
மதிவண்ணன் எழுத்தாளர்
2018-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப் பற்றி, பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...
பக்தி இயக்கம் தமிழக அரசர்களின் ஆதரவைப் பெற்ற காலத்திலிருந்து சாதி சார்ந்த மதிப்பீடுகள், கற்பிதங்கள் ஆகியன மக்களிடம் நிலைபெறத் தொடங்கின. அன்றிலிருந்து மதம் சார்ந்த புனிதக் கடமைகளுள் ஒன்றாகவே திருமணம் என்பது தமிழ் மக்களுக்கு ஆகிவிட்டது. சாதி ஆணவக்கொலைகள் இத்தகைய நம்பிக்கைகளின் துணையுடனேயே நடக்கின்றன எனலாம். இடைக்காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சாதி ஆணவக்கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவ்வாறு கொலையுண்டவர் கள் சிறுதெய்வங்களாக வழிபடப்பட்டு வருகின்றனர். சமூகத்தின் குற்றவுணர்வாலும், அச்சவுணர்வாலும் அதன் நடைமுறை வாழ்க்கையில் ஒருபகுதியாய் இச்சிறு தெய்வங்கள் உள்ளதை இன்றும் காணலாம்.

சாதியச் சமூகத்தின் பகுதிகளான உள்ளூர் சாதிப் பஞ்சாயத்து, உறவினர்கள் ஆகியவர்களின் தலையீட்டின் காரணமாக இவ்வளவு காலம் சாதி ஆணவக்கொலைகள் நடந்துவந்தன. தற்காலத்தில், குறிப்பாக, கடந்த ஆறேழு ஆண்டுகளாகக் குறிப்பிட்ட பகுதி சார்ந்த சாதிய அலகுகள் தலையிடுவது என்ற நிலை மாறி, இச்சாதிய அலகுகளின் மையப்படுத்தப்பட்ட அமைப்பாக உள்ள, சாதி அமைப்புகளாய் இருந்து அரசியல் கட்சிகளாக மாறிய கட்சிகள் இப்பிரச்னையைத் தமது கைகளில் எடுத்துக் கொண்டுள்ளன. இதன் விளைவாக சாதி ஆணவக்கொலைகள் ஒரு புதிய பரிமாணத்தையும், பரவலான விரிந்த வலைப் பின்னலையும் பெற்று வலுவடைந்துள்ளன.

இதன் தொடர்ச்சியை இந்த ஆண்டும் சூடுகொண்டபள்ளி நந்தீஷ்- ஸ்வாதி கொலையில் நாம் கண்டோம். நெல்லை அம்பாசமுத்திரம் அருகே வெள்ளாங்குழியில் இசக்கி சங்கர்-சத்தியபாமா கொலையில் சத்தியபாமாவின் தம்பியான சிறுவன் தன் வயதையொத்த நண்பர் களுடன் இணைந்து இக்கொலையில் ஈடுபட்டது இப்பிரச்னையின் தீவிரத்தைக் காட்டுகிறது.
சாதி ஆணவக் கொலைகள் என்பவை ஆதிக்கச்சாதிகளால் மட்டுமே நிகழ்த்தப்படுபவை என்று இனியும் கருத முடியாது. விழுப்புரம் மாவட்டத்தில் கரடிச்சித்தூரில் பட்டியல் சாதிகளுக்குள்ளேயே சாதி மீறித் திருமணம் செய்துகொண்ட அருந்ததிய இளைஞனின் சகோதரியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த நிகழ்வு (2002), பள்ளிநேலியனூரில் கார்த்திகேயன் என்ற அருந்ததிய இளைஞனைத் திருமணம் செய்து கொண்ட கோகிலா என்ற பறையர் சாதிப் பெண் பெற்றோர், உறவினரால் சாதி ஆணவக்கொலை செய்யப்பட்ட நிகழ்வு (2012) ஆகியன இப்பிரச்னையின் தீவிரம் பட்டியல் சாதிகளுக்குள்ளும் ஆழமாக ஊடுருவியிருப்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்த ஆண்டில் (2018) அரும்பட்டில் அருந்ததியர்மீது நடந்த தாக்குதல்களும் இதே நோக்கத்தில் அதே சாதியினரால் நிகழ்த்தப்பட்டதே.

அதேபோல இந்த ஆண்டில் சந்தையூரில் தீண்டாமைச் சுவர் தொடர்பாக இவ்விரு சாதியினரிடையே மிக நீண்ட நாள்களுக்கு நடந்த போராட்டமும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. பட்டியல் சாதி மக்கள் மட்டுமல்ல, இயக்கங்களும் கட்சிகளுமே இரு பிரிவுகளாய்ப் பொருதிக்கொண்டனர். ஒருவழியாய் அப்பிரச்னை தீர்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் பழனிமுருகன் என்ற அருந்ததியர் தன் உயிரை விலையாய்த் தர வேண்டியிருந்தது. இந்த ஆண்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தபோது பறையர் சாதியைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான இளைஞர்கள், ஒடுக்கப்படுகிற அருந்ததியர் பக்கம் ஜனநாயக ரீதியாகத் திரண்டு நின்றது முக்கியமானது; நம்பிக்கை அளிக்கக் கூடியது.
வருகின்ற ஆண்டுகளிலும் நாம் மேலே கூறியது போன்ற பிரச்னைகளை நாம் எதிர்கொள்ளப் போகிறோம். வெறுமனே ஜனநாயகச் சமூகத்தின் விழுமியங்களை நினைவூட்டுவதன் மூலமும், பரப்புரை செய்வதன் மூலமும் நாம் இவற்றை எதிர்கொண்டுவிட முடியாது. இப்பிரச்னைகளின் வேர், மதத்தில் ஆழமாக ஊன்றியுள்ளது. அவற்றைக் கெல்லி எறியாமல் மேலோட்டமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் ஒரு பயனும் விளையாது.