
வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
காதலுக்கென்று தனிச் சட்டங்கள் எதுவும் இதுவரை இல்லை. அதனால், காதல் வழக்குகளில் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளே சட்டங்களாகின்றன. அப்படி சில தீர்ப்புகளின் மூலம் காதலுக்கு எழுதப்பட்டுள்ள விதிமுறைகள் பற்றி விளக்குகிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.
காதலுக்குத் தனிச்சட்டம்!
காதலுக்கான தனிச்சட்டம் என்பது மற்ற எல்லா சட்டங்களை விடவும் அவசியமானது. ஏனெனில், உலகம் முழுக்க மனித இனம் காதலால்தான் பிணைக்கப்பட்டுள்ளது. டின்னி ஓவென்ஸின் (Tini Owens) வழக்கு, முதுமையிலும் காதலை நாடும், காதலின்மையின் வெற்றிடத்தைச் சாடும் ஒரு பெண்ணின் மனதைச் சொல்கிறது. யுனைடெட் கிங்டம் உச்ச நீதிமன்றத்தில் டின்னி ஓவென்ஸ் என்ற 68 வயதுப் பெண், தனது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிக்குரியதாக இல்லை எனக் காரணம் கூறி விவாகரத்து கோரினார். ‘என் கணவர் என்மீது பாசத்துடனும் காதலுடனும் இல்லை. மகிழ்ச்சி இல்லாத இந்தத் திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்று டின்னி நீதிமன்றத்தை நாடினார். வழக்கு பல்வேறு நிலைகளைக் கடந்து உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.
விவாகரத்துக்குக் காரணம் அவசியமில்லை என்று ‘நோ ஃபால்ட் விவாகரத்தை' (No Fault Divorce)’ அங்கீகரிக்கும் நாடுகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் டின்னி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, யுனைடெட் கிங்டம் நாடுகளில் விவாதப் பொருளானது. ‘திருமணம் மகிழ்ச்சியளிக்கவில்லை என்பதால் விவாகரத்து வழங்க முடியாது’ என்ற இறுதித் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது. டின்னியின் விவாகரத்தை நிராகரித்ததற்கான சட்டரீதியான காரணங்கள் பல இருக்கலாம். என்றாலும், 40 ஆண்டுக்கால பந்தத்தைக் காதலும் பாசமும் இல்லை என்பதற்காக முறித்துக்கொள்ள 68 வயதுப் பெண் விரும்புகிறார் என்கிற இந்த வழக்கு, பெண்கள் வாழ்வில் காதல் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை உணர்த்துகிறது.

திருமணம் என்பதைப் பிறந்தநாள்போல ஒரு பார்ட்டியாக பாவிக்கும் கலாசாரம் மேலைநாடுகளில் உள்ளது. அங்கு விவாகரத்து பெற, காரணங்கள்கூடத் தேவையில்லை என்று ‘நோ ஃபால்ட் டைவர்ஸை’ அங்கீகரிக்கிறார்கள். அப்படிப்பட்ட கலாசாரம் உள்ள நாட்டில் வாழ்ந்த பெண் ஒருவர், கணவர் தன்னுடன் காதலுடன் இல்லை என்பதால் 68 வயதில் விவாகரத்து கேட்கிறார். ஆனால், காரணமே இல்லாமல் விவாகரத்து வழங்க முன்வரும் அயல்நாட்டு நீதிமன்றம்கூட, ‘விரும்பாத உறவு என்பதால் விவாகரத்து வழங்க முடியாது. அதற்காகக் காத்திருக்க வேண்டும்’ என்று தீர்ப்பிடுகிறது. இது பெரிய முரண். பெண்ணின் உணர்வு அங்கு மதிக்கப்படவில்லை. இந்த நிலையில், இந்திய நீதிமன்றங்கள் காதலை நிராகரிக்கப் பெண்ணுக்கு உரிமை உண்டு என்று வழங்கியிருக்கிற தீர்ப்புகள், முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, காதலிப்பதாகச் சொல்லி, திருமணம் முடித்த பின்னர், அந்த உறவில் உடல், மனக் காயங்களுக்கு ஆளாகும் பெண்கள், காதல் என்ற பெயரில் இணைந்த அந்த பந்தத்தில் இருந்து வெளியேறச் சட்ட உதவியை நாட வேண்டும்.
