
அப்போலோ... அப்பப்பா கணக்கு!
அப்போலோவில் 75 நாள்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்றதற்கான செலவுப் பட்டியல் ரிலீஸ் ஆகியிருக்கிறது. கன்சல்டேஷன், டாக்டர் ரிச்சர்டு பியெல், சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவர்கள் எனத் தனித் தனியாகக் கட்டண விவரங்களை அதில் தொகுத்திருக்கிறார்கள். மொத்தம் செலவான 6.85 கோடி ரூபாயில் உணவுச் செலவு மட்டும் 1.17 கோடி ரூபாய். அப்போலோ மருத்துவமனைச் செலவை அ.தி.மு.க. தலைமை செலுத்தியிருக்கிறது. இதில் 44.56 லட்சம் ரூபாய் பாக்கி வேறு. இவை வெளிவந்த நம்பர்கள்தான்.

வெளிவராத எண்கள் நிறைய உண்டு...
41,13,304
2016 அக்டோபர் 13-ம் தேதி, முதல் தவணையாக அப்போலோவுக்குத் தரப்பட்ட தொகை. அரசியல் கட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவுக் கணக்கு விவரங்களை ஆண்டுதோறும் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். 2016-2017-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் இந்தத் தொகை ஏனோ குறிப்பிடப்படவில்லை!
6 கோடி
இரண்டாவது தவணையாக இந்தத் தொகையை அப்போலோ நிர்வாகத்துக்கு 2017 ஜூன் 15-ம் தேதி அ.தி.மு.க. செக் மூலம் அளித்திருக்கிறது. இந்தத் தொகையும் 2017-2018 ஆண்டறிக்கையில் இடம்பெறவில்லை. ஜெயலலிதாவின் மருத்துவச் செலவு விவரங்களை ஏன் தெரிவிக்கவில்லை எனத் தெரியவில்லை!
35,40,000
ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 2017-18 மற்றும் 2018-19 ஆகிய இரண்டு வருடங்களில் வழங்கப்பட்ட அடிப்படைச் சம்பளம் இது.
26,85,000
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு இரண்டு வருடங்களில் வழங்கப்பட்ட அகவிலைப்படிக்கான தொகை.

26,89,000
2017-18-ம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை போதாத நிலையில் கூடுதல் நிதியாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட தொகை.
1,04,33,000
ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை தொடங்கிய காலத்திலிருந்து 2019 மார்ச் வரையில் ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகை.
55
அப்போலோ மருத்துவமனையின் சிந்தூரி பிளாக்கில் உள்ள le bistra ஏசி ரெஸ்டாரென்ட்டில் மூன்று இட்லி கொண்ட ஒரு பிளேட்டின் விலை.
1,17,04,925
அப்போலோ அளித்த செலவுக் கணக்கில் உணவுக்கு ஆன செலவு இது. ஜெயலலிதா பாதி நாள்கள் ஐ.சி.யூ-வில் இருந்த நிலையில் இந்த அளவுக்கா அவர் சாப்பிட்டிருப்பார் என சந்தேகம் எழுகிறது. அப்போலோவில் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அளித்த போலீஸ்காரர்கள், தலைமைச் செயலக அதிகாரிகள், வி.ஐ.பி-கள், அவர்களின் எஸ்கார்டுகள் என அனைவருக்குமான உணவுச் செலவும் இதில் அடக்கம். காவல்துறைக்கு அரசின் உணவுப்படி உண்டு. அது எந்தக் கணக்கில் வரும் எனத் தெரியவில்லை. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நேரத்தில் சில நாள்கள் மீடியாவினருக்கு அமைச்சர் ஒருவர் உணவு வழங்கியிருக்கிறார். அதற்காக ஒரு தொகையை அரசின் செய்தித் துறையிடம் வழங்கினாராம். அப்போலோ உணவு வழங்கிய விவரம் தெரிந்து நொந்து போனார் அந்த அமைச்சர். அந்தப் பணத்தை ஆட்டையைப் போட்டவர்கள் யார் என இப்போது விசாரணை நடக்கிறது.
-எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி