
கமகம ஆபத்து!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
வாசனை என்கிற நறுமணம் விஷயத்தில் ஆதிகாலம் முதலே மனிதனுக்கு ஆர்வம் இருந்துச்சு. காட்டில் கிடைக்கும் பூக்களைச் சூடிக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம், அறிவு வளர வளர வாசனைத் தைலங்கள், சந்தனம் எனத் தயாரித்துப் பயன்படுத்தினாங்க.

இதில், இயற்கைப் பொருள்கள் அதிகமாகவும், ரசாயனங்கள் குறைவாகவும் இருந்துச்சு. ஆனால், நாகரிகம் வளர வளர செயற்கையான வாசனையைக் கொடுக்கும் பர்ஃப்யூம், பாடி ஸ்பிரேயை அதிகம் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு விசேஷத்துக்குப் போகணும்ன்னா வீட்டில் இருக்கும் எல்லோருமே விதவிதமான பர்ஃப்யூம்களை அடிச்சுக்கறாங்க. மழையால் வரும் மண்வாசனை, விதவிதமான பூக்கள் வாசனைகளில் எல்லாம் பர்ஃப்யூம்கள் கிடைக்குது. ஆனால், இந்தச் செயற்கை நறுமணங்கள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் நிறைய. அதைப் பற்றிச் சொல்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் த.முஹம்மது கிஸார்.
*வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்தும் ரசாயன மூலப்பொருள்களில் இருக்கும் பாராபென்ஸ் (Parabens), டிரைகுளோசன் (Triclosan), செயற்கை நிறமூட்டிகளால்தான் அதிகமான பாதிப்புகள் வருவதாக மருத்துவர்கள் சொல்றாங்க. இவை, மரபுரீதியாகவும் உடல்ரீதியாகவும் சென்சிடிவ் பிரச்னைகள் இருக்கும் குழந்தைகளுக்கு கடுமையான அலர்ஜி பிரச்னைகளை உருவாக்கும்.
* சென்சிட்டிவ் பிரச்னைகள் இருக்கிறவங்க, வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதால் அரிப்பு உண்டாகி, தோல் சிவப்பு நிறத்துக்கு மாறிடும். இதைக் கவனிக்காமல் தொடர்ந்து பர்ஃப்யூம் பயன்படுத்தினால், ஆங்காங்கே வீக்கம் உண்டாகும்.

* வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்தும் இடத்தில் மட்டும்தான் பிரச்னைகள் வரும்னு கிடையாது. மற்ற இடங்களிலும் வரும். அது ஒவ்வொருவரின் உடல்தன்மையைப் பொறுத்து பாதிப்பை ஏற்படுத்தும்.
* பர்ஃப்யூம் அடிச்சுக்கும்போது, அதில் சேர்க்கப்பட்டிருக்கும் ரசாயனங்கள், கண்களில் படுவதால், கண் எரிச்சல் ஏற்படும். கண் விழி சிவந்து நீர் வழியும். கண்களில் இருக்கும் வெண்படலம் சிவந்துடும். கருவிழியும் பாதிக்கலாம். கவனிக்காமல் விடும்போது, வெண்படலம் மற்றும் கருவிழி தடிக்கவும் வாய்ப்பு இருக்கு.
* ‘பர்ஃப்யூம் கண்களில் நேராகப் பட்டால்தானே பிரச்னை? நான் கேர்ஃபுல்லா பயன்படுத்துவேன்’ எனச் சொல்றீங்களா? நீங்க ஸ்பிரே பண்ணும்போது, அதன் ஆவி பட்டாலும் பாதிப்புகள் வரும்.
*சென்சிட்டிவ் பிரச்னைகள் இருக்கிறவங்களுக்கு மூக்கில் தண்ணீர் நிற்காமல் ஒழுகும். இதனால் ஏற்படும் சளி, மூக்கை அடைச்சுக்கும். மூக்கு சிவந்து தும்மல் வந்துட்டே இருக்கும். இது, தலைவலி போன்ற பிரச்னையை ஏற்படுத்தும்.

*பர்ஃப்யூமில் இருக்கும் ரசாயன மூலப்பொருள்களால், ஆஸ்துமா வரும் வாய்ப்பு இருக்கு. இதனால், மூச்சுக்குழாய் சுருங்கும். மூச்சுக்குழாயில் நீர் சுரத்தல், மூச்சுக்குழாயின் உள்சுவரில் வீக்கம் ஏற்படும். பிறகு, மூச்சுக்குழாயின் விட்டம் குறைஞ்சு, சுவாசிக்கிறதே சிரமமாக இருக்கும்.
* மூச்சுக்குழாய் பிரச்னை வரும்போது, நம் மேல் யாரோ ஏறி உட்கார்ந்து அழுத்தற மாதிரியே இருக்கும். மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அட்மிட் ஆகும் சூழல்கூட ஏற்படலாம்.
* பர்ஃப்யூம்களில் வாசனையை நீண்ட நேரம் நிறுத்திவைக்க பதலேட் (phthalate) என்கிற ரசாயனம் சேர்க்கப்படுது. இது ஒரு ஹார்மோன் மாதிரி செயல்படும் தன்மைகொண்டது. அதனால், நமக்கு ஹார்மோன் பிரச்னைகள் வரும்.
* பர்ஃப்யூம் மற்றும் பாடி ஸ்பிரேக்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு, வளர்ந்த பிறகு நீண்டகால நோயான `சிஓபிடி’ (COPD) என்கிற சுவாசக்குழாய் அடைப்பும் வரலாம்.
ஆக... இத்தனை பிரச்னைகளை உருவாக்கும் செயற்கை வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துறதை நிறுத்துவோம். அப்பா, அம்மாவிடமும் சொல்வோம். தினந்தோறும் குளிச்சு, உடம்பைத் தூய்மையாக வைத்துக்கொண்டாலே போதும். அதுவே, நமக்காக உழைக்கும் உடலுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவியா இருக்கும். செய்யலாமா சுட்டீஸ்!
சி.வெற்றிவேல்