பவன்குமார் வெர்சஸ் ஹிமாச்சலப்பிரதேசம்
வயதுக்கு வந்த ஓர் ஆணும் பெண்ணும் காதலித்து வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். பெண்ணின் தந்தை, இந்திய தண்டனைச் சட்டம் 363, 366 மற்றும் 376 ஆகிய பிரிவுகளின் கீழ் புகார் கொடுத்தார். ஆள் கடத்தல், கடத்திச் சென்று திருமணத்துக்குக் கட்டாயப்படுத்துதல், கற்பழிப்பு ஆகிய குற்றங்கள் சம்பந்தப்பட்ட ஆணின் மீது சுமத்தப்பட்டன. அந்தப் பெண், தன் காதலனின் பக்கம் நின்றாள். ஆனால், அவன் வழக்குகளிலிருந்து விடுபட்டு விடுதலை ஆன பின்னர், இருவரும் பிரிந்தனர். என்றாலும், காதலன் அந்தப் பெண்ணை விடாமல் தொந்தரவு செய்ய ஆரம்பித்தான். அவளைக் கடத்திவிடுவதாகச் சொல்லி மிரட்டினான். ஒருகட்டத்தில் அவனது தொந்தரவுகளைச் சமாளிக்க முடியாமலும், இனி அவன் நம்மை நிம்மதியாக இருக்கவிட மாட்டான் என்றும் மனமுடைந்த அந்தப் பெண், ‘என் சாவுக்கு இவன்தான் காரணம்’ என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு, மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக்கொண்டார். தனது மரண வாக்குமூலத்திலும், ‘அவன் செய்த கொடுமைகளால்தான் நான் இந்த முடிவெடுத்தேன்’ என்று பதிவுசெய்துவிட்டு இறந்துபோனார் பரிதாபமாக. அவருக்கு மரணம், அவனுக்குச் சிறைத்தண்டனை என்று அவர்கள் வாழ்வு அலங்கோலமானது.
கீழமை நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்டவனைக் குற்றமற்றவன் என்று விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை ஏற்க விரும்பாத அரசுத் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 306-ன் கீழ் தற்கொலைக்குத் தூண்டிய காரணத்துக்காக அவனுக்கு ஏழு வருட சிறை தண்டனையையும் 10,000 ரூபாய் அபராதத்தையும் உயர் நீதிமன்றம் விதித்தது. குற்றவாளியின் தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
‘இந்திய அரசியலமைப்புச் சாசனம் 14-ன்படி பெண்ணுக்குச் சம உரிமை உள்ளது. அவள் தான் விரும்பியபடி வாழ, வேலைக்குச் செல்ல, காதலிக்க, காதலை நிராகரிக்க என்று இவையெல்லாம் அவளுடைய அடிப்படை உரிமைகள் ஆகின்றன. அப்படி அவள் ஒரு காதலை நிராகரிக்கும்போது, அதையும் மீறிக் காதலிக்க வேண்டும் என்று அவளை யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது. இந்த நாகரிக சமுதாயத்தில் ஆணாதிக்கத்துக்கு இடமில்லை’ என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. உயர் நீதிமன்றம் அளித்த ஏழு வருட சிறை தண்டனையையும் உறுதிசெய்தது. இந்தத் தீர்ப்பு, காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணுக்குத் தொல்லைகொடுக்கும், துன்புறுத்தும் ஆண், குற்றவாளியே என்று அறிவுறுத்துகிறது.
18 வயது ஆகிவிட்டால், அந்தப் பெண்ணின் முடிவு சரியாக இருக்குமா?
