
வித்தியாச பிசினஸ் - கார்ட்டூன் உருளை... கலக்குது விதுலா!
உருளைக்கிழங்கை வெச்சு என்னவெல்லாம் செய்யலாம்? பொரியல், சிப்ஸ், சிலர் கிராஃப்ட்... ஆனா, கார்ட்டூனா வரைஞ்சு, பிசினஸில் கலக்குறாங்க விதுலா.

‘பொட்டேட்டோ’ என்கிற கார்ட்டூன் புராடெக்ட் நிறுவனத்தைத் தொடங்கி, சிஇஓ-வாகச் செயல்பட்டுவருகிறார், சென்னையைச் சேர்ந்த, இந்த எட்டாம் வகுப்பு சுட்டி.
“எனக்கு கார்ட்டூன் வரையறதுன்னா ரொம்பப் பிடிக்கும்.‘டிராயிங் க்ளாஸ் போறியா?’ன்னு அப்பா கேட்டாங்க. ‘அங்கே போனால், எல்லோரும் வரையுறதைத்தான் நானும் வரையவேண்டி இருக்கும். ஆனால், நானே கற்பனை செஞ்சு வரைந்தால் யுனிக்கா இருக்கும்! ஸோ என்னோட கற்பனைத்திறனே எனக்கு டீச்சர்’ன்னு சொல்லிட்டேன். ஸ்கூல் முடிச்சு வந்ததும், ஹோம்வொர்க் முடிச்சுட்டு, விதவிதமாக கார்ட்டூன்ஸ் வரைந்து பழகுவேன்’’ என்றார் விதுலா.
விதுலாவின் அப்பா ரமேஷ், ‘‘இவள், மூணு வயதிலிருந்தே பள்ளியில் நடக்கும் ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு வாங்கிய பரிசுகள், அவளை அடுத்தகட்டத்துக்கு உற்சாகப்படுத்தியது. ஒருநாள் பள்ளி முடிந்து வந்ததும், ‘அப்பா, என் கார்ட்டூன்ஸை புரமோட் பண்ற வேலைகளைப் பார்க்கப்போறேன். இனி என் கார்ட்டூன்ஸ், தீம் அடிப்படையில் இருக்கும்’ என்றாள். ‘சரி, கொஞ்சம் டைம் கொடு. கான்செப்ட் யோசிக்கலாம்’ என்றதும், விதுலா சொன்ன பதில், ஆச்சர்யம்’’ என்றார்.

“அப்பா, அதை நானே சொல்றேன்’’ என ஆர்வத்துடன் தொடர்ந்தார் விதுலா.
“உருளைக்கிழங்குதான் (Potato) என் கார்ட்டூன் கான்செப்ட். எனக்கு உருளைக்கிழங்கு ரொம்பப் பிடிக்கும். அதன் வடிவத்தைவெச்சே, விதவிதமான கார்ட்டூன்ஸை வரையறதுதான் என் பிளான்.
‘உருளைக்கிழங்கில் எப்படி எல்லா உணர்வுகளையும் கொண்டுவர முடியும்? நானும் அம்மாவும் பேசிட்டிருக்கிற மாதிரி ஒரு கார்ட்டூன் வரைஞ்சு காட்டு’ன்னு சொன்னாங்க . மனித உடலமைப்புகொண்ட ரெண்டு உருளைக்கிழங்கு பேசறதை வரைந்து காண்பிச்சேன். ரசிச்சு சிரிச்சாங்க. ‘ஆஹா, வொர்க் அவுட் ஆகிடுச்சு’ன்னு, உருளைக்கிழங்கையே என் லோகோவா மாத்திட்டேன்’’ எனப் புன்னகைக்கிறார் விதுலா.

“அழுகை, கோபம், சிரிப்பு என்று எல்லா உணர்வுகளையும் உருளைக்கிழங்கை மையமாக்கியே வரைய ஆரம்பித்தாள். கிரீட்டிங் கார்டு, டி-ஷர்ட்டில் பிரின்ட் செய்து, நண்பர்கள், உறவினர்களுக்குப் பரிசு கொடுத்தாள். அனைவரும் ரசித்து பாராட்டியதுடன், ஆர்டர்களும் கொடுத்தார்கள். ‘இதையே பிசினஸா பண்ணட்டுமா?’ என்று கேட்டாள். படிப்பு பாதிக்கும் என்பதால் நாங்கள் வேண்டாம் என்றோம்’’ என அப்பா சீரியஸாகப் பேச, ஸ்மைலி எமோஜியாய் தொடர்ந்தார் விதுலா.
“பிசினஸ் வேண்டாம்னு அப்பா சொன்னாலும், அந்த ஆசையும் கனவும் என்னை விட்டுப்போகலை. விடுமுறை நாள்களில் செய்யறதா பர்மிஷன் வாங்கினேன். படிப்பிலும் மார்க் ஸ்கோர் பண்ணுவேன்னு கியாரன்டி கொடுத்தேன். அப்பாகிட்ட கொஞ்சம் பணம் வாங்கி, பிசினஸை ஆரம்பிச்சேன்.

டி-ஷர்ட் பெயின்ட்டிங், காபி கப் பெயின்ட்டிங், ஹேண்ட் பேக் பெயின்ட்டிங்னு ஆரம்பிச்சு, இப்போ டிஜிட்டல் பிரின்ட் வரை டெவலப் ஆகிட்டேன். முதலீடு, மார்க்கெட்டிங், லோன் என பிசினஸ் பற்றிய அடிப்படையான விஷயங்கள் தெரிஞ்சுக்க, குழந்தைகளுக்கான பிசினஸ் வகுப்புகளில் பயிற்சி எடுத்திருக்கேன். இந்த பிசினஸ் மூலம் கிடைக்கும் பணத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உதவுறேன். இன்னும் நிறைய குழந்தைகளின் படிப்புக்கு ஹெல்ப் பண்ணணும். அதுக்காக, பிசினஸை இன்னும் பொறுப்பா, சூப்பரா செய்யணும்!”
ஆர்வமும் அக்கறையும் நிறைந்த வார்த்தைகளில், கனவுகள் மிதக்கும் விழிகளுடன் சொல்கிறார் விதுலா.
வாழ்த்துகள் விதுலா!
சு.சூர்யா கோமதி - படங்கள்: பெ.ராக்கேஷ்