மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 43

சோறு முக்கியம் பாஸ்! - 43
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ்! - 43

சோறு முக்கியம் பாஸ்! - 43

சோறு முக்கியம் பாஸ்! - 43

ரு நல்ல உணவகத்தின் தன்மை என்பது, நல்ல பொருள்களை வாங்குவதில்தான் அடங்கியிருக்கிறது. நல்ல காய்கறியையோ, தரமான இறைச்சியையோ வாங்கிச் சமைத்தால் சாப்பாடு இயல்பாகவே நன்றாக இருக்கும். ஆனால், பல உணவகங்களுக்கு, வியாபாரிகளிடம் விற்காமல் மிஞ்சிய காய்கறிகள், இறைச்சிகள், மீன்கள்தாம் போய்ச் சேருகின்றன. விலை கொஞ்சம் முன்பின் இருப்பதால் சங்கட மில்லாமல் உணவகம் நடத்துபவர்கள் இதை வாங்கிக்கொள்கிறார்கள். இப்படிக் கழித்துக்கட்டிய இரண்டாம் தரப் பொருள்களை வாங்கி, அதை மேம்படுத்துவதற்காக நிறமிகளையும் ருசியூட்டிகளையும் கொட்டுகிறார்கள். 

சோறு முக்கியம் பாஸ்! - 43

காய்கறியோ இறைச்சியோ, இருப்பு வைக்காமல் அவ்வப்போது புதிதாக வாங்கி,  வழக்கமான நம் அஞ்சறைப் பெட்டி மசாலாவில் சமைத்தாலே வாசனையும் சுவையும் மனதை அள்ளும். எந்தச் சிறப்புச் சுவையூட்டிகளும் தேவையில்லை.செரிமானப் பிரச்னைகளும் வராது. இப்படி அக்கறையோடு நல்லுணவு தந்து வாடிக்கையாளர்கள்மீது அக்கறையாகச் செயல் படும் உணவகங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன.

அச்சிறுப்பாக்கம் லூப் சாலையில், காவல் நிலையத்துக்கு அருகில் இருக்கும் மன்னா மெஸ், இப்படியான ஒரு நல்லனுபவத்தைத் தருகிறது. 24 பேர் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கான எளிய டைனிங். ஆனால், அழகாக, விசாலமாக இருக்கிறது. பேராசிரியராகப் பணியாற்றிய ஜெயராஜ் அந்த வேலையை விட்டுவிட்டு இந்த உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார். கேட்டரிங் பட்டம் பெற்ற அவர் சகோதரர் ஜெயகுமார் தான் சமையலுக்குப் பொறுப்பு. ஒருவேளைச் சாப்பாடு தான். காலை 11.30க்குத் தொடங்கி 3.30-க்கெல்லாம் பாத்திரங்களைக் கழுவிவைத்துவிட்டுக் கிளம்பிவிடுகிறார்கள்.

தங்கள் உணவுக்கொள்கையைச் சுவரிலேயே பெரிய பேனராக்கி ஒட்டியிருக்கிறார்கள். பிராய்லர் கோழி, பிராய்லர் முட்டை பயன்படுத்து வதில்லை. நாட்டுக்கோழி, நாட்டுக்கோழி முட்டை மட்டுமே.  மைதா, நிறமிகள், சுவையூட்டி ரசாயனங்கள் சேர்ப்பதில்லை. மிளகாயைவிட மிளகுப் பயன்பாடே அதிகம். குழம்புகளுக்கு நல்லெண்ணெய், மீன் வறுவலுக்குத் தேங்காய் எண்ணெய், பிற பயன்பாட்டுக்கு ரீபைண்டு ஆயில்... சாப்பிட அமரும்போதே நல்லெண்ணம் நிரம்பிவிடுகிறது. பெண்கள்தாம் பரிமாறுகிறார்கள். டேபிளுக்கு அருகிலேயே ஒருவர் நின்று கண்காணிக்கிறார். இலை காலியானால் அவர்களாகவே கொண்டு வந்து வைக்கிறார்கள். 

சோறு முக்கியம் பாஸ்! - 43

மன்னா மெஸ்ஸில் மதிய அசைவச் சாப்பாடு, 90 ரூபாய். பொன்னியரிசி சாதம், கருவாட்டுத் தொக்கு, மட்டன் குழம்பு, நாட்டுக்கோழிக் குழம்பு, மீன் குழம்பு, சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், துவையல். மிக நிறைவாக இருக்கிறது. குறிப்பாக, மீன் குழம்பு. கானாங் கெளுத்தி மீன் போட்டு சரிக்குச் சரியாக மாங்காய் போட்டிருக்கிறார்கள். சீஸனுக்குத் தக்கவாறு மீன் மாறுமாம். புளி அதிகமில்லாமல் மாங்காய்ப் புளிப்பில் சொக்கவைக்கிறது குழம்பு. இஞ்சி-பூண்டு, சீரக-மிளகு மசாலாவை நன்கு அரைத்து விட்டு, நாட்டுக்கோழிக் குழம்பு வைத்திருக்கிறார்கள். எலும்பும் குழம்புமாக அள்ளி ஊற்றுகிறார்கள். சைவ சாப்பாடும் உண்டு. 70 ரூபாய்தான். அசைவக் குழம்புகள் தவிர்த்து மற்ற எல்லாம் தருவார்கள்.