காதல் திருமணம் முடிக்க, 18 வயது பூர்த்தியாகிவிட்டால் போதும் என்று அதை ஓர் ஆயுதமாகப் பெற்றோர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றனர் இன்றைய இளம் தலைமுறையினர். அதற்காகவே 18 வயது தொடங்கும்வரை காத்திருந்து வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்துகொள்கிறார்கள். காவல் நிலையங்களும் நீதிமன்றங்களும் ‘மேஜரானவர்கள் அவர்களின் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ள சட்டம் அனுமதி அளிக்கிறது’ என்கின்றன. உருப்படியான படிப்பு இல்லாதவன், வேலையில்லாதவன் என இப்படி ஒருவனை நம்பிச்சென்றுவிடும் தங்கள் மகளை மீட்க, பெற்றோர்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனர். ‘18 வயது’ சட்டக் காரணத்தை முன்வைத்து பெற்றோர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. செய்வதறியாது அழுதுகொண்டே செல்லும் பெற்றோர்களை உயர் நீதிமன்ற வளாகங்களில் காணமுடியும். நாடெங்கிலும் இதுதான் நிலை.
`ஆசை அறுபது நாள்’ என்ற பழமொழியைப்போல, மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அந்த ஜோடிக்கு இடையே பிணைப்பு விட்டுப்போய் பிரச்னைகள் ஆரம்பமாக, பெண்ணைக் கைவிட்டுச் செல்லும் ஆண்கள்தான் இங்கு அதிகம். அந்த நிலையில் பெற்றோர்கள்தாம் மகளை அரவணைக்கின்றனர். அவளுக்கு இன்னொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கின்றனர் அல்லது பாதுகாப்பாக இருக்கின்றனர். இந்த நிலையில், கர்நாடக நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெற்றோரின் நிலையில் இருந்து யோசித்து வழங்கிய தீர்ப்பு ஒன்று முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ‘சட்டப்படி உங்களுக்குத் திருமண வயதாகி இருந்தாலும், சட்டப்படி நீங்கள் திருமணம் செய்திருந்தாலும், நீங்கள் இருவரும் செய்துகொண்ட திருமணம் செல்லாது’ என்ற தீர்ப்பு, நீதித்துறை வரலாற்றில் அபூர்வமானது. இதை முன்னுதாரணமாகக் கொண்டு, வழிதவறிச் செல்லும் மகள்களைப் பெற்றோர்கள் மீட்க, இந்தத் தீர்ப்பு கைகொடுக்கும். அந்த வழக்கின் விவரத்தைப் பார்ப்போம்.
கர்நாடகத்தில் இளைஞர் ஒருவர், தன் காதல் மனைவியின் பெற்றோர் அவரைத் தன்னிடமிருந்து பிரித்து வைத்திருப்பதாகவும், அவரைக் கண்டுபிடித்துத் தரும்படியும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் அவருக்கு எதிரான தீர்ப்பையே வழங்கினர். வழக்கின் விவரம் இதுதான். கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துவந்த அந்தப் பெண், 2011 பிப்ரவரி மாதம் தன் காதலனுடன் பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரிக்கு வந்துவிட்டார். மார்ச் மாதம் அவருக்குப் பிறந்தநாள், அன்றோடு அவருக்கு 18 வயது பூர்த்தியாகிவிடும் என்பதால், இருவரும் ஒரு மாதத்துக்குப் பின்னர், பிறந்தநாள் முடிந்தவுடன் திருமணம் செய்துகொண்டனர். பெண்ணின் பெற்றோர், அந்த இளைஞன்மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். இவர்களைக் கண்டுபிடித்த காவல்துறை, ‘திருமணமான பெண்ணை அவருடைய கணவர் தினமும் இரண்டுமுறை பார்க்க அனுமதிக்க வேண்டும்’ என நிபந்தனை விதித்தது. இதற்குப் பெற்றோர் சம்மதிக்கவில்லை.
நீதிமன்ற விசாரணையில், நீதிபதிகள் பெற்றோரின் தரப்பு நியாயத்தையே வலியுறுத்தினர். `ஒரு பெற்றோர் தன் குழந்தையைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பது சட்டத்துக்குப் புறம்பானது ஆகாது. இந்து திருமணச் சட்டம் காதலைப் பற்றிச் சொல்லவில்லை. (இளைஞனிடம்) நீ காதலிக்கிறாய் என்றால் காத்திரு. காதலியை அழைத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு ஏன் ஓடினாய்? சுனாமியைக் காண்பதற்கா?’ என்று கடிந்துகொண்ட நீதிமன்றம், ‘பெண்ணுக்கு
18 வயது பூர்த்தியாகிவிட்டது என்பதாலேயே தன் வாழ்க்கை பற்றிய பெரிய முடிவைத் தனித்து எடுக்கும் பக்குவம் வந்துவிடுவதில்லை. 21 வயது நிரம்பாத பெண்ணாக இருந்தால், அவளது திருமணத்துக்குப் பெற்றோரின் சம்மதம் முக்கியம். ஏனென்றால், அவள் பாதிக்கப்பட்டு நிற்கும்போது அவளைப் பாதுகாப்பவர்கள் பெற்றோர்தான். எனவே, இந்தத் திருமணம் செல்லாது’ என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் பக்தவத்சலம் மற்றும் கோவிந்தராஜு தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பு, வரலாற்றுச் சிறப்புமிக்கது. 18 வயது ஆகிவிட்டது என்பதாலேயே சிறுமிகள் எடுக்கும் தவறான முடிவுகளிலிருந்து அவர்களை மீட்டுப் பெற்றோரிடம் அளிக்க, நீதித்துறைக்கு வழிகாட்டியாக அமைந்த தீர்ப்பு இது. மேலும், அந்த இளைஞனுக்குப் 10,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், இது தொடர்பாக, சட்ட நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது.
காதல் என்பது உலகின் சிறந்த உணர்வு. ஆனால், காதல் என்ற பெயரிலான வன்முறைகளையும் ஏமாற்று வேலைகளையும் பொறுத்துக்கொள்ளக் கூடாது.
- ஓவியம் : கோ.ராமமூர்த்தி
இது காதலா?
காதல் என்ற பெயரில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் நம்மைப் பதைபதைக்க வைக்கின்றன. சில சமீபத்திய சம்பவங்கள்...
• டெல்லியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணை, தனது சகோதரன் மற்றும் நண்பனுடன் சேர்ந்து கடத்திச் சென்று கரவரா கிராமத்தில் கொலை செய்து புதைத்துள்ளான்.
• ஆந்திராவின் கர்னூல் என்ற ஊரில், பள்ளியில் பணியாற்றிய இந்தி ஆசிரியர் ஒன்பதாம் வகுப்பு மாணவியைக் காதலிப்பதாகத் தொந்தரவு செய்துள்ளான். மாணவி, இதைத் தன் பெற்றோரிடம் சொல்லி ஆசிரியரைக் கண்டித்துள்ளார். ஆனால், மாணவியை விடாமல் தொந்தரவு செய்த ஆசிரியர், அவளது வீட்டுக்கே சென்று அவளுடன் சண்டை போட்டு, சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை வெட்டியதுடன், தனது கழுத்தையும் வெட்டிக்கொண்டான். மாணவி காப்பாற்றப்பட்டுவிட்டார்; குற்றவாளி சிகிச்சையில் இருக்கிறான்.
• தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் வள்ளியூரில், மெர்சி என்ற இளம்பெண்ணைத் தன் காதலை ஏற்க மறுத்ததால் ரவீந்திரன் என்ற பொறியியல் பட்டதாரி குத்திக் கொலை செய்த சம்பவம் மனம் பதைபதைக்கச் செய்கிறது.