடம் உண்டு. அங்கே நீர் கழிக்கலாம். அதற்குள் ரோந்து இன்ஸ்பெக்டர் வந்து விடுவாரோ என்று பயமாக இருந்தது.

சப் இன்ஸ்பெக்டர் சரியான முசுடு. டூட்டி போடும்போதே யாரெல்லாம் அவருக்கு அடிமை என்பதை அளந்து அறிந்து தேர்வு செய்யும். அடிமைகளுக்கு உடல்நோகாத வேலையாகப் போடும். தான் உண்டு தன் வேலை உண்டு என நேர்மையாக நடந்துகொண்டால், சிக்கல்தான். அதனுடைய சுண்டைக்காய் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இப்படி வேகாத வெயிலில் காயப்போடும். `போடட்டும் பரவாயில்லை' என விட்டுவிட்டாள். லலிதா ஒருமுறை சொன்னாள். ‘`இந்த மாதிரி வெயில்ல வேகறதே பரவாயில்லை’’ என்று.

மீனாட்சி எதிர்பார்த்த அல்லது எதிர்ப் பார்க்காத அந்த ஆபீஸ் டியூட்டி ஒருநாள் அமைந்தது. எஸ்.ஐ ரொம்ப முறையாக, நல்லவிதமாகத் தன் வேலையை ஆரம்பித்தார். மீனாட்சிக்கு ஆபீஸிலேயே வேலை என்றார் அவருக்கே மகிழ்ச்சியாக. எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

12 மணி சுமாருக்கு ‘`மீனாட்சி’’ என்றார். அழைப்பில் அப்படியோர் ஆபீஸர் தோரணை.

‘`சார்’’ என்றபடி எதிரில் போய் நின்றாள். எஸ்.ஐ நிமிர்ந்து பார்க்கவில்லை. தீவிரமாக ஒரு மனுவைப் படித்துக்கொண்டிருந்தார்.

மீனாட்சி மறுபடியும் அவளுக்கு மட்டுமே கேட்கும்படியாக ‘`சார்’’ என்றாள். அழைப்பது யார் என்ற யோசனையோடு தலை உயர்த்தினார். மீனாட்சிதான் தன் முன் நிற்கிறாள் என்பதைக் கவனிக்காமல் பணியாற்றிய பாவனை. இப்போதுதான் அவள் வந்ததைக் கவனித்த தோரணையில் விரைப்பாக ஏறிட்டுப் பார்க்க விரும்பியவர், தன் முயற்சியை மீறி, சற்றே இளித்தார்.

‘`அதோ அந்த ஃபைலை எடு’’ என்றார்.

அது அவருக்குப் பின்னே இருந்தது. அவர் அமர்ந்திருந்த நாற்காலிக்கும் அந்த ஃபைலுக்கும் அரை அடி இடைவெளிதான் இருந்தது. அந்த ஃபைலை அவரே எடுப்பதைவிட சுகமான வழி இல்லை. மீனாட்சி அந்த இடுக்குக்குள் எந்த அளவு தன்னை இடுக்கிக் கொள்ளமுடியுமோ இடுக்கி, அந்த ஃபைலை எடுக்க எத்தனித்தாள்.

எஸ்.ஐ அவளுக்காகக் கொஞ்சம் நாற்காலியை நகர்த்தி, அப்படி நகர்த்தும்போது அவருடைய தொடையை அவளுடையதோடு இடிக்கச் செய்தார். அவருடைய பார்வை மீனாட்சியின் முகக் குறிப்பைக் கவனிக்கத் தவறவில்லை. ஃபைல் எடுத்துவிட்டு நகர்ந்து அவளுக்கு எதிர்ப்புறம் வந்து நிற்க...

#நானும்தான் - குறுந்தொடர் - 4

எஸ்.ஐ-யும் கூடவே வந்து அவளை வெளியே செல்லவிடாதவாறு கைகளைச் சுவரில் வைத்து மறித்து, அணைக்கட்டி நின்றார்.

‘`எனக்கு இதெல்லாம் பிடிக்கலை சார்.’’

‘`இங்கே வேலை செய்வது பிடிக்கலையா?’’

‘`இல்ல சார்... நீங்கள் தொட்டது’’ என்றாள்.

‘`எதேச்சையா பட்டதெல்லாம் உனக்கு வில்லங்கமா தெரிஞ்சா  போலீஸ் வேலைக்குச் சரிப்பட்டு வர மாட்ட...’’

‘`மன்னிச்சுங்க சார்.’’

‘`போ... போய் வேலையைப் பாரு’’ என்று விரட்டினார்.

மீனாட்சி மிரண்டபடி வெளியே வந்த அதே நேரத்தில் ஏ.சி வித்யாதரன் உள்ளே நுழைந்தார். எஸ்.ஐ-யையும் மீனாட்சியையும்  ஒரேநேரத்தில் பார்த்தார். இருவரின் முகக் குறிப்புகளும் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

‘`என்னய்யா நடக்குது? பொண்ணுங்க கிட்ட எப்படி நடக்கணும்னு தெரியாது?’’ என்றபடி  எஸ்.ஐ-யின் முன்னால் அமர்ந்தார்.

‘`ஐயா ஒண்ணும் இல்லங்க...’’

மீனாட்சிக்கு உயிர் வந்ததுபோல இருந்தது.

‘`உன்னைப் பத்தி நிறைய கம்ப்ளைன்ட்  வந்துகிட்டே இருக்கு. பார்த்து நடந்துக்க.’’

‘`வேண்டாதவங்க கிளப்பிவிடுறாங்கய்யா.’’

‘`விவகாரம் விசாகா கமிட்டிக்குப் போனா வேற மாதிரி ஆகிடும் பார்த்துக்க.’’

‘`அப்படிப்பட்டவன் இல்லைங்கய்யா.’’

ஏ.சி டீ கோப்பையை வைத்துவிட்டு எழுந்தார். ‘`சரி நாளைக்கு அவளை என் ஆஃபீஸுக்கு  டுயூட்டி போடு’’ என்றார் மீனாட்சியைப் பார்த்து. அதிகாரமும் ஆசையும் கலந்த ஆண்களின் கண்களில்  சமீபகாலமாக ஒரு வெறித்தனத்தை அவள் உணர ஆரம்பித்திருந்தாள். பயம் இன்னும் பரவியது.

- அதிர்ச்சி தொடரும்

- தமிழ்மகன்,   ஓவியம் : ஸ்யாம்