தொடுகறிகள் மிகச்சிறப்பு. நாட்டுக்கோழி உப்புக்கறி, அதிக காரமில்லாமல் மிளகு தூவிப் பிரட்டித் தருகிறார்கள். சாதத்தில் போட்டுச் சாப்பிட நன்றாக இருக்கிறது. மட்டன் சுக்காவும் நன்று. மட்டன் கோலா, ஈரல் இரண்டையும் குழந்தைகள் விரும்புவார்கள். சுறா மீன் புட்டு, பல உணவகங்களில் சாப்பிடலாம். மன்னா மெஸ்ஸில் வஞ்சிரம் புட்டு தருகிறார்கள். அளவு சற்றுக் குறைவாக இருந்தாலும் சுவை அலாதியாக இருக்கிறது. கறிவேப்பிலை மசாலாவில் ஊறிய நண்டுப் பிரட்டலும் தேங்காய் எண்ணெயில் வறுத்த மீன் வறுவலும் அசத்தல்.

சோறு முக்கியம் பாஸ்! - 43



மன்னா மெஸ்ஸுக்கு வெள்ளிக்கிழமை செல்பவர்களுக்கு நெய்ச்சோறும் மட்டன் நிஹாரியும் கிடைக்கும். சீரகச் சம்பா அரிசியில் நெய் மணக்க மணக்க நெய்ச்சோறு... அற்புதமாக இருக்கிறது. `நிஹாரி’ என்பது மட்டன் வெள்ளைக் குருமா. தேங்காய்ப்பாலில் மட்டனை வேகவைத்துச் செய்கிறார்கள். பெரிய கிண்ணத்தில் இறைச்சித் துண்டுகளை நிறைத்துப் பரிமாறுகிறார்கள். இரண்டுக்கும் ஏகப்பொருத்தமாக இருக்கிறது. 200 ரூபாய். கூடவே மட்டன் சுக்காவும் இருந்தால் அந்த வேளை இனிய வேளை.

நெய்ச்சோற்றுக்கு மீன் குழம்பும் நல்ல இணை. நெய்ச்சோற்றுக்கென்று `ஸ்பெஷல் மீன் குழம்பு’  ஒன்று வைத்திருக்கிறார்கள். சீலா அல்லது வஞ்சிரம் மீன் போட்டுச் செய்வார்களாம். நிஹாரிக்குப் பதில் அதை வாங்கிக் கொள்ளலாம். தனியாக வாங்கினால் 120 ரூபாய்.

சோறு முக்கியம் பாஸ்! - 43

பார்க்கிங் பிரச்னையில்லை. இடம் சிறிதாக இருப்பதால் காத்திருந்து சாப்பிட வேண்டியிருக்கும்.

பொதுவாக, அசைவ உணவகங்களில் சாப்பிடும்போது ஒரு மெல்லிய பயம் எழும். அந்த பயம் இல்லாமல் ஒன்றிச் சாப்பிட முடிகிறது. ‘மன்னா மெஸ்’ என்ற பெயருக்குக் கீழேயே ‘அசைவத்தில் ஆரோக்கியம்’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள். சாப்பிடும்போது அதை உணரலாம்!

- பரிமாறுவோம்

வெ.நீலகண்டன் - படங்கள்: தே.அசோக்குமார்

சோறு முக்கியம் பாஸ்! - 43

மைதா பிரெட்...  கோதுமை பிரெட்... எது நல்லது?

“கோ
துமை பிரெட்தான் நல்லது. அதில்தான் நம் உடலின் அத்தியாவசியத் தேவையான நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. மைதா பிரெட்டில், கார்போ ஹைட்ரேட்ஸ் அளவு மிக அதிகமாக இருக்கும். கலோரியும் அதிகம். சீக்கிரமே செரிமானமாகி, உடலின் குளுக்கோஸ் அளவை அதிகரித்துவிடும். சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக மைதா பிரெட்டைத் தவிர்க்க வேண்டும். கோதுமை பிரெட்டில் இந்தப் பிரச்னை இல்லை. சர்க்கரை நோயாளிகள் தாராளமாகச் சாப்பிடலாம். பொதுவாக, தினமும் பிரெட் சாப்பிடுவது நல்லதல்ல. இதய நோயாளிகள், பிரெட் வகைகளை முழுவதுமாகத் தவிர்ப்பது நல்லது.

- அம்பிகா சேகர், ஊட்டச்சத்து நிபுணர்