
மனுஷ்ய புத்திரன் கவிஞர்
2018-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப் பற்றி, பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...
வெறுப்பின், வன்முறையின் முதன்மை யான கருவியாக வதந்திகள் மாறிய ஆண்டு 2018. தனிமனிதர்கள்மீதான வன்முறைகள், சமூகங்களுக்கு இடையிலான மோதல்கள், சாதிக்கலவரங்கள், மதக்கலவரங்கள் என வதந்திகள் மூட்டிய நெருப்பு, ஆண்டுமுழுக்கப் பற்றியெரிந்தது.

தலைவர்களின் உடல்நலம் குறித்த வதந்திகள், அன்னியர்கள் குறித்த வதந்திகள், சூனியக்காரிகள், பிள்ளை பிடிப்பவர்கள், அயல்கிரகவாசிகள், பறக்கும் தட்டுகள், இயற்கைப் பேரிடர்கள் என வதந்திகள் வாழுமிடங்களுக்கு எல்லையே இல்லை. இன்று நவீன அறிவியல் - மருத்துவத் திற்கு எதிராகவும்கூட வதந்திகள் பரவுகின்றன. இத்தகைய வதந்திகளை நொடிப்பொழுதில் கோடிப்பேரிடம் கொண்டுசேர்க்கிற சமூக வலைதளங்கள் வதந்திகளின் மாபெரும் உற்பத்திக்கூடமாகிவிட்டன. ஒரு போலி வீடியோவோ புகைப்படமோகூட பெரும் சமூகப் பதற்றங்களை உண்டாக்கப் போதுமாக இருந்தது.
வதந்திகளைக்கண்டு அரசு ஏன் அஞ்சுகிறது? ஜெயலலிதா மருத்துவமனையிலிருந்தபோது கட்டுக்கடங்காமல் பெருகிய வதந்திக்கு எதிராக காவல்துறை கடும் நடவடிக்கையில் இறங்கியது. சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாகச் சிலர் கைது செய்யப்பட்டார்கள். அரசு எதையோ மறைக்கிறது என்று அப்போது வதந்திகள் மேலும் உக்கிரம் பெற்றன. வெளிப்படையற்ற தன்மை எங்கு இருக்கிறதோ அங்கு வதந்திகள் உற்பத்தியாகின்றன.

வதந்திகளுக்கு முக்கியமான காரணம் அச்சம். குழந்தைகளைக் கடத்துபவர்கள் என்று நாடு முழுக்க பலர் தாக்கப்பட்டதன் காரணம் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து நிலவும் பெரும் அச்சம். ஏராளமான குழந்தைகள் காணாமல்போகிறார்கள். அவர்கள் கண்டுபிடிக்கப்படுவது அரிதாக உள்ளது. மக்களின் கோபம் சந்தேகத்திற்குரியவர்களாகத் தென்படும் அப்பாவிகள்மீதும் மனநலம் அற்றவர்கள்மீதும் பாய்கிறது. பிற சமூகங்களின் மீதான காழ்ப்பும் சந்தேகமும் வதந்திகளிலிருந்து பிறக்கும் வன்முறைக்கு வெகு எளிதில் இட்டுச் செல்கின்றன. ஒரு பெரும் கலவரத்தைத் தூண்ட வழிபாட்டுத்தலத்தில் வீசப்படும் ஒரு துண்டு மாமிசம் போதும்; ஒரு பெண் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாகப் பரவும் ஒரு செய்தி போதும். பிறசமூகங்கள் தொடர்பாகத் தொடர்ந்து கட்டமைக்கப்படும் எதிர்மறை பிம்பங்கள் ஒரு வதந்தியின் உண்மைத்தன்மையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. கற்பிதங்களும் கற்பனை களும் மட்டுமே எதிர்வினையாற்றப் போதுமானதாக உள்ளன.
வடமாநிலத் தொழிலாளிகள் தாங்கள் தாக்கப்படக்கூடும் என்று பரவிய வதந்தியின் அடிப்படையில் கூட்டம் கூட்டமாக வெளியேறிய காட்சியை நாம் எப்படி மறக்க முடியும்? அன்று பெங்களூரு ரயில்நிலையம் ஒரு போர்முனை நகரம்போல தப்பியோடிக்கொண்டிருந்த வட மாநிலத் தொழிலாளிகளால் நிரம்பி வழிந்தது. அந்த வதந்தியை யார் பரப்பினார்கள் என்று கண்டறியப்படவில்லை. புலம்பெயர்ந்து வரும் பிற மாநிலத்தவர்கள்மீது உள்ளூர்வாசிகள் வெளிப்படுத்தும் வெறுப்பும் சந்தேகமும் அதன் விளைவாக உருவாகும் பாதுகாப்பின்மைகளும் அவர்களை எப்போதும் எரிமலையின் விளிம்பிலேயே வைத்திருக்கின்றன.

நம்மில் பெரும்பாலானோர் ஆழ்மனதில் வதந்திகளை விரும்புகிறோம் என்பதுதான் இதில் கவனிக்கவேண்டிய உளவியல் உண்மை. அலுப்பூட்டும் நம் எந்திரமயமான வாழ்வில் வதந்திகள் திடீரென ஒரு சலனத்தை உண்டாக்குகின்றன. நம் இயல்புநிலையின் அச்சிலிருந்து விலகி நம்மை ஒரு பதற்றத்தை நோக்கிச் செலுத்துகின்றன. அந்தப் பதற்றத்தில் ஒரு கும்பல் மனோபாவம் உருவாகிறது. அந்தக் கும்பல் மனோபாவம் அந்தக் கூட்டத்துக்கு ஓர் அடையாளத்தையும் செயலூக்கத்தையும் வழங்குகிறது. வதந்திகள் குற்றமனப்பான்மை கட்டவிழ்வதற்கு தம்மளவில் ஒரு நியாயத்தை வழங்குகின்றன.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
என்று அய்யன் திருவள்ளுவரையும் அறிவுறுத்தச் செய்த வதந்தி எதுவாக இருக்கும்?