2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

2018 டாப் 10 பிரச்னைகள் - #METOO- முதல் முழுக்கம்

2018 டாப் 10 பிரச்னைகள் - #METOO- முதல் முழுக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
2018 டாப் 10 பிரச்னைகள் - #METOO- முதல் முழுக்கம்

அ.வெண்ணிலா எழுத்தாளர்

2018-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப் பற்றி, பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

ரசியல் பரபரப்புகளைப் புறந்தள்ளி 2018-ஆம் ஆண்டில் #மீடூ இயக்கம் இந்தியாவெங்கும் பரபரப்பை உண்டாக்கியது. அமெரிக்காவின் சமூக ஆர்வலர் தரனா புர்கே பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை வெளிக்கொணர 2006-ஆம் ஆண்டு மீ டூ இயக்கத்தை சமூக ஊடகங்களில் வெளிக்கொணர்ந்தாலும், 2017-இல் ஹாலிவுட் நடிகை அலிசா மிலனோ தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளைப் பற்றி ட்வீட் செய்த பிறகே, மீ டூ பற்றித் தெரிய வந்தது. அரசியல், விளையாட்டு, திரைத்துறை, பத்திரிகை, தொழில் துறையின் பல்வேறு பிரபலங்களைப் பற்றிய குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வந்ததைப் பார்த்து, எல்லோரும் அதிர்ந்துபோனது உண்மையே.

2018 டாப் 10 பிரச்னைகள் - #METOO- முதல் முழுக்கம்

மீ டூ, மத்திய அமைச்சர் ஒருவரைப் பதவி விலக வைத்தது. பல தலைவர்களை மன்னிப்புக் கோர வைத்தது. பதில் சொல்ல வார்த்தைகளற்று ஊடகங்களின் முன்னால் சிலரை அசடு வழிய வைத்தது. நிரபராதிகளாகக் காட்ட மனைவி யுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்கள் பலர். எப்பொழுதும் ஊடக வெளிச்சத்தில் இருக்க நினைத்தவர்கள், கேமரா வளையத்திற்குள் அகப்படாமல் தலைமறைவானார்கள். 

2018 டாப் 10 பிரச்னைகள் - #METOO- முதல் முழுக்கம்

பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் தங்களின் முகத்தை மறைத்துக்கொண்டும், பெற்றோர்களும் உறவினர்களும் பெண்ணின் வாழ்க்கையே பறிபோன அவமானத்திலும் நிற்கும் காட்சிகளைத்தான் வழக்கமாகப் பார்ப்போம். மீ டூ-வில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகளை வெளிப்படுத்திய பெண்கள் துணிவாக, தங்களின் சுய அடையாளங்களோடு பேசினார்கள். தப்பு தன்னுடையதுதானோ என்ற குற்றவுணர்ச்சி இல்லா முகங்களுடன், தடுமாற்றமில்லா வார்த்தைகளுடன் பொதுவெளிக்கு வந்தார்கள்.

பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண் தனக்கு நேர்ந்த வன்முறையை வெளியில் சொல்ல மாட்டாள், சொல்ல முடியாது என்ற நம்பிக்கையில்தான் ஆண்கள் துணிச்சலாகப் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவார்கள். பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையம் சென்றாலும், ஊர்ப் பஞ்சாயத்தாரர்களிடம் சென்றாலும் விஷயம் வெளியில் வராமல் செய்துவிடுவார்கள். ஊரின் செல்வாக்குமிக்க அரசியல் தலைவர், சாதியத் தலைவர், எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர், காவல் நிலைய அதிகாரி... யாரோ ஒருவரின் ஒரு சொல், பாதிக்கப்பட்ட பெண்ணின் எல்லா நியாயத்தையும் பின்னுக்குத் தள்ளி அவளையே குற்றவாளியாக்கி அவமானப்பட வைத்துவிடும். சட்டம், அரசு, அதிகாரம் எல்லாம் பெரும்பாலும் இவ்விஷயத்தில் ஆணின் மனநிலையுடன்தான் செயல்படும். 

2018 டாப் 10 பிரச்னைகள் - #METOO- முதல் முழுக்கம்

‘மீ டூ’ ஆண்களின் இந்த அதிகார பலத்தைத் தகர்த்திருக்கிறது. இணைய வெளியில் பகிரப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் குரல் சில மணிநேரத்தில், சில நாள்களில் சமூகத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் சென்றடைய வைத்தது. பாதிப்பின்மேல் கவனத்தைக் கோரியது. ஆதரவுக்குரல்களைத் திரட்டியது. ஊடகங்களில் பரபரப்பை உண்டாக்கியது.

மீ டூ, சட்டங்களால் உண்டாக்க முடியாத அச்சத்தை ஆண்கள் மத்தியில் உண்டாக்கியிருக்கிறது. தவறுசெய்யும் ஆண்களின் முகத்தை அம்பலப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கொடுத்திருக்கிறது.

பிரபலமானவர்கள் பற்றி, பிரபலமான பெண்கள் கூறும் பாலியல் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தும் களமாகத்தான் மீ டூ அறிமுகமாகியிருக்கிறது. ஊடகப் பரபரப்புக்கும் பிரபலம் என்ற பின்னணி தேவைப்படுகிறது. பரபரப்புகளைக் கடந்து, பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்புப் பெண்களும் பேசும் வலிமையான களமாக, பெண்கள்மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான எதிர்ப்பியக்கமாக மீ டு மாற வேண்டும். பெண்கள் வெறும் பரபரப்புக்காக, சொந்த லாபங்களுக்காக, ஆண்களைப் பழிவாங்கப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்புணர்வும் பெண்களுக்கு இருக்கிறது.