
சுட்டி ஸ்டார் நியூஸ்!

கடலுக்கு அடியில் அதிவேக ரயில்!
சீனாவில் உள்ள ஜேஜியாங் மாகாணத்தில் முதன்முறையாகக் கடலுக்கு அடியில் 16.2 கி.மீ தூரத்துக்கு அதிவேக ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜேஜியாங் மாகாணத்தின் நிங்போ - சவுஷேன் என்ற பகுதிக்கிடையே 70 கி.மீ தூரத்துக்கு இயக்கப்படும் இதில், 16.2 கிமீ தூரம் கடலுக்கு அடியில் மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லும். இதன்மூலம், வழக்கமான பயண நேரத்தைவிட ஒன்றரை மணி நேரம் மிச்சமாகும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.


பெரிய முயல்!
முயல் வகையிலேயே மிகப்பெரியது, துருக்கியில் காணப்படும் அங்கோரா. சுமார் 5 கிலோ எடை இருக்கும். இதில், 11 வகையான இனங்கள் உள்ளன. பஞ்சு போன்ற இவற்றின் முடி 3 சென்டிமீட்டர் வளரும். இந்த முடியில், கம்பளி செய்வார்கள். இந்தக் கம்பளிக்கு பெரும் வரவேற்பு உண்டு.


அண்ணல் அம்பேத்கர் வகித்த உயர் பதவிகள்!
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கர், பல உயர் பதவிகளை வகித்துள்ளார். அவற்றில் சில...
*மேலவை உறுப்பினர் - பம்பாய் மாகாணம் - 1926
*சைமன் குழு உறுப்பினர் - 1928
*அரசியலமைப்புக் குழு உறுப்பினர் - 1932
*சட்டக் கல்லூரி முதல்வர் - பம்பாய் மாகாணம் - 1935
*சட்டசபை உறுப்பினர் - பம்பாய் மாகாணம் - 1937
*தொழிலாளர் அமைச்சர் - வைஸ்ராயின் நிர்வாகக் குழு - 1942
*உறுப்பினர், அரசியலைப்பு சபை - 1946
*சட்ட அமைச்சர் - 1947
*ராஜ்யசபா உறுப்பினர் - 1952


இமயமலையில் சிப்பி!
இமயமலையின் சிகரங்களில் கடற்சிப்பிகள் கிடைத்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி, பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘அவ்வளவு உயரமான மலைப்பகுதியில் கடற்சிப்பி எப்படி வரும்?’ என்ற கேள்வி எழுகிறதல்லவா? பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கடல் பகுதியாக இருந்த இடம் இது. 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் நிலப்பரப்பைத் தாங்கியிருக்கும் பூமித் தகடுகள், வடக்கு ஆசியாவை நோக்கி நகர்ந்தன. இதன் காரணமாக, கடலில் மூழ்கியிருந்த இமயமலைப் பகுதி உயர்ந்தது. அப்படி உருவான கடற்சிப்பிகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்களே இவை